தமிழக அரசு சென்னை புத்தகக் கண்காட்சியை சர்வதேச நிகழ்வாக நடத்த மாண்புமிகு தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்!

Share Button

சென்னை :-

கடந்த 3 ஆண்டுகளாகத்தான் தமிழக அரசு பபாசியின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ரூ.75 லட்சத்தை தனது பங்களிப்பாக வழங்குகிறது. இதுதவிர, வேறு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை.

சென்னையில் 700 அரங்குகளுக்கு மேல் அமைத்து, கண்காட்சி நடத்த போதுமான இட வசதி கிடையாது (சென்னை வர்த்தக மையம்கூட சிறியதுதான்). கூடுதலாக 100 அரங்குகளைக்கூட அமைக்கிறோம். இடம் தாருங்கள் என்கிறது பபாசி. அதற்கு தீர்வு எட்டப்படவில்லை.

தற்போதைய நிலையில் சென்னை ஐ.ஐ.டி போன்ற ஏக்கர் கணக்கில் விரிந்து பரந்துள்ள வளாகம்தான் 1000 அரங்குகளைத்தாங்கும் அளவுக்கு ஏற்றது. எனவே, ஐஐடி நிர்வாகத்திடம் பேசி, அதனைத்தமிழக அரசு ஏற்பாடு செய்யலாம்.

சுமார் 200 நூல்களையாவது பதிப்பித்த பதிப்பகங்களுக்குத்தான் அரங்கு என்பது பபாசியின் எழுதப்படாத விதி. அப்படி இருக்கும்போது, 1-5 எண்ணிக்கையில் நூல்களை வெளியிட்டுவிட்டு, அரங்கம் கேட்கும் அக்கிரமம் நடக்கிறது என்று குமுறுகிறது பதிப்புலகம்.

ஊடக அழுத்தம், அதிகார அழுத்தம் ஆகியவையும் அரங்குகளை ஒதுக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சமூக சீர்திருத்தத் தலைவரின் / ஒரு சமுதாயத்தைலைவரின் பெயரை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு அரங்கு கேட்டு அழுத்தம் கொடுப்பவர்களும் இருக்கிறார்களாம்.

இவ்வாண்டும் பபாசி, தனியாகத்தான் நிகழ்ச்சியை நடத்துகிறது. அரசின் நிதியுதவி உண்டு. சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி, இணை நிகழ்வாக, அரங்க வளாகத்தில் தனியாக நடக்கிறது. அதைத்தான் தமிழக அரசு நடத்துகிறது.

இவ்வளவு ஆண்டுகளாக சொந்த நிதியில்தான் பபாசி நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. சென்னையின் வருவாயைப் பிரித்துத்தான் மதுரை கண்காட்சியை ஏற்பாடு செய்கிறார்கள்.

நல்லது. இப்போது எனது கேள்விகள் :-

இவ்வளவு நாட்களாக நடந்ததை விடுங்கள். அரசு, பதிப்பகத்துறையும் வாசிப்புலகமும் பயன்பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் நிதி வழங்குகிறது என்றால், பொதுமக்களும் அந்நிகழ்வில் பங்குதாரர் ஆகிவிடுகின்றனர். அரசின் ஆதரவு பெற்ற ஒரு நிகழ்ச்சியை அலசவும் நல்லனவற்றை ஆதரிக்கவும் அல்லனவற்றை விமர்சிக்கவும் நம் அனைவருக்கும் உண்டு.

என் கணிப்பு சரியாக இருக்குமானால், கடந்த 3 ஆண்டுகளாக உறுப்பினர் சேர்க்கையும் இல்லை, உறுப்பினர் அல்லாத பதிப்பகங்களுக்கு அரங்கு ஒதுக்கீடும் கிடையாது. ஆன்மீக ஸ்டால்கள் தொடர்ச்சியாக இடம்பெறவே செய்கின்றன (அவர்கள் ஏற்கனவே உறுப்பினர்கள் என்கிறது பபாசி).

நீங்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருந்து, அல்லது கல்வி நிறுவனமாக இருந்து ’ஸ்பான்சர்’களாக மாறினால் மட்டும் அரங்கு கிடைக்க கூடுதல் வாய்ப்பு உண்டு. அதாவது, காசுக்கேற்ற பணியாரம். (இவ்வாண்டு அரங்க ஒதுக்கீடு கறாராக நடந்திருப்பதாக பதிப்பகத்தார் சிலர் சொல்கின்றனர்.

அண்மையில் அவர்களது அமைப்பில் 80க்கும் மேற்பட்ட பதிப்பகங்களுக்கு சிறப்புத்தகுதி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரங்கம் கொடுப்பது கட்டாயமாம். அதாவது 700+ அரங்கங்களும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், ஸ்பான்சர்களுக்கு மட்டுமே உரியன.

நீங்கள் உறுப்பினரல்லாத பதிப்பாளராக இருந்தாலோ, நூல் விற்பனையாளராக இருந்தாலோ, உங்களுக்கு இங்கு இடமில்லை என்பது ஏற்க இயலாதது. இதனைத்தவிர்க்க, அரங்கு ஒதுக்கீட்டுக்குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகளும் இடம் பெறவேண்டும். பதிப்பாளர் அல்லாத அரங்கங்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது. அதேபோல, ஒரே நிறுவனத்துக்கு / பதிப்பகத்துக்கு ஒன்றிரண்டு அரங்கங்களுக்கு மேல் அரங்குகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது.

பபாசி போன்ற மற்ற அமைப்புகளும் தமிழகத்தில் உள்ளன. அவற்றுக்கும் அரசின் ஆதரவைப்பெற தார்மீக, சட்டப்பூர்வமான உரிமை உண்டு.

தமிழகத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான சுய உதவிக்குழுக்களையும் அலசி, வாய்ப்புள்ளவர்களைப் பதிப்புத்துறையிலும் புத்தக விற்பனைத்துறையிலும் களமிறக்கலாம். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக இதைச்செய்ய முடியும்.

தமிழக அரசு, மாணவர்களுக்காக, ஆசிரியர்களுக்காக மாத இதழ்களைக் கொண்டுவருகிறது. தமிழரசு, முற்றம் போன்ற அரசு இதழ்களும் வருகின்றன. எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் இவற்றை உள்ளடக்கிய சிறப்பு அரங்கு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

மாவட்டம்தோறும் தமிழக அரசு புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறதல்லவா… அது நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேபோல, மாநில அளவிலான கண்காட்சியை சர்வதேச புத்தகக் கண்காட்சியாக அரசு செலவில் நடத்தலாம். இதற்கான அரங்கு ஒதுக்கீட்டை குலுக்கல் முறையிலோ (கேரள லாட்டரி துறை, இயங்குவதைப்போல…) ஒரு வல்லுநர் குழுவின் பரிசீலனையின்படியோ செய்யலாம். வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தலாம்.

அதேபோல, ஒரேயொரு நூலைக்கூட பதிப்பிக்காதவர்கள் ‘பதிப்பாளர்’ என்ற பெயரில் இடம்பெறுவதையும் மூடநம்பிக்கையை விற்பனை செய்வதையும் நாம் தடுத்துவிடமுடியும்.

எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் இதைக் கனிவுடன் பரிசீலித்து, இனிவரும் காலங்களில் மாநிலந்தழுவிய அரசு சென்னை புத்தகக் கண்காட்சியை சர்வதேச நிகழ்வாக நடத்த வேண்டுகிறேன்.

தனியார் புத்தகக்காட்சிகளுக்கு அரசு ஆதரவு தருமாயின், அதில் அரங்கு ஒதுக்கீடு, வரவு செலவுக்கணக்குகள் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு நிதி சம்பந்தப்பட்ட அனைத்து (புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட) நிகழ்வுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005ன் வரம்புக்குள் கொண்டுவருமாறும் தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்.

திறந்த மனதோடு இதனை எழுதுகிறேன். அதே திறந்த மனதோடு, சம்பந்தப்பட அனைத்து தரப்பும் தங்களை மறுபரிசீலனை செய்யும் என்று எப்போதும்போல எதிர்பார்க்கிறேன்.

புத்தகக் கண்காட்சியின் ரசிகனாக, வாசகனாக, 20 ஆண்டுகளாக பேனா பிடிக்கும் கையுடையோனாக நான் இதை எதிர்பார்க்கலாமில்லையா!

– கா.சு. துரையரசு –

 

 

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.