கேள்விக்கான வேள்வி
நாரதர் ஒருமுறை வைகுந்தம் சென்று நாராயணனை வணங்கி நின்றார். அவரைப் பார்த்து ”பிரபோ” பூவுலகில் சத்சங்கம் என்ற வார்த்தை அடிபடுகிறது. இதைத் தாங்கள் விளக்கமாகச் சொல்க’ என்றார்.
பகவான், ”நாரதா, சில வினாக்களுக்கு அனுபவரீதியில்தான் பதில் சொல்லவேண்டும். நீ பூவுலகில் பிரயாகைக்குச் செல், அட்சய வடம் நுனிவேர் அங்குதான் இருக்கிறது. நடுமரம் காசியிலும் கிளையின் உச்சி கயாவிலும் உள்ளது.
பிரயாகையில் உயர்ந்த மரத்தின்கீழ் சாணக்குவியல் இருக்கும். அங்கேயே காத்திரு, சற்று நேரத்தில் ஒரு புழு வரும், இந்தக் கேள்வியை அதனிடம் கேள்.’ என்றார். நாரதர், ”பகவானே, தாங்களே இதைச் சொல்லாமல் ஒரு கேவலமான புழு இதை எப்படிச் சொல்லமுடியும்’ என்றார்.
பகவானோ, ‘தாமதம் வேண்டாம், உன் கேள்வி அப்படிப்பட்டது. விரைந்துசெல்’ என்றார். நாரதரும் பூவுலகம் சென்று அந்தப் புழுவைச் சந்தித்தார். இந்தப் புழுவிற்கு என்ன தெரிவு’ என்று நினைத்தார். ஆனாலும் பகவான் உரைத்தவாறே, அதனிடம் புழுவே, சத்சங்கம் என்பது என்ன? என்றார். நாரதர் சொன்னவுடன் புழு துள்ளி விழுந்தது, புரண்டது, கடைசியாக ப்ராணனையும் விட்டது.
நாரதர் மிகவும் துக்கப்பட்டார், தன் கண் முன்னால் புழுவின் உயிர்போனது, இதற்கு நான்தானே காரணம் என நினைத்து, மீண்டும் நாராயணனிடம் சென்று விவரித்தார். பகவானோ, ‘கவலைப்படாதே நாரதா, மீண்டும் அங்கு செல், ஒரு வெள்ளைப் புறா அங்கு இருக்கும், அதனிடம் கேள்’ என்றார்.
நாரதரும் கலக்கத்துடனே சென்று வெண்புறாவைக் கண்டார். நாரதர் புறாவைப் பார்த்து "சத்சங்கம் என்றால் என்ன ?’ என்றார். இதைக் கேட்டவுடன் புறா இறெக்கையை அடித்துக்கொண்டு கீழே விழுந்து இறந்தது. நாரதருக்கு துக்கம் தாங்க முடியவில்லை, ஏற்கனவே ஒரு புழுவைக் கொன்றோம், இப்போது இந்த பாவமும் சேர்ந்துவிட்டதே என வருந்தி மீண்டும் நாராயணனிடம் சென்றார்.
நாராயணனோ, என்ன நாரதா, விடை கிடைத்ததா என்றார். நாரதரோ என்னால் இரெண்டு ஜீவன்களின் உயிர் பறிபோனது’ என விளக்கினார். பகவானோ, ‘என்ன செய்வது நாரதா, உன் கேள்வி அப்படிப்பட்டது, விடை சொல்வது எளிதல்ல. சரி, தற்போது மீண்டும் பூலோகம் செல், அதே மரத்தடியில் உள்ள புல்வெளியில் ஒரு பசுகன்று உள்ளது, அதனிடம் கேள்’ என்றார்.
நாரதர் மிகவும் தயக்கத்துடன் வேறு வழியின்றி மீண்டும் சென்று, கன்றிடம் தனது கேள்வியைக் கேட்டார்.
இதைக் கேட்டவுடன் கன்று ஒரு துள்ளு துள்ளியது, அடுத்த கணம் தரையில் விழுந்து உயிரைவிட்டது. பசு கதறியது. நாரதர் திடுக்கிட்டார், மிகுந்த வேதனையுடன் மீண்டும் நாராயணனைச் சந்தித்தார்.
‘வெற்றி உண்டாகட்டும்’ என நாராயணன் வாழ்த்தி வரவேற்றார். நாரதரோ, ‘உங்களுக்கு வேறொருவரும் கிடைக்கவில்லையா? ஒன்றல்ல, மூன்று உயிர்கள் என்னால் பலியாயின. இந்தக் கேள்வியில் அப்படியென்ன மர்மம்உள்ளது, தெரியவில்லையே என்றார்.
பகவான், ‘நாரதா உனக்கு உண்மை விளங்கும் நேரம் வந்துவிட்டது, வா பூலோகம் செல்லலாம்’ என்றார். நாரதரோ, ‘மீண்டுமா? என் கேள்விக்குப் பதிலே வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள்’ என்றார்.
பகவான், ‘நாரதா, ஒரு காரியத்தை ஆரம்பித்து முதலிலேயே கைவிடுவது அதமம், மத்தியில் விடுவது மத்திமம். எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் கடைசிவரையில் முயல்வது உத்தமம்’ எனச் சொல்ல, கேட்க நன்றாகத்தான் உள்ளது, இப்போது எங்கு செல்லவேண்டும்’ என்றார் நாரதர்.
கேள்வி கேட்டவன் நீ, வேறு கேள்விகள் கேட்டிருக்கக் கூடாதா? அதற்குள் அலுத்துக் கொள்கிறாயே என்று, இம்முறை காசி தேசத்துக்குச் செல், அங்கு, காசிராஜனுக்கோ இப்போதுதான் ஓர் குழந்தை பிறந்து, அதற்கு விழா எடுக்கிறார்கள், உனக்கு நல்ல வரவேற்பு இருக்கும், போய் ஆசீர்வாதம் செய்துவிட்டுவா’ என்றார் பகவான். நாரதர் தன்னை மிகவும் நொந்துகொண்டு கவலையுடன் காசிநகரம் சென்றார்.
காசிராஜன் நாரதரை வரவேற்று குழந்தையிடம் கூட்டிச்சென்றான். இவரைப் பார்த்ததும் குழந்தை கண்விழித்துப் பார்த்து சிரித்தது. நாரதர், விஷ்ணுவை ப்ரார்த்தித்திவிட்டு, குழந்தை, சத்சங்கம் என்றால் என்ன?" என்றார். குழந்தை கலகலவெனச் சிரித்தது.
முனிவரே, ‘நான்தான் பூலோகத்தில் புழுவாய் இருந்தேன், உம்முடைய சத்சங்கத்தால் என் இழிபிறவி நீங்கியது. பின் புறவாகவும், பசுவாகவும் பிறவி எடுத்தேன். திரும்பவும் சதாகாலமும் நாராயணனை நமஸ்கரிக்கும் தங்கள் சத்சங்கத்தால் நாடாளும் காசிராஜனின் மகனாகப் பிறந்துள்ளேன், முடிவில் முக்தியும் பெறுவேன்’ என்றது. கேள்வியுற்ற நாரதர், சத்சங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.
நாமும் சத்சங்கத்தின் பெருமையை உணர்ந்து நல்லருள் பெறுவோமாக… முக்தியையும் அடைவோமாக..
ஸ்ரீலஸ்ரீ ஷண்முகம் சுவாமிகள்
காஞ்சிபுரம்
Leave a Reply