இவரும் தற்கொலை மனநிலையில் இருக்கிறார் என்பது பார்த்தாலே தெரிகிறது!

சென்னை :-
திரு.கே.ராஜன் தமிழ் சினிமாவின் பல பிரச்சினைகளுக்கு துணிச்சலாக குரல் கொடுக்கக்கூடிய ஒரு தைரியமான மனிதராகத்தான் அறிந்திருக்கிறோம்.
அவர் தற்கொலை செய்துகொண்டது ஆச்சர்யமான செய்தி.
அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அஞ்சலி!
மீண்டும் மீண்டும் உணர வேண்டிய விஷயம்: பிரபலங்கள் இரும்பு இதயம் கொண்டவர்கள் அல்ல! அவர்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள், வலிகள், மன அழுத்தம் எல்லாமே உண்டு.

இதற்கு மற்றும் ஓர் உதாரணம்தான் திரு.ரவிமோகனின் உணர்ச்சிகள் கொந்தளித்த பேட்டி.
இவரும் தற்கொலை மனநிலையில் இருக்கிறார் என்பது பார்த்தாலே தெரிகிறது. ஒரு முயற்சியும் செய்திருப்பதை அவரே சொல்கிறார்.
அவர் சொன்னது எல்லாம் சரியா, அவர் பக்கம் நியாயமா இல்லை அவரின் மனைவி பக்கம் நியாயமா என்று சமூக வலைத்தளங்களில் எல்லோரும் நீதிபதிகளாகி விடுவது சகிக்கவில்லை.
இது கோர்ட்டில் இருக்கும் விவகாரம். யார் சரி என்பதை அங்குள்ள நீதிபதி பார்த்துக்கொள்வார்.
ஆனால்.. ஒரு நல்ல நடிகரை இந்தத் தற்கொலை மனநிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும் அக்கறையும்..
அவர் அன்பை எதிர்பார்க்கும் பெற்றோருக்குத் தேவை.
அவர் மீது ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலும் பெற்றோர் அவரை மன்னித்து ஏற்க வேண்டும். இப்போது அவர் இருக்கும் மனநிலையில் அவருக்குத் தேவைப்படுவது அன்பும், ஆறுதலும், அரவணைப்பும். அதை உரிமையுள்ள பெற்றோரும் சகோதரருமேத் தர இயலும்.
அதற்கு வாய்ப்பில்லை என்றால் நடிகர் சங்கம் ஒரு குழு அமைத்து அவரை மன நல வைத்தியத்திற்கு சம்மதிக்க வைத்து ஏற்பாடும் செய்ய வேண்டும்.
இப்போது பொறுப்பேற்று கவனிக்கத் தவறி பிறகு ஏதாவது விபரீதம் நிகழ்ந்த பிறகு வருத்தச் செய்தி வெளியிடுவதால் ஒரு பிரயோஜனமுமில்லை.
ஜெயம் படத்திலேயே மகத்தான வெற்றியுடன் அறிமுகமாகி குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன், மிருதன், வனமகன், டிக்டிக்டிக், கோமாளி, பொன்னியின் செல்வன், பராசக்தி என்று படத்திற்குப் படம் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து நம்மை மகிழ்வித்தவர் அவர்.
இப்போது குடும்பப் பிரச்சினையில் மிகவும் உடைந்து போயிருக்கும் நிலையில் அவர் மனநலம் கூடி, பிரச்சினைகளைச் சந்தித்து மீண்டு இதிலிருந்து விரைவில் வெளியே வர வேண்டும் என்று பிரார்த்திப்பதுதான் நியாயம்.
எல்லாவற்றையும் யூ டியூப் கண்ட்டெண்ட்டாகப் பார்ப்பது மனிதநேயமற்ற கீழ்த்தரமான சிந்தனை. எருதின் புண்ணைக் கொத்தும் காக்கையின் மனநிலை அது.
– பட்டுக்கோட்டை பிரபாகர்












Leave a Reply