தாமஸ் ஆல்வா எடிசன் அவருடைய நினைவு நாள்!

Share Button

இன்று இரவு விளக்குகளை அணைப்போம்…

தாமஸ் ஆல்வா எடிசன் அவருடைய நினைவு நாள்…

தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் ஒஹயோ மாநிலத்தில் மிலான் என்கிற நகரத்தில் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி இன்று பிறந்தார்.

அவருடைய தந்தையார் பெயர் சாமுவேல் எடிசன் தாயார் பெயர் நான்சி. தனது எட்டாம் வயதில் கல்வி கற்கப் பள்ளிக்கூடம் சென்ற தாமஸ் ஆல்வாஎடிசன் ஒரு சில மாதங்களிலேயே படிப்பதற்கு இலாயக்கில்லையென்று திருப்பி அனுப்பப் படுகிறார்.

தன் மகன் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது என்று தாயார் வீட்டிலிருந்தே மகனுக்குக் கல்வியறிவு புகட்டுகிறார். கூடவே ஊக்கமளிக்கக் கூடிய வகையில் அறிவுரைகள் வழங்கினார்.

உதாரணமாக, ‘எதற்கும் அச்சப்படாதே, தொடர்ந்து முயற்சி செய். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள், கற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்ளாதே; தொடர்ந்து உன்னை மேம்படுத்திக் கொள்’.

இப்படிப்பட்ட மேன்மையான கருத்துகளால் பள்ளிக்கூடம் காணாத அச்சிறுவன் மனிதக்குலம் காணாத அறிவியல் மேதையானார்.

1859 ஆம் ஆண்டு தனது பன்னிரண்டாவது வயதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இரயிலில் செய்தித்தாள்கள் காய்கறிகள் பழங்கள் என விற்கிறார் கிடைத்த சிறிய லாபத்தில் அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் இதழ்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்குச் செலவிட்டார்.

1859இல் இரயிலில் பத்திரிக்கை அச்சடித்து பயணிகளுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பொன்று கிடைத்தபோது அதனையேற்று கடைசி பெட்டியில் அச்சு இயந்திரம் ஒன்றை நிறுவி தினம் சுடச்சுடச் செய்திகளைச் செய்தித்தாளை அச்சடித்து பயணிகளுக்கு வழங்கினார்.

இதன் மூலம் அவருக்குக் கணிசமான வருவாய் கிடைத்தது ‌. அதே பெட்டியில் இன்னொரு புறத்தில் இரசாயன பரிசோதனைகள் செய்வதற்காக ஆராய்ச்சி கூடம் ஒன்றை நிறுவினார்.

பத்திரிகை வேலைகள் இல்லாத சமயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரு முறை வேதிப்பொருளொன்று சிந்தியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த ரயில் பெட்டி தீப்பிடித்தது.

ரயிலின் நடத்துநர் கோபப்பட்டு எடிசனை அறைந்து விடுகிறார் இதனால் அவருக்குக் காது கேட்கும் திறன் குறைகிறது. (சிறுவயதில் ஏற்பட்ட நோயினால் காதுகள் பழுதடைந்தடைந்தன என்ற இன்னொரு செய்தியும் உண்டு). இந்த பின்னடைவால் எடிசன் சற்றும் மனம் தரவில்லை.

ஒரு முறை ரயிலில் அடிபட இருந்த மூன்று வயதுக் குழந்தை ஒன்றைத் தாவிக் குதித்து மயிரிழையில் காப்பாற்றுகிறார்.

அக்குழந்தையின் தந்தை எடிசனுக்கு வாய் வார்த்தைகளால் மட்டும் நன்றி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பொழுது புழக்கத்திலிருந்த தந்தி இயந்திரத்தை, மோர்ஸ் குறியீடு மூலம் இயக்குவது எப்படி என்று விளக்கிச் சொல்லித் தருகிறார்.

வார்த்தைகள் டாட் (புள்ளி), டேஷ்(கோடு) என்கிற ஒலி சத்தங்களாக, உருவாக்கப்பட்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒலிபரப்பப்பட்டது. இதனை கற்றதனால் தந்தி அலுவலகமொன்றில் வேலை கிடைக்கிறது.

தந்தி இயந்திரத்தின் செயல்பாட்டினை எப்படி செம்மைப் படுத்துவது என ஆராய்ந்தார். இதில் வெற்றியும் காண்கிறார். இவர் படைத்த புதிய எந்திரத்தின் காரணமாக இவருக்கு பெரும் பணம் சுமார் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கிடைக்கிறது.

தந்தி அலுவலகத்தில் வேலையை விட்டுவிட்டு இப்பொழுது முழு நேர அறிவியல் கண்டுபிடிப்பாளராக மாறிவிடுகிறார்.

உலகில் எத்தனையோ அறிவியலாளர்கள் பல கண்டுபிடிப்புகளை இம்மானிட சமுதாயத்திற்குத் தந்திருந்தாலும் இவர்களில் முதன்மையானவராக விளங்குபவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

காரணம் இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி அதற்குக் காப்புரிமையும் பெற்றவர். அறிஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் செல்வத்தை ஈட்டித்தரும் என்கின்ற வியாபார தன்மையை முதன்முதலாக உணர்த்தியவர் எடிசன்‌.

கண்டுபிடிப்புகள் பரவலாக்கப்படும் வேண்டும் என்கின்ற நோக்கில், முதல் ஆராய்ச்சி சாலையை நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க் நகரில் 1870ல் நிறுவுகிறார்‌.

அவர் கண்டுபிடிப்புகள் ஏராளமாக இருந்தாலும் கூட இன்றைக்கும் நாம் பெருமளவில் பயன்படுத்துகின்ற ஒலி ஒளி சாதனங்களுக்கு எல்லாம் அவர்தான் தந்தை.

ஒலியைப் பதிவு செய்து மீண்டும் ஒலிக்கச் செய்யும் போனோகிராஃப் என்கிற ஒளி வரைவியை கண்டுபிடித்தவர்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தாலும் அதனைக் கொண்டு ஒளியூட்டக்கூடிய வழிமுறைகளுக்கு அறிவியல் உலகம் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் எடிசனின் பங்கு ஈடு இணையற்றது.

தான் வசித்து வந்த நியூயார்க் நகரில் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது அவருடைய ஆசை ஆனால் அந்த ஆசை எளிதில் நிறைவேறும் என்று மற்ற விஞ்ஞானிகள் நம்பவில்லை‌.

ஒளிரக்கூடிய பல்புகளை கண்டுபிடித்தவர். வெற்றிட கண்ணாடி குமிழிக்குள் ஒளிரும் தன்மைகள் கூடிய இழைகள் வழியாக மின்சாரம் செலுத்தப்படும் போது வெளிச்சம் கிடைக்கிறது.

அதற்கு முன்பே இதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாகப் பலர் ஈடுபட்டிருந்தாலும்கூட நீண்டநேரம் எரியக்கூடிய குறைந்த விலையில் தயாரிக்கும் வகையில் கார்பன் மயமாக்கப்பட்ட மூங்கில் இழைகளைப் பயன்படுத்தி உலகிற்கு ஒளி காட்டினார் எடிசன். நியூயார்க் உலகிலேயே மின் மயமாக்கப்பட்ட முதல் நகரமானது.

மின்சாரத்தைச் சேமிக்கக்கூடிய மின்சக்தி சேமிப்புக் கலங்களைக் கண்டுபிடித்த பெருமையும் அவருக்கு உண்டு. இன்றைய உலகம் ஒலி ஒளி இவற்றில் மூழ்கி இருக்கிறது.

இதற்கு வித்திட்டவர் தாமஸ் ஆல்வா எடிசன்‌ முதல் முதலாக நகரும் படத்தை (திரைப்படத்தை) உருவாக்கும் கினெட்டாஸ்கோப் கருவியைக் கண்டுபிடித்தவர் எடிசன்.

எடிசன் அவர்களை அறிவியல் கண்டுபிடிப்புகளின் தலைவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

தன்னுடைய 84 ஆம் வயதில் 1931 அக்டோபர் 18ஆம் தேதி நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார்.

அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 21 ஆம் தேதி மாலை அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின் விளக்குகளை நிறுத்தும்படி ஆணையிட்டார்.

அந்த ஒரு நிமிடம் நாட்டில் உள்ளோர் அனைவரும் எடிசனையும் அவரது கண்டுபிடிப்புகளையும் அமைதியாய் நினைவு கூர்ந்தனர்.

இன்று அவருடைய நினைவு நாள்.

இன்று மாலை வீட்டில் ஒளியேற்றும் போது அவரை நினைத்துக் கொள்வோம். முடிந்தால் விளக்குகளை ஒரு சில நிமிடங்கள் அணைத்து அறிவியலின் மகத்துவத்தை உணர்வோம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *