வேளாண்துறையில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பங்கு!

Share Button

வேளாண்துறையில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பங்கு!

இந்தப் பூமிப் பந்தின் பரிணாம வளர்ச்சியில், விலங்குகளினிடையே தானுமொரு விலங்காய் மண்பார்த்து வாழ்ந்த மனிதக் கூட்டம் தனக்கென ஒரு பாதை வகுத்து வளர்ந்ததில் மண்பார்த்து நடந்து அடைந்த புரிதல்களும், விண் பார்த்து வியந்த தேடல்களும் முக்கியமான காரணங்களாயின என்பது மானுட வாழ்வின் வரலாறு.

விவசாயி ஒரு விஞ்ஞானி :

உலகின் முதல் விஞ்ஞானி விவசாயிதான். விஞ்ஞானக் கூடம் அவனுடைய வேளாண் நிலம். மண்ணில் பயிர்செய்து, இன்று வரை பலப் பல தலைமுறைகளாக நாம் உயிர் வாழவும் உடல் வளர்த்தவும் தேவையான உணவைக் கொடுத்துவரும் மகோன்னதத் தொழில் விவசாயம்.

விவசாயிகளின் பல ஆயிரம் ஆண்டுகளின் வியர்வை சிந்திய உடல் உழைப்பும், அறிவுசார் புரிதல்களும் விவசாயத்தில் அவ்வப்போது புது இரத்தம் பாய்ச்சின.

அந்த நீண்ட நெடிய வரலாற்றைச் சுருங்கச் சொன்னால், மண்ணின் ஈரத்தன்மை, மண்ணின் தரம், மண்ணக்கேற்ற பயிர்களின் விதை, பயிர்களை வளர்த்தும் முறை, பயிர்களின் ஆரோக்கியம் பற்றிய புரிதல்கள், நீர், உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் தேவை, மழை, காற்று, புயல் போன்ற இயற்கை நிகழ்வுகளைப் பற்றிய முன்கூட்டிய செய்தி, அறுவடைக்குப் பின் சந்தை நிலவரம், அடுத்த பருவத்திற்கு நிலத்தைத் தயார்படுத்துவது என்று பலப் பல அங்கங்களை முறையாய்ச் செய்யும் முனைப்புகள் விவசாயத்தை வேளாண்மை என்ற கட்டத்திற்கு இன்று எடுத்து வந்து, விவசாய விளை பொருள் உற்பத்தியில் இந்தியாவை உலக அளவில் இரண்டாவது இடத்தில் வைத்துள்ளது.

சவால்கள் :

ஆனால், பெருகி வரும் மக்கள் தொகை, அறுகி வரும் நீராதாரம், சுருங்கி வரும் வேளாண் நிலம், மாறி வரும் பருவ நிலை, குறைந்து வரும் வேளாண் உழைப்பாளிகள், என்ற பல் முனைத்தாக்குதல்களால் எதிர்காலத்தில் வேளாண்மை எப்படியிருக்கும் என்ற கேள்விக்குறியும் மெதுவாகத் தலை தூக்கியுள்ளது.

அது விசுபரூபம் எடுக்கும் முன் நாம் விழித்துக் கொள்வது மிக மிக அவசியம் என்பதை தற்போதைய கொரானா மற்றும் பல சர்வதேச நிகழ்வுகள் நமக்குப் பறைசாற்றுகின்றன.

விண்வெளி – வேளாண்மை :

அதேசமயம், மண்ணிலிருந்து விண்பார்த்து வளர்ந்த பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கியமான மைல்கல் 4 அக்டோபர், 1957.

தனது மூதாதையர்கள் பார்த்து வியந்து, பயந்து, வணங்கி, வாழ்ந்த விண் கோள்களைப் போல் தானும் ஒரு செயற்கைக் கோளை உருவாக்கி விண்ணில் வலம் வரச் செய்ய முடியும் என்று நிரூபித்த நாள்தான் அது.

அந்நாளைய ருசியாவின் அந்தச் சாதனைக்கான உந்துதல், அதன் பின் அமெரிக்காவும் ருசியாவும் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட ஒரு பனிப்போருக்கான சூழ்நிலையில் தங்கள் நாட்டினரை விண்வெளிக்கும், நிலவுக்கும் பத்திரமாக அனுப்புவதில் எடுத்துக் கொண்ட அயராத முயற்சிகள் யாவும் மனித வரலாற்றில் பதிக்கப் படவேண்டியவை.

இந்தச் சூழலில், இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பயணங்கள் மனித குல நலனுக்காக முன்னெடுக்கப் பட்டவை. கடந்த அறுபது ஆண்டுகால விண்வெளி ஆராய்ச்சியின் பயனாய் இந்தியா அந்தத் துறையில் உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாய் இன்று திகழ்கிறது.

இந்தியாவின் இன்றைய முன்னேற்றத்திற்கு அறிவியல் தொழில் நுட்பம் முக்கியக் காரணம். அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒருவகையில் இந்தியாவின் விண்வெளி முயற்சிகள் காரணமாகவும் உந்துதலாகவும் இருக்கின்றன.

விண்ணில் பயணிக்கும் செயற்கைக் கோள்களைக் கொண்டு வேளாண்துறைக்குத் தேவையான மண்ணின் தன்மை, மண்ணின் மற்றும் காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை, பயிர்களின் ஆரோக்கியம், நீர், உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் தேவை, மழை, காற்று, புயல் போன்ற இயற்கை நிகழ்வுகளைப் பற்றிய முன்கூட்டிய செய்தி , அறுவடைக்குப் பின் சந்தை நிலவரம், அடுத்த பருவத்திற்கு நிலத்தைத் தயார்படுத்துவது போன்று அனைத்துத் தரவுகளையும் பெறச் செயற்கைக் கோள்கள் உதவுகின்றன.

ஆனால் தரவுகளைத் தாண்டி வேறு எந்தப் பணியையும் செயற்கைக் கோள்களால் வயல்களில் இறங்கிச் செய்ய இயலாது.

ஆனால், செயற்கைக் கோள்களின் அடுத்த பரிணாமமாய் தற்போது உருவாகி வரும் “ட்ரோன்” எனப்படும் ஆளில்லா வானூர்திகள் செயற்கைக் கோள்களை மண்ணுக்கு அருகில் கொண்டு வரும் மாயத்தைச் செய்ய ஆரம்பித்துள்ளன.

அதனால் மேற்சொன்ன செயற்கைக் கோள்கள் வழியே பெறப்படும் தரவுகளின் துல்லியத்தை அதிகப் படுத்தவும், பல வேளாண் பணிகளைச் தானியங்கி முறையில் செய்யவும் இயலும்.

ஒருங்கிணைந்த நவீன கூட்டு விவசாயமுறைகள்

அதுவும் முக்கியமாக, இந்தியாவின் இன்றைய விண்வெளி அறிவியல் தொழில் நுட்பமும், ஆளில்லா வானூர்தி தொழிநுட்பமும் அறிவியல் முறையில் நல்ல உயரத்தில் இருக்கும் இந்திய வேளாண்துறையும் துறைகள் சார்ந்த அறிவியலாளர்களும் முறையாக இணையும் பொழுது நமது மண்ணுக்கே உரிய விவசாயமும், விவசாயியும், விவசாயம் சார்ந்த மனிதர்களும், தொழில்களும் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

அதனுடன் இளைய தலைமுறையினரை மருத்துவம், கணினி, விண்வெளி போன்ற துறைகளுக்கு ஈர்ப்பது போல வேளாண்துறைக்கும் ஈர்க்க முடியும்.

நமது மண்ணுக்குத் தேவையான மேற்கண்ட நவீன அறிவியல் தொழில் நுட்பத்தைக் கொண்டு, தரிசு நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்றி, விளை நிலங்களின் பரப்பைக் கூட்டி, நிலம் உழுது, விதை விதைப்பதிலிருந்து, சொட்டு நீர்ப் பாசனம், நீர் மேலாண்மை, பூச்சிக் கொல்லி, மற்றும் இயற்கை உரம் தெளிப்பான் என்று, விளை பொருளை அறுவடை செய்து சந்தைப் பொருளாக்கும் வரை முழுதாக விவசாயத்தில் புதுஇரத்தம் பாய்ச்சத் தேவையான முறைகளையும் , இயந்திரங்களையும் உருவாக்கும் அறிவியல் தொழில் நுட்ப வல்லுனர்களாகவும், தொழில் முனைபவர்களாகவும், வேளாண் இயந்திரங்களை உபயோகிக்கும் இளம் வேளாண் விவசாயிகளாகவும் நமது இளைஞர்கள் உருவாகி நமது வாழ்க்கைத் தரத்தை சமுதாயத்தில் உயர்த்திக் காட்டும் நிலையை உருவாக்கும் பொழுது, நகரம் நோக்கி நகரவோ வேறு நாடு நோக்கிச் செல்லவோ கிராமத்து இளைஞர்களுக்கு அவசியம் இருக்காது.

இந்தத் திசையில் அரசு பல பணிகளைச் செய்துள்ளது. சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழக ஆளில்லா வானூர்திக் கழகம் (Tamilnadu Drone Corporation) அதில் ஒன்று. விவசாயி வயலில் இறங்கி பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணிக்கு இப்போது ஆட்கள் அதிகம் இல்லை.

ஆனால் அதே பணியை சிக்கனமாகவும் சிறப்பாகவும், வயலுக்கு மேல் பறந்த படி, ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் செய்வதற்கு இப்போது வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்த ஒரு செயலில் மட்டும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு சிறப்பான பணிகளுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த ட்ரோன்களை ஆளில்லா விமானங்களை உருவாக்கும் பாகங்களிலிருந்து, இஞ்சின், பேட்டரி மின்கலன், ப்ராசஸ்சர், தெளிப்பான்கள் எனப் பலதும் பலவற்றையும் செய்ய வேண்டும்.

அவற்றை இணைத்துப் பல ஆயிரம் ட்ரோன்களைத் ஆளில்லா விமானங்களைத் தயாரிக்க வேண்டும். அதை முறையாக இயக்க பயிற்சி பெற்ற பல ஆயிரம் ட்ரோன் பைலட்டுகள் விமானிகள் தேவைப்படுவார்கள்.

அவை விமானங்கள் பழுதுபட்டால் சரி செய்ய உபரி பாகங்களும் பயிற்சி பெற்ற டெக்னீஸியங்களும் தொழில் நுட்பப்பணியாளர்களும் தேவை. இவற்றிற்கு அரசு உதவி செய்தாலும் சிறு குறு முதலாளிகளாக நமது இளைஞர்கள் ஆங்காங்கே உயிர்ப் பெறலாம்.

உதாரணத்திற்கு, வேலை வாய்ப்பும், வருமானமும் கொடுக்கும்படியாக, ஒவ்வொரு தாலுக்காவிற்கும் ஒன்றிரண்டு சிறு குறு தொழிற்கூடங்களைத் தேவைக்கேற்ப உருவாக்கலாம்.

இதுமாதிரி, வேளாண் நிலத்தில் ஏர் உழுது அறுவடை செய்து சந்தைக்குச் சேர்க்கும் வரையான ஏராளமான நவீன வேளாண் வாய்ப்புகள் நம் முன்னே உள்ளன.

தேவை மண் மருத்தவமனைகள் :

மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உடல் நலன் காக்க மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருப்பது போல் வேளாண்துறைக்கும் மண், பயிர் மற்றும் விவசாயத்தின் அனைத்து அங்கங்களின் ஒருங்கிணைந்த நலன் மற்றும் வளர்ச்சிக்கான புத்தாக்க மருத்துவத்துறை கட்டமைப்பு ஒன்றைக் கண்டறியலாம் உருவாக்கலாம்.

2009ம் ஆண்டுக்கு முன், அதாவது இந்தியாவின் நிலவுப் பயணமான சந்திரயானின் வெற்றிக்கு முன், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணியில் சேரப் பலரும் தயங்கினார்கள்.

இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகப் பணியில் சேர ஏராளமான போட்டி நிலவுகிறது.

இந்திய விண்வெளித்துறையில் நடந்த அந்த மாற்றம் போல் இந்திய வேளாண் துறையிலும் கொண்டு வர வேண்டும் என்பது நமது இலக்காக இருக்கட்டும்.

அதற்கான திசையில் பயணிக்க, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவும் எஸ் ஆர் எம் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “சென்னை அக்ரி எக்ஸ்போ 2022” ஊக்குவித்து உதவட்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

முனைவர் மயில்சாமி அண்ணாதுரை
முன்னாள் இயக்குனர்,
இந்திய செயற்கைக்கோள் மையம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *