கல்வி உயர : (பாகம்-8) பன்மொழி அறிவு! – மொழியை குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொள்கின்றனர்!?
மொழி :-
பல மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா. பல மொழிக்குடும்பங்களும் இங்கு உள்ளன. ( உ.ம். இந்தோ ஆரியம், திராவிடம்,…) தமிழ் , சமஸ்கிருதம் போன்ற செம்மொழிகள் கொண்ட நாடு, நம் நாடு.
இந்தியாவில் மும்மொழித்திட்டம் அமுலில் உள்ளது. தமிழ்நாட்டில் இருமொழித்திட்டம் உள்ளது. இதனால், குழந்தைகள் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு சந்தர்பங்களைப் பெறுகின்றனர். மும்மொழித்திட்டத்தை ஆதரிப்பவர்கள் ,” பன்மொழிக் கலாசரசாரத்தை வளர்த்து தேச ஒற்றுமையைப் பேணுகிறது” என்பார்கள். சரி.
மொழியை குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொள்கின்றனர்?
குழந்தை இயற்கையாகத் தன் வீட்டிலும், சுற்றிலும், சமூகத்தில் பேசப்படும் மொழியையே கற்றுக் கொள்கிறது. சதாரணமாக வீட்டில், உறவினர்களிடம், தெருவில் பயன்படுத்தப்படும் மொழியையே பேசுகிறது. இதையே நாம் தாய் மொழி என்கிறோம்.
உண்மையில் குழந்தைகள் பிறக்கும்போதே மொழி உள்ளுணர்வுடன் பிறக்கிறது. நடைமுறை வாழ்வில் , குழந்தைகள் பள்ளிக்கு போகும் முன்பாகவே மிகச்சிக்கலான இலக்கணம் கொண்ட மொழியைக்கூட கற்றுக் கொண்டு பேசும் திறமையைப் பெற்றுள்ளனர்.
கொரோனா பொருளாதாரச் சிக்கல் காரணமாக தலைநகர் டெல்லியில் இருந்து சொந்த ஊரான மதுரைக்கு வந்த குழந்தைகள் முறையே ஒன்று, , இரண்டாம் வகுப்புகளில் சேர்ந்தனர். இரண்டு குழந்தைகளும் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் பேசினார்கள்.
மூன்று மாதங்களில் மூத்தக்குழந்தை தமிழில் பேச ஆரம்பித்தாள். ஒன்றாம் வகுப்புக் குழந்தைக்குத் தமிழில் பேச வரவில்லை. ஏதாவது எனில் என்னைத்தேடி வருவாள். ஆனால், ஆண்டு முடிவில் பேசுவதை நன்றாக புரிந்து கொள்வதுடன், வாய் திறந்துப் பேசத் தொடங்கினாள்.
ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் பிரேமலதா அவர்கள் அந்தக் குழந்தை மொழியின் காரணமாகப் பின்தங்கிவிடாமல் பார்த்துக் கொண்டார். மேலும், அக் குழந்தைக்குப், பாதுகாப்பு உணர்வை அளித்து, கற்பனையை வளர்த்தெடுத்துக் கற்றுக் கொடுத்தார்.
அதன்காரணமாக குழந்தை தமிழையும் சரளமாக பேசியது. பன்மொழி பேசுதல் என்பது ஒரு குழந்தையின் அடையாளம் ஆகும்.
இப்படி தான், சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று மொழிகளில்கூட பேசும் திறன் பெற்று விடுகின்றனர். மேலும், அம்மொழிகளைச் சரியாகவும் பொருத்தமாகவும் பேசுகின்றனர்.
பேசும் திறனடைய இயலாத குழந்தைகள்கூட சிக்கலான சமிக்ஞைகள் உதவியுடன் பிறருடன் தொடர்பு கொள்கின்றனர். தம் உணர்ச்சிகளை சமிக்ஞைகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.
மொழியின் தேவை?
அறிவு மொழி மூலமாக கட்டமைக்கப்படுகிறது. குழந்தையிடம் ஆசிரியர் உரையாடுவதற்கும், பிற குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பேச வைப்பதற்கும் மொழி உதவுகிறது.
அக்குழந்தைத் தானாக உருவாக்கிய அடையாளங்கள், நினைவுகள் அனைத்தையும் சேர்த்து வைக்க மொழி உதவுகிறது. மொழி ஒருவருடைய எண்ணத்தை அடையாளப்படுத்துகிறது.
ஒரு குழந்தைக்குத் தாய்மொழியை மறுப்பதோ, அழிப்பதோ அக்குழந்தையின் சுயத்தை, அடையாளத்தை அழிப்பதாகும். அதனால்தான் சுயத்தை , அடையாளத்தை அழிக்க முயலும் இந்தி திணிப்பை தமிழர்கள் எதிர்க்கிறார்கள்.
மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்த மறுக்கின்றனர். பன்மொழி அறிவு , ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் ,சமூக சகிப்புத் தன்மைக்கும் ,வித்தியாசமான கண்ணோடத்திற்கும், பள்ளித்திறமைகளை அடைவதற்கு உதவும். மொழி ஒரு வளம்.
மொழிகளை நன்றாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தும்போது குழந்தைகளால் தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் – எண்ணங்களுடன் எளிதாகத் தொடர்புகொள்ள முடிவதுடன் உலகத்தோடு ஒட்டி வாழ முடியும்.
அதனால்தான், துவக்கப்பள்ளி அளவிலாவது தாய்மொழி வழிக் கல்வியை கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை இன்னும் தொடர்ந்து நடத்த வேண்டுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத் தர வேண்டுமா? எந்த மொழி?
குழந்தைகளின் பேச்சு மொழியறிவைக் கவனத்தில் கொண்டு கற்றத்தருவதே சிறந்தது. ஏனெனில், மொழி அறிவு அன்றாட வாழ்க்கை உரையாடல்கள் மூலமாகவே உருப்பெறுகிறது.
அதனால், ஏற்கனவே உள்ள மொழி அறிவை கொண்டு கற்றல் கற்பித்தல் நடைபெற வேண்டும்.
தாய் மொழியில் போதிக்க வேண்டிய அவசியம்?
தன்னுனர்வோடு கலந்துள்ள மொழியறிவை வீட்டிலும் சுற்றிலும் பேசுவதால் குழந்தைகள் நல்ல மொழித் திறமையுடன் தகவல் பரிமாறும் ஆற்றல் பெற்றுள்ளனர். ஆகவேதான், குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது மொழியில் புலமை, உச்சரிப்புத் திறன், வாக்கிய அமைப்பு, மொழியை பொருத்தமான தொனியில் பேசும் திறமையும் பெற்று திகழ்கின்றனர்.
தாய் மொழி போதனா முறையே இப்படிப்பட்ட மொழித் திறமைகளைப் படிப்படியாக ஒருங்கிணைத்து வளர்க்க உதவும். தாய் மொழிக் கல்வி போதனையால் நல்ல தகவல் தொடர்பு திறமைகளையும், தீவிரமான ஆழ்ந்த சிந்தனைத் திறனும் பெற முடியும்.
அடிப்படை தாய் மொழி அறிவுடன் குழந்தைகள் பள்ளிக்கு வந்தாலும், அது ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு உதவும்,; போதுமானதாக இருக்கும். மொழி கற்பித்தல் என்பது அந்த மொழி வகுப்பறையுடன் நின்று விடுவதில்லை. அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உட்பட அனைத்தும் ஒரு மொழி போதனைதான்.
கதைகள், செய்யுள்கள், பாடல்கள் , நாடகங்கள் குழந்தைகளின் கலாச்சாரங்களை இணைக்கின்றன. குழந்தைகள் கட்டுரை எழுதுதல் போன்ற திறமைகளை வளர்த்தைடுக்க முறையான மொழி அறிவை கற்றுத்தர வேண்டும்.
இந்த உயர்ந்தபட்ச மொழி அறிவு, இன்னொரு மொழியைக் கற்க உதவும். ஆகவே, தாய்மொழிக் கல்வியே பன்மொழித் திறன் பெற உதவும்.
சென்ற மாதம் தொடக்கத்தில், ஹிந்தி மட்டுமே பேசும், ஆனால் தமிழில் பேசினால் அரைகுறையாகப் புரிந்து கொள்ளக்கூடிய அந்தக் குழந்தைகளின் அம்மா முதல் வகுப்பில் ஆசிரியருடன் வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.
எனது வகுப்பில் பாடம் நடத்தியபடி இருவர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பெண்மணி பேசுவது ஆசிரியருக்கு புரியவில்லை. ஆசிரியர் புரியாமல் பேசுவதை உணர்ந்த அவர் பல வழிகளில் முயன்று கூற விளைந்தார். அவர் ஹிந்தியை முறையாக பள்ளியில் கற்கவில்லை.
ஆகவே, எளிய ஹிந்தியில் கூற முடியவில்லை. போராடிப்பார்த்த ஆசிரியர் என்னிடம் அழைத்து வந்தார்.
அதாவது, ஞாயிறு காலை இரு குழந்தைகளை வண்டியில் அழைத்துக் கொண்டு செல்லும் போது அவரது தந்தையுடன் குழந்தைகளும் கீழே விழுந்து விட்டனர். முதல்வகுப்பு குழந்தைக்கு சிராய்ப்பு என்பதால் பள்ளிக்கு நாளை வரும்.
மூத்த குழந்தை இன்று பள்ளிக்கு வந்துள்ளார். அவரது தந்தைக்கு தலையில் பலத்த காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். குடும்பத்தை கவனித்தது அவரே. இப்போது மருத்துவமனையில் உள்ளதால் உதவ முடியுமா?
கொரோனா காலத்தில் அரிசி , பருப்பு தந்து உதவியதுபோல் உதவுங்கள். முடிந்தால் ஆயிரம் ரூபாய் பண உதவி செய்யுங்கள் என்பதுவே அவரது கோரிக்கை.
அதன்பின் அவருக்கு உதவி செய்தது தனிக்கதை என்றாலும், அடிப்படை தாய் மொழியில் படிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளாத அந்த தாயால் இரண்டாவது மொழியை கற்கும் திறன் பெற முடியவில்லை.
அதேசமயம், அவரது இரண்டாவது குழந்தை அடிப்படை ஹிந்தி அறிவை முறையாக பெற்றதால், தமிழ் மொழியில் பேசும் திறன் பெற்றுவிட்டார்.
ஆக, ஆரம்ப நிலையிலேயே பன்மொழி அறிவைப்புகுத்துவது என்பது குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் புலமை பெறவுதவுவதுடன் , தெளிவாக மொழியை புரிந்து கொள்ளவும் உதவிடும்.
மொழி திணிப்பு இல்லையெனில், நம் குழந்தைகளும் ஆரம்ப வகுப்புகளில் பன்மொழி பேசும் வாய்ப்பைப் பெறுவர். ஹிந்தி தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாதது குறித்து மற்றொரு கட்டுரையில் விரிவாகப் பேசுவோம். மும்மொழி திட்டம் நம் குழந்தைகளுக்கு தேவை.
விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் திறமைகள், தனிப்பட்ட முறையில் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் திறமைகள், பேச்சு வார்த்தையில் பேரம் பேசுதல், எதிர்வாதிடும் திறமை, முடிவெடுத்தல் திறமை, பிரச்சனையை தீர்த்திடும் திறமை, சூழ்நிலைக்கு ஏற்ப சமாளிக்கும் திறமை மற்றும் மேலாண்மைத் திறமைகள் என்ற அனைத்துவிதமான நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற திறமைகளையும் கல்வி வளர்க்க வேண்டும்.
அதற்கு தாய்மொழிக் கல்வி ஆரம்பக் கல்வியில் கொடுக்கப்பட வேண்டும். மேலும், இத்திறன் மேல்நிலைக்கல்வி வரைஙதொடரும்போதுதான் மறு.குறிப்பிட்ட திறமைகளை வளர்த்தெடுக்க முடியும்.
கல்வி உயர… தொடர்ந்து பேசுவோம்.
க.சரவணன், மதுரை.
Excellent article sir . Worthful sir.keep it up sir