நானும் தப்பு செய்ய மாட்டேன், என்னோடு இருக்கும் யாரையும் தப்பு செய்ய விட மாட்டேன்!

Share Button

சென்னை :-

நானும் தப்பு செய்ய மாட்டேன், என்னோடு இருக்கும் யாரையும் தப்பு செய்ய விட மாட்டேன்!

– முதல்வர் விஜய் பதவியேற்றபோது பேசிய உரையில் நான் பெரிதும் வரவேற்கும் வரிகள் இவை!

அரசு அல்லது தனியாரின் எந்தத் துறையிலும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர் நேர்மையாக இருந்தால் அங்கே எந்தத் தவறும் நிகழாது.

நமது அரசு நிர்வாகத்தில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பொறுப்பில் ஒரு துறை வரும்போது அதில் தவறுகள் நேர்ந்ததில்லை என்பதை அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கிறோம். திரு.சகாயம், திரு.இறையன்பு போன்று பலரை உதாரணமாகச் சொல்ல முடியும்.

முதல்வர் இந்த நேர்மை விஷயத்தில் உறுதியுடன் இருந்தால் போதும். ஊழலற்ற ஆட்சியை செயலுக்குக் கொண்டுவந்து விட முடியும்.

முதல்வர் தன் தொழில் மூலம் நிறைய சம்பாதித்து நிறைவு நிலையை எட்டியிருக்கலாம். அவருக்குக் கீழே இயங்கப் போகிற அத்தனை அமைச்சர்களையும், சட்ட மன்ற உறுப்பினர்களையும் ஊழலுக்கு எதிரான மனப் போக்குக்குக் கொண்டு வருவது சவாலான காரியம்.

பிராக்ட்டிகலாக பார்ப்போம். த.வெ.க கட்சியில் பணம் கொடுத்து வேட்பாளரானதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

அது உண்மை என்றால் கொடுத்த பணத்தை முதலீடாக நினைப்பவர்கள் அதை ஈடுகட்ட நினைப்பார்கள்.

தவிர ஓட்டுக்கு பணம் கொடுத்தார்களா என்று தெரியாது, ஆனால் போஸ்டர், பேனர், பொதுக்கூட்டம், வாக்கு சேகரிப்பு என்று சிலர் லட்சங்களிலும், சிலர் கோடிகளிலும் செலவழித்திருக்கக் கூடும்.

அவர்களுக்கும் நேர்மையை மனதில் பதிய வைக்க முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்பது மிகப் பெரிய கேள்வி.

அமைச்சர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு இரகசிய குழுவை முதல்வர் வைத்திருக்க வேண்டும்.

தன் செயல்கள் கண்காணிக்கப் படுகின்றன என்கிற உணர்வோடு அமைச்சர்கள் செயல்பட வேண்டும்.

அதுபோல… தொகுதிகளில் எம்.எல்.ஏ க்கள் தவறு செய்தால் ஆதாரங்களுடன் புகார் அனுப்ப தொகுதி வாரியாக நேர்மையான தொண்டர் படை நியமித்து கண்காணிக்கலாம்.

அப்படி யார் மீதாவது புகார் வரும்பட்சத்தில் பாரபட்சமின்றி அவர்கள் மீது முதல்வரே நடவடிக்கை எடுக்கும் துணிவும் தேவை.

இதையெல்லாம் விட..ஒரு அரசில் நடக்க வேண்டிய ஒரு வேலையோ, ஒப்பந்தமோ லஞ்சம் கொடுக்காமல்தான் செயல்படுவேன் என்கிற உறுதி மக்களிடம் ஏற்பட வேண்டும்.

லஞ்சமோ, ஊழலோ அதிகாரிகளும், மக்களும் இணைந்தே நிகழ்த்தப்படும் ஒரு விஷயம்.

வாங்க மாட்டேன் என்பதும் நேர்மைதான். கொடுக்க மாட்டேன் என்பதும் நேர்மைதான்.

– பட்டுக்கோட்டை பிரபாகர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *