யார் அந்த 4 பேர்
சாலையில் விழுந்துவிட்டால் யாரும் பார்க்கும் முன்பே எழுந்திரு, வாழ்க்கையில் விழுந்துவிட்டால் எல்லோரும் பார்க்கும்படி எழுந்திரு…எங்கோ படித்த ஞாபகம். இங்கு எழுந்திரித்தல் என்பது என்ன என்பதின் விடையே இந்தப் பதிவு.
பரிணாம வளர்ச்சி கொண்டு பரிமாணமாய் மிளிர்ந்து கொண்டிருக்கிறோம். நீர் எப்போதும் கனவுகளின் ஊற்றாக இருந்திருக்கிறது மற்றும் குறைந்தும் இருக்கிறது. கனவுகளின் துவக்கப் புள்ளி நீர். இந்த இரெண்டாம் நீரைப் புரிந்துகொண்டால் எல்லாம் சுகம். தாய் முட்டையை இட்டுச் சென்றதும், அதிலிருந்து கம்பளிப்புழுவாக வந்து, தனது முட்டையின் மீதிச் செல்களை உண்டுவிட்டு பல மாற்றங்கள் மற்றும் தடங்கல்களைக் கண்டு வண்ணத்துப்பூச்சியாக தன் வாழ்க்கையைத் தொடங்குகிறதே…. சொல்கிறதே… வாழ்கை என்னவென்று….
மனிதப் பிறப்பின் நான்கு நிலைகளான பிறத்தல், இருத்தல், மகிழ்தல் மற்றும் மரணித்தலில்.. நாம் எங்கும் நிற்றல் இல்லாமல் இருக்கிறோம். மகிழ்தல் என்பதுவோ மறைந்து போய்க்கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் தொலைத்த மனங்களுக்கு…நான்குபேர்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோமா? யார் அந்த 4 பேர்? நம் உள்ளுக்குள் இருப்பதினாலேயே, அறியாமல் விட்டிருக்கிறோம். சரி, கதைக்குள் செல்வோம்.
ஒரு ஊரில் 4 சோம்பேறிகள் இருந்தார்கள். அவர்களின் சோம்பேறித்தனத்தினாலேயே அவர்களுக்கு கால் , அரை , முக்கால் மற்றும் முழுச்சோம்பேறிகள் எனப் பெயர்கள். இவர்கள் நால்வரும் ஒரு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் ஒரு 1 ருபாயைக் கண்டார்கள்.
முழுசோம்பேறி அருகில் இருந்த முக்கால் சோம்பேரியிடம் எடுக்கச்சொன்னான், அவனோ, அரைச்சோம்பேரியிடம் சொல்ல, அவனும் காலிடம் சொன்னான். குனிந்து எடுக்க சோம்பல்கொண்டு நால்வரும் எடுக்காமலேயே சென்றார்கள்.
வழியில் ஒரு வண்டி நிறைய வாழைப்பழம் வந்துகொண்டிருந்தது. நால்வரும் நினைத்தார்கள் அந்த 1 ரூபாயை எடுத்திருந்தால் இப்போது வாழைப்பழம் வாங்கியிருக்கலாம் என்று, ஆனால் ஒருவரும் திரும்பிச்சென்று எடுக்க முன்வரவில்லை. இரவும் வந்தது, களைப்பும் தந்தது.
நால்வரும் அருகில் இருந்த கோவில்மண்டபத்தில் படுத்து உறங்கினார்கள். கோவில் அர்ச்சகர் இவர்களின் நிலை தெரிந்து, விறகு, பானை, அரிசி மற்றும் தண்ணீரைக் கொடுத்து, சமைத்து உண்ணச் சொன்னார். வழக்கம்போல நால்வரும்… முடிவுக்கு வந்தார்கள்… நால்வரில் யார் முதலில் பேசுகிறார்களோ
அவர்களே சென்று சமைக்கத் துவங்கவேண்டும் என்று… மௌனவிரதம் தொடங்கிற்று, அனைவரும் தூங்குவதுபோல்.. அர்ச்சகரோ, மீண்டும் வந்து பார்க்கையில்…… அதிர்ச்சியில்… இறந்துவிட்டார்கள் என எண்ணி நால்வரையும் இழுக்க, ஒருவன் தூணில் அடிபட கத்தினான்… மற்ற
மூவரும் எழுந்து, நீதான் முதலில் துவங்கினாய்… ஆதலால் நீதான் சமைக்கவேண்டும் என்றார்கள்…
நம்மில் இருந்து இந்த நால்வரையும் நீக்கினால் நாம் முன்னேற ஒரு வழி கிடைக்கும். இந்த நால்வரை வள்ளுவர்..
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார்க் காமக் கலன்- குறள்– 605.
பொருள்: காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறிய தூக்கம் ஆகிய இந்நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் ஏற்கும் மரக்கலம் ஆகையால், முன்னேற இந்த நாலையும், நால்வரையும் துறப்போமாக..
இன்னும் தொடரும்…
நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M
தன்முனைப்புப் பேச்சாளர் / மதச் சொற்பொழிவாளர் / தத்துவப் பேச்சாளர்
Nice story of 4people