திகட்டும் தீர்மானம் : ஒரு கதை சொல்லட்டுமா? : Episode-1
ஒரு ஊர்ல இரண்டு மடாலயங்கள் இருக்கு. அந்த இரண்டு மடாலயங்களிலேயும் ஒவ்வொரு குருமார்கள்
இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு சிஷ்யர்களும் இருக்கிறார்கள். அந்த இரண்டு குருமார்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதனால் அவங்க இரண்டு பெரும் பேசிக்கறது இல்லை.
அதனால அவர்களுடைய சிஷ்யர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கக்கூடாது என்று நிபந்தனையில் இருக்கிறார்கள். ஒருநாள் தற்செயலாக அந்த இரண்டு சிஷ்யர்களும் காலையில் காய்கறி வாங்க சந்தைக்குச் செல்லும்போது சந்திக்க நேரிடுகிறது. வேறு வழியில்லாமல் பேசிக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் அந்த முதல் சிஷ்யர் இரண்டாமவரிடம், “எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு இரண்டாவது சிஷ்யர், “காற்று என்னை எங்கே கூட்டிச் செல்கிறதோ அங்கு செல்கிறேன்” என்றார். இதைக் கேட்ட முதலாவது சிஷ்யர் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப் போனார். அந்தக் குழப்பத்திலேயே மடாலயம் திரும்பி வந்து அவரின் குருவிடம் நடந்தவற்றைச் சொன்னார். அந்த குரு தனது சிஷ்யரை மற்றொரு சிஷ்யரிடம் பேசியதற்காகத் திட்டிவிட்டு, “அந்த சிஷ்யனிடம் இதே கேள்வியை நாளையும் கேள். நாளை இதே பதிலை அவன் சொன்னவுடன், “உன்னையாவது காற்றுதான் கூட்டிட்டு போகுது.
ஆனால், நானோ இந்த பிரபஞ்சம் என்னை எங்கே கூட்டிச் செல்கிறதோ அங்கு செல்கிறேன்,” எனச் சொல்” என்றார். அந்த சிஷ்யரும் இந்தப் பதிலை முழுவதுமாக தனக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டே இரவு தூங்கிப்போனார். மறுநாள் காலையில் எழுந்து வழக்கம்போல் சந்தைக்குப் புறப்பட்டார். தனது குரு சொன்ன பதிலை மீண்டும் தனக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டே அந்த மற்றொரு சிஷ்யனை எதிர்பார்த்து சென்றார். எதிர்பார்த்தது போலவே அந்த இரண்டாவது சிஷ்யனும் எதிரில் வந்தார். முதலாவது சிஷ்யர் தயார் செய்துவைத்த முதல்நாள் கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்டார். நேற்று சொன்ன அதே பதிலை அந்த இரண்டாவது சிஷ்யர் சொல்வார், அப்போது தனது குரு சொன்ன பதிலைச் சொல்லி இவனை மடக்க வேண்டும் என்று முதலாவது சிஷ்யர் மனதுக்குள் எண்ணினார். ஆனால் அந்த இரண்டாவது சிஷ்யர் தனது பதிலாக, “நான் காய்கறி வாங்க சந்தைக்குச் செல்கிறேன்” என்று மிக சாதாரணமாகச் சொல்லிவிட்டுச் சென்றார். தான் தயாரித்துவைத்த பதில் இங்கு பயன்படுத்துவதற்கு இல்லாமல் இவன் வேறு பதில் கூறுகிறானே என்று இன்றும் குழம்பிப்போய் அந்த சிஷ்யர் மீண்டும் மடாலயத்திற்கு வந்துவிட்டார்.
பெரும்பாலும் மனிதர்கள் இந்த முதலாவது சிஷ்யரைப் போலவே “இவர் இப்படித்தான்” என்று ஒரு தீர்மானம் செய்துகொண்டு அத்தீர்மானத்தின் மூலமாகவே தன்னைச் சுற்றியுள்ள நபர்களை அணுகுகிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு கோவத்தையோ, பாசத்தையோ அல்லது சிறுபிள்ளைத்தனத்தையோ வெளிப்படுத்தி இருக்கலாம். எப்போதோ இவ்வாறாக வெளிப்படுத்தியதை வைத்து “இவர்கள் எப்போதுமே இப்படித்தான்” என்று ஒரு கருத்தை நம் மனதில் அவர்கள் மேல் திணிக்கிறார்கள்.
அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்கனவே தீர்மானம் செய்துவைத்த கருத்துகள் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட நபராக அவர்களுக்குத் தெரியும். மற்றவர்களை இதுபோல் தீர்மானிப்பது இருக்கட்டும். ஒரு சிறு முயற்சி செய்து பாருங்கள். நாளை காலை 10 மணிக்கு நான் கோபமாக இருப்பேன் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? இன்று மதியம் சாப்பிட்ட பிறகு நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று உறதியாகக் கூறமுடியுமா? உணர்வுகளை நீங்கள் முன்கூட்டியே தீர்மானம் செய்துகொள்ள முடியாது.
உங்களின் எண்ணமும் உணர்வும் பிண்ணிப் பிணைந்தவைகள். உங்களின் உணர்வு மற்றும் செயல்களையே உங்களால் தீர்மானம் செய்துகொள்ள முடியாது எனும் நிலையில் மற்றவர்களைப் பற்றி ஒரு தீர்மானக் கருத்து எவ்வளவுதூரம் சரியானதாக இருக்கும் என்று ஒருவர் தனக்குள் கேள்வி கேட்டுக்கொள்வது நல்லது. அடுத்தவர்களை எப்போதுமே “இவர் இப்படித்தான்” என்று அணுகவேண்டாம். ஏனென்றால் உங்களையே தீர்மானம் செய்துகொள்ளும் சக்தி உங்களிடம் இல்லை என்பதே உண்மை. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் எப்படி அணுகுவீர்கள் என்று தெரியாத நிலையில் மற்றவர்களைப் பற்றி ஒரு கருத்தை மனதில் முன்னிறுத்துவதுதான் தவறு.
ஏனென்றால் சூழ்நிலை மட்டுமே ஒரு மனிதரை என்ன பேசவேண்டும், எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று தீர்மானிக்கும். சூழ்நிலை என்பது உங்களைச் சுற்றயுள்ளவர்களையும் உள்ளடக்கியது. அதற்குத் தகுந்தாற்போல்தான் மனிதரின் நடத்தை உள்ளது. ஆதலால், இதுதான் நிரந்தர குணம் என்றும் நிரந்தர இயல்பு என்றும் எதுவும் கிடையாது. இதைப் புரிந்துகொள்ளும்போது நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை கையாளுவது சுலபமாக இருக்கும்.
கதை தொடரும்…
………………………………………………………………………………………………………………………………………………………………………………….
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply