அண்ணாமலை அசத்துவாரா?

Share Button

அண்ணாமலை அசத்துவாரா?

தமிழக அரசியல் கடந்த ஒரு மாத காலமாகவே பரபரப்பாக மாறியிருக்கிறது. விசில் நாயகர் விஜய் யின் வெற்றிக் கழகத்ததின் விஸ்வரூப வெற்றி தமிழகக் கழகங்களை
வெற்றுக் கழகங்களாக்கியிருப்பதுடன் இந்திய அரசியலையும் அதிர வைத்திருக்கிறது.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்று நாமக்கல் கவிஞர் நம் சுதந்திரத்தைப் பற்றி பாடிய போது ஏற்பட்ட ஆச்சர்யத்தை விட , பணம் கொடுக்காமல் , சாதி மதம் பேசாமல் தமிழகத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்திய வெற்றி ஆச்சர்யம் தந்தது .

இன்றைய இளைய சக்தி இணையம், நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஓசையின்றி பல கட்சிகளை ஓரம் கட்டி ஒப்பாரி வைக்க வைத்துவிட்டது

விடியல் கட்சியின் கொள்கைக் கூட்டாளிகள் கூண்டோடு அணி மாறியதும் .. அசைக்க முடியாத அ.தி.மு.க அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போயிருப்பதும் .. எல்லா கட்சிகளும் ஜென் ஸீ எனப்படும் இளைய தலைமுறையை நோக்கிப் பயணம் படுவதும் புதிய அரசியல் பாதைக்கான தொடக்கம்.

விஜய் அண்ணாமலை உதயநிதி போன்ற இளைஞர்களின் வருகையால் தமிழக அரசியலில் பழையன கழிந்து புதியன பிறக்கட்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கழகங்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ‘அரசியல் புயல்’ அண்ணாமலை தவறவிட்ட பாதையை விஜய் தேர்வு செய்து பயணம் செய்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

எப்போதோ வரவேண்டிய அண்ணாமலை இப்போது “நானும் வருகிறேன் பார்” என்று பா.ஜ.கட்சியை விட்டு விலகி தனி இயக்கம் தொடங்கி விட்டார் .

அவரது அறிக்கைகளும் அறிவிப்புகளும் தொலைநோக்குத் திட்டத்துடன் முதிர்ச்சியுடன் இருப்பதால் இயக்கம் தொடங்கிய 24 மணி நேரத்தில் 12 லட்சம் பேர் அதில் இணைந்து சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிமுக , தி மு க , த.வெ க உட்பட அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பு , தமிழக பாஜகவினரின் காழ்ப்புணர்வு , இவற்றை எல்லாம் மீறி அண்ணாமலையால் என்ன சாதிக்க முடியும் ?

மாற்று அரசியலுக்காக மக்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் முன் கட்சி பின்னணி இல்லாமல் அண்ணாமலையால் தாக்குப் பிடிக்க முடியுமா ?

அரசியலில் தூய்மை நேர்மை, கண்ணியம் வேண்டும் என்பதற்காகவே பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, தொழில் எல்லாவற்றையும் துறந்து அமெரிக்காவில் இருந்து வந்து இளைஞர்களை ஒருங்கிணைத்து ‘மக்கள் சக்தி இயக்கம்’ ஆரம்பத்த தன்னம்பிக்கை மனிதர் எம்.எஸ் உதயமூர்த்தியை ஒரே தேர்தலில் ஓரம் கட்டிய பெருமைக்குரிய தமிழகத்தில் அண்ணாமலையின் அகிம்சை அரசியல் எடுபடுமா ?

அவரது இயக்கம் திராவிட பாதையா ? ஆரிய பார்வையா ?

மாநில குட்டையா ? தேசிய நீரோட்டமா ?
பா.ஜ.க வின் பினாமியா ? இல்லை பாஜகவை எதிர்க்கும் சுனாமியா ? என்றெல்லாம் இனி சில வாரங்களுக்கு தமிழக மீடியாக்கள் அலறும்… அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அக்கு வேரு ஆணி வேராய் அலசிக் காயப்போடும் .. காயப்படுத்தும். (பிழைப்பு நடக்க வேண்டுமே)

அண்ணாமலை இவற்றையெல்லாம் பொருட்படுத்துவரல்லர் .தனது விலகலை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி .. கட்சியை விமர்சித்து பலரைத் தாக்கி அறிக்கை விட்டு தனது விலகலைத் தெரிவித்திருக்கலாம்.

மாறாக தன் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துத் தான் வெளியேற வேண்டிய சூழலை விளக்கி அவர்களை சம்மதிக்க வைத்து வெளியே வந்துள்ள பண்பு அவரது அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்.

கட்சி அரசியல் என்று நேரடியாக அதிரடியாக அவசரம் அவசரமாக இறங்காமல், கள அரசியலைக் கட்டமைக்கும் இயக்கமாகத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை என்றே தெரிகிறது.

நாம் தலைவர்கள் என்ற தன்னம்பிக்கையோடு ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்கிற உரத்த சிந்தனையோடு புதிய பாதையில் பயணிக்கப் போகும்
அண்ணாமலையை வரவேற்போம் வாழ்த்துவோம் .

– உதயம் ராம்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *