நீரில் மின்னும் நட்சத்திரங்கள் (நிலாவின் வருகை) பாகம்-1

Share Button

நிலாவின் வருகை : (பாகம்-1)

நிலா தேயுது, மறையுது, வளருது. அப்புறம், முழுசா தெரியுது. இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விசயம்தான். ஆனா, முழு நிலா பறவைகள், விலங்குகளிடம் பேசும், உரையாடும்.

இதை நம்பமாட்டீங்க. இந்த நிமிடம் வரை நிலா பேசுகிட்டு இருக்கு. இது கற்பனை அல்ல. நிஜம். மனுசங்களுக்கு நிலா பேசுறது கேட்கிறதில்லை. அது சொல்ற விசயத்தை காது கொடுத்துக் கேட்க நேரமும் இல்லை. மனிதன் நிலவுக்குச் சென்றால், ஒருவேளை கேட்கக் கூடும்.

நிலா பேசுகிற கதை எதை பற்றியது, யாரை பற்றியது தெரியுமா?

மனுசங்களை பற்றிதான். அவை உண்மை கதைகள். ஆனாலும், நம்பமாட்டீங்க. அவை கற்பனைக் கதைகள் என்று சொல்வீங்க. கற்பனையாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால், அவை மனுசங்களுக்கானவை. இந்த உலகத்துக்கானவை!

இன்னிக்கு முழு நிலவு நாள். நிலா கதைகளுடன் வரும். பறவைகளும், விலங்குகளும் வர ஆரம்பித்தன. அவை ஆலமரத்துக்கு அடியில் ஒன்று கூடின.

ஆலமரம் குளத்தங்கரையில் வளர்ந்திருந்தது. அதன் அனைத்து கிளைகளிலும் பறவைகள். விதவிதமான பறவைகள். அலகு நீண்டவை. தட்டையானவை. வளைந்தவை. சிறியவை. கூர்மையானவை.

மரத்தின் அடிப்பகுதியைச் சுற்றி விலங்குகள். அவை பல வகைகள். கால்நடைகள். வீட்டு விலங்குகள். காட்டு விலங்குகள், இப்படி பல. அவைகளும் நிலாவுக்காகக் காத்திருந்தன.

மேகங்களுக்குள் இருந்து நிலா வெளிபட்டது. உப்பரிகையில் அரசி போல் நிலா வெளிபட்டது. பறவைகள் மகிழ்ச்சி குரல் எழுப்பின. விலங்குகள் கத்தின. அது கத்தல் இல்லை. ஆரவாரம்.

அந்த இரவின் இருளில் நட்சத்திரங்கள் நீரில் மின்னின. நீரில் மின்னும் நட்சத்திரங்கள் பேசும் திறன் படைத்தவை. நட்சத்திரங்கள் பேசுவது மனிதர்கள் காதில் விழும்.

ஆனால், நட்சத்திரம்தான் பேசுகிறது என்பதை அவர்களுக்குத் தெரியாது. குளக்கரையில் இரவில் கால் நனைக்கும் மனிதர்கள் பலரும் நட்சத்திரத்தின் குரலைக் கேட்டுள்ளனர். பாவம்! யார் பேசுவது என்பதை உணராது பயந்து ஓடிவிடுவார்கள்.

அதை பார்த்து நட்சத்திரங்கள் சிரிக்கும். மனிதர்கள் ‘முனி சிரிக்கிறது’ என்பார்கள். முனி குறித்த கதையைப் புனைவார்கள். கதைகள் கால் முளைத்து கிராமம் முழுவதும் உலா வரும். இன்னும் சொல்லப்போனால் , மனிதர்கள் இரவில் குளத்துப் பக்கம் வருவதே இல்லை.

யார் முதலில் பேசுவது? யார் பேச்சைத் தொடங்குவது? மேகங்களுக்குள் மீண்டும் நிலா மறைந்தது. ஒளிந்து பிடித்து விளையாடுகிறதோ நிலா!

மின்மினி பூச்சிகள் இருளில் மின்னின. ஆலமரத்தைச் சுற்றி வந்து வெளிச்சம் தந்தன. வண்டுகள் முரலும் சத்தம் இசை போல் இனிமையாக ஒலித்தது. இருள் விலகியது. முழு நிலாவின் வெள்ளொளி பூமியைக் குளிர்வித்தது.

இன்று நிலா என்ன கதையுடன் வந்துள்ளது எனத் தெரியவில்லை.

தொடரும்…

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *