பணக்கார பெண்ணுக்கு ஒரு நியதி, ஏழைப் பெண்ணுக்கு ஒரு நியதியா?
இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி? பணம் இருந்தால், எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்? எந்தச் சாதியை சார்ந்தரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்?
யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்… பாராட்டுவார்கள்… சாதி மாற்றி திருமணம் என ஆணவக்கொலைகளும் நிகழ்வதில்லை… ஏன்?
ஆனால் அதே ஒரு ஏழை பெண் செய்தால் விடுகிறார்களா? இல்லை…
இரண்டாது திருமணம் செய்கிறாள்… வேசி என்றும் அல்லது சாதி மாறி திருமணம் செய்யலாமா? அல்லது குடும்பத்திற்கு கேவலமா போச்சே? என்றும் அல்லது சாதி மாறி திருமணம் செய்தால்…
மனிதநேயமே இல்லாமல் ஆணவக்கொலை வேறு நிகழ்கிறது… ஏன்?
திரையுலக பிரபலம் ஐஸ்வர்யா ராய் சல்மான்கானுடன் நெருக்கமான பழக்கம் முறிந்து விவேக் ஓபராய் உடன் நெருக்கம்… கடைசியில் அதுவும் முறிந்து அபிஷேக்பச்சனுடன் திருமணம். ஐஸ்வர்யா ராயை என்றுமே யாரும் இதுவரை குறை கூறியது கிடையாது. கேவலமாக பேசியதும் கிடையாது…
அதேப்போல், ரஜினியின் மகள் சௌவுந்தரியாவுக்கு இரண்டாவது திருமணம்… அதுவும் முன்னால் கணவருக்கு பிறந்த ஒரு குழந்தை இருக்கும்போது…
குழந்தையின் கண் முன்னே, தாய்-தந்தையரின் ஏற்பாட்டோடு இரண்டாவது திருமணம்… யாரும் பேசுவது கிடையாது… பாராட்டுகள் மட்டுமே…
சிம்புவுடன் நெருக்கம். பிறகு ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவுடன் நெருக்கம். அதுவும் கடந்து இப்போது விக்னேஷ் சிவன் உடன் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, இப்போது முறைப்படி திருமணம்…
நயன்தாராவையும் யாரும் விமர்சிக்கப் போவதில்லை… கேவலமாக பேசப்போவதில்லை… இதில் அரசு பாதுகாப்பு வேறு… இவர் என்ன நாட்டு தியாகியா? வாழ்த்துவது மட்டுமல்ல, மாறாக, ஆஹா ஓஹோ என்று பேசுகிறார்… ஏன்?
திரையுலகம் அரசியல் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சார்ந்த பணம் படைத்த பெண்களின் வாழ்க்கை இப்படி வழக்கத்திற்கு மாறாகவும், கலாச்சாராம் என கூறிக் கொள்கிறார்களே, அதற்கு மாறுபட்டுமே திருமணங்கள் நிகழ்கிறது…
இருப்பினும், யாரும் ஒன்றும் சொல்வதில்லை… ஆணவக்கொலைகளும் நிகழ்வதில்லை…
ஒரு பெண் என்றவள், தன்னுடைய சொந்த வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்வதற்கு ஆணுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ… அதே உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு…
அப்படிதான் உலகெங்கிலும் நடக்கிறது. நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதைவிடுத்து, ஒரு ஏழை பெண்கள் அல்லது நடுத்தர குடும்பத்து பெண்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள விரும்பினால் விட்டுவிட வேண்டும்.
அதைவிடுத்து, வாய்க்கு வந்தபடி பேசி… பணக்காரப்பெண்ணுக்கு ஒரு நியாயம், ஏழை பெண்ணுக்கு ஒரு நியாயம் என பேசக்கூடாது.
பெண்ணின் வாழ்க்கை கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டு, சரியாக அமையாமல் போனால் அல்லது கணவன் இறந்து விதவையான பெண்களுக்கு வேறொருவர் உதவ முன்வந்தால், அவரது குடும்பத்தினரும் இணைந்து வாழ்த்தி அனுப்புங்கள்.
“ஏழை” என்ற அடைமொழி ஒன்றும் அவ்வளவு கேவலமானதல்ல. தண்டனைக்குரியதும் அல்ல. வாழ்த்தாவிட்டாலும், மனிதநேயத்தோடு வாழவிடுங்கள்.
முன்பெல்லாம் ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்குகொரு நியதி…
தற்போது பணக்கார பெண்ணுக்கு ஒரு நியதி… ஏழை பெண்ணுக்கு ஒரு நியதி என்றாகி விட்டது.
பெண் விடுதலையும்கூட ஏழைப்பணக்காரர் எனும் அடிப்படியில்தான் கிடைத்துள்ளது போல…
குறிப்பு :-
நான் சொல்ல வந்தது, இரண்டாவது திருமணம் என்பதை வலியுறுத்தி அல்ல. வாழ்க்கையை தொலைத்த ஏழை பெண்களை மறுமணம் செய்ய மறுப்பதேன்?
விதவையை மறுமணம் செய்ய மறுப்பதேன்? சாதிமாறி திருமணம் செய்தால், ஆணவக்கொலைகள் செய்வதேன்?
ஆனால், அதையே பணக்காரப்பெண் செய்தால் மட்டும் பாராட்டு… வாழ்த்துகள்… வரவேற்பு… ஆகவே, பணம்தான் மனிதநேயத்தை நிர்ணயம் செய்கிறதா? என்பது என் கேள்வி?…
மற்றொன்று, “ஏழை” என்னும் அடைமொழி என்ன குற்றமா? அல்லது தண்டனைக்குரியதா? என்பது அடுத்த கேள்வி…
மேலும், இந்தியாவில் பெண் விடுதலை என்பது பணக்கார பெண்களுக்கு மட்டுமே உரியதா? என்பது அடுத்த கேள்வி?…
– Easty Stephen
Leave a Reply