ஜெர்மனியில் விக்ரம் படத்தின் வசூல் எவ்வளவு? – விக்ரம் திரைப்படத்தால் ஜெர்மனியில் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்!

Share Button

ஜெர்மனியில் விக்ரம் படத்தின் வசூல் எவ்வளவு?
———————————————————————————
பத்தல பத்தல…
சீட்டும் பத்தல
டிக்கெட்டும் பத்தல
மத்தளம் அட்ரா டேய்…

ஜெர்மனியில் இப்படித்தான் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் படப் பாடலை பாட வேண்டியிருக்கிறது.

ஆம், ஜெர்மனியின் பல நகரங்களில் விக்ரம் படத்துக்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை. தியேட்டருக்கு போய் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து படம் பார்க்க சென்றவர்கள் பலர் ஏமாற்றத்துடனேதான் திரும்பியுள்ளனர்.

அதன் பிரதிபலிப்பு, அனைவருமே படத்துக்கான டிக்கட்டை ஆன்லைனில் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பல வருடங்களாக ஹவுஸ்ஃபுல் என்ற வார்த்தையை மறந்திருந்த ஜெர்மனியின் தமிழ் திரைப்பட தியேட்டர் உலகம், விக்ரம் திரைப்படத்தால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெர்மனியில் ஹவுஸ்ஃபுல்லான திரைப்படம் என்ற பெருமை உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரமையே சாரும்.

பொதுவாக ஜெர்மனியில் எந்த தமிழ் படமும் சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தான் ரிலீஸ் ஆகும். அப்போது தான் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வசதியாக இருக்கும்.

அதிலும் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ள “ஏ” சர்டிபிகேட் படங்களுக்கு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அனுமதி இல்லாத காரணத்தினால் படம் ரிலீஸ் ஆகும் நாளன்று தியேட்டருக்கு நேரில் சென்றே டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் விக்ரம் படத்தைப் பொறுத்தவரையில் நிலைமை வேறு. 3ம் தேதி காலையிலேயே படத்தைப் பற்றி நல்ல ரிவியூ வந்த காரணத்தினால் ஆன்லைன் புக்கிங்கிலேயே பல ஊர்களில் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது.

முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட வேண்டும் என்று விருப்பியவர்கள் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கியவுடனே வாங்கிவிட்டனர். உலக நாயகன், மக்கள் செல்வன், பகத் பாசில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று பல நட்சத்திரங்களின் பங்களிப்பால் படத்தின் எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே மிகுந்திருந்தது.

தமிழ் மக்கள் கூடும் இந்திய கடைகள், நிகழ்ச்சிகள் என எதிலும் விக்ரம் பற்றியும் பேசப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி படமும் மிக சிறப்பாக அமைந்தது அனைவரின் எதிர்பார்ப்புக்கும் கிடைத்த வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.

இனி உலகநாயகன் கமலஹாசனின் நடிப்பை வரையறுக்கும் போது, உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனியாக மார்க் கொடுக்கவேண்டும் போலிருக்கிறது. மற்ற பாகங்களை விட கண்களுக்கு அதிலும் குறிப்பாக இடது கண்ணுக்கு அதிக மதிப்பெண்களை வழங்க வேண்டியிருக்கும்.

நடிப்பு இராட்சசன் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய சபாஷ். இவரின் “ஹார்ட் எந்த பக்கம் இருக்கு?” டயலாக் பலவிதங்களில் பட்டைய கிளப்பப்போகுது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜை நேரில் பார்த்தால் மறக்காமல் ஒரு கேள்வி கேட்க வேண்டும். உங்கள் படத்தில் ஒளிப்பதிவு செய்யும் இரவு நேரத்துக்கு எவ்வளவு பணம் கொடுக்க தயாரிப்பாளருக்கு சிபாரிசு செய்கிறீர்கள் என்று.

அந்தளவுக்கு அவர் படங்களில் இரவு நன்றாகவே வேலை செய்கிறது. அதுக்கேத்தமாதிரி ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனும் தன் லைட்டிங்கை அட்ஜஸ்ட் செய்து இரவுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தை கொடுத்துள்ளார்.

பிராங்க்ஃபர்ட், பெர்லின், மூனிச் போன்ற பெரிய நகரங்களிலும் பீலபெல்டு போன்ற சிறு நகரங்களிலுமாக முப்பதுக்கும் அதிகமான தியேடர்களில் விக்ரம் திரையிடப்பட்டுள்ளது.

அதிலும் ஸ்டுட்கார்ட், டோர்ட்முண்ட் போன்ற நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு 10:45 க்கே முதல் ஷோ திரையிடப்பட்டது. எனக்குத் தெரிந்த வரையில் எந்த படமும் இந்தளவு பின்னேரத்தில் ஜெர்மனியில் திரையிடப்பட்டதாக ஞாபகம் இல்லை.

ஜூன் 6-ம் தேதி திங்கட்கிழமையும் ஜெர்மனியில் அரசு விடுமுறையாதலால் இந்த நான்கு நாட்களில் விக்ரம் வசூல் மிகப்பெரிய லாபத்தை விநியோகிஸ்தருக்கு பெற்றுக்கொடுக்கும்.

கிரேட் பிரிட்டனை சார்ந்த ‘ஹம்சினி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ரிலீஸ்’ என்று திரையில் மின்னுகிறது. ‘அனிருத் லைவ் இன் கான்செர்ட்’ என்ற பிரபலமான நிகழிச்சியை பாரிஸ் மற்றும் கிரேட் பிரிட்டனில் நடத்தியவர்கள் இவர்கள் தான்.

பிராங்க்ஃபர்ட் நகரின் ‘சினிஸ்டார் மெட்ரோபாலிஸ்’ காம்ப்ளெக்ஸில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 12 தியேட்டர்கள் உள்ளன. அதில் முதல் மாடியில் உள்ள ‘தியேட்டர் எண் :3’ ல் விக்ரம் ஓடுகிறது.

ஒரு டிக்கெட்டின் விலை 15 ஈரோ. வரியுடன் சேர்த்து 16.30 ஈரோ. இந்த தியேட்டரில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 283. ஹவுஸ்ஃபுல்லாக ஓடுவதால் அனைத்து இருக்கைகளும் நிறைந்துள்ளன.

அப்படியானால் ஒரு ஷோவின் வருமானம் எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். திங்கட்கிழமையும் ஜெர்மனியில் விடுமுறையாதலால் மோன்சேன்கிளாட்பாக் போன்ற நகரங்களில் விக்ரம் திரையிடப்படுகிறது.

மூனிச் நகரில் உள்ள சிஞ்சினாட்டி திரையரங்கில் ஒரு டிக்கெட்டின் விலை 17 ஈரோ. மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 430. ஆக மொத்தத்தில் இந்த நான்கு நாட்களில் விக்ரம் திரைப்படம் ஜெர்மனியில் மிகப்பெரிய அளவில் வசூலை குவிக்கும்.

ஜெர்மனியில் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் நாட்டியுள்ள கொடி நீண்டநாளைக்கு சிறகடித்துப் பறக்கும் என்பதில் ஐயமில்லை!

– ஜேஸூ ஞானராஜ், ஜெர்மனி.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *