கல்வி உயர : (பாகம்-7) எத்தகைய பங்கேற்பு தேவை?
வகுப்பறை எப்படி இருக்க வேண்டும்?
வகுப்பறை குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் தர வேண்டும். வகுப்பறை குழந்தைகளைப் பயமுறுத்தக் கூடாது.
ஆசிரியர் முகமூடி கழட்டபட்ட வகுப்பறையாக இருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் வாய்ப்புகளை உருவாக்கித் தருபவராகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டும்.
பள்ளியின் கடைசி நாள் தர்ஷன் அருகில் வந்தான்.
“சார், டவுட்.”
“கேளுங்க, தர்ஷன்.”
“நாடகம் நடிக்கணும்னாலும் எல்லாத்தையும் கூப்பிடுறீங்க. பாட்டு பாடணும்னாலும் எல்லாரையும் கூப்பிடுறீங்க. ஏன் நல்லா நடிக்கிற பசங்களை வைத்து நாடகம் போடலாமே!
நல்லா பாடுற பையன்களை வைத்து பாட வைக்க கூடாது?”
அவனுக்கான பதில் என்ன அளித்திருப்பேன் என யூகித்து வையுங்கள். பின்பு கூறுகிறேன். ஆசிரியராக, பெற்றோராக ” பங்கேற்பு” என்பது உங்களின் பதிலாக இருக்கும். சரிதான்.
எப்படிபட்ட பங்கேற்பு அவசியம்?
ஒர் ஆசிரியராக பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் எல்லா அம்சங்களிலும் குழந்தைகளின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். அதன்வழியே குழந்தைகள் வாழ்வுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்.
குழந்தைகளை வாழ்வுக்குத் தயார்படுத்தும் களமாகப் பள்ளிகள் உள்ளனவா?
பொதுவாக வீடு, சமூகம் மற்றும் நாம் காணும் அனுபவத்தில் இருந்து பட்டறிவை பெறுகிறோம். இது குழந்தைகளுக்கும் பொருந்தும். மேலும், பண்பாட்டு கூறுகளில் இருந்து குழந்தைகளை வளர்த்தெடுக்கிறோம்.
கொரோனாவுக்கு முன்பு தொலைக்காட்சி போன்ற வெகுஐன ஊடகங்கள் வழியாகவும், கொரோனாவின் போதும், தற்போதும் செல்போன் உதவியுடன் சமூக ஊடகங்கள் வழியாக கற்றுக் கொள்கின்றனர்.
இந்த அனுபவங்களின் ஊடாகவே பால் வேறுபாடு, வர்க்கம், ஜாதி, மக்களாட்சி போன்ற கருத்துகள் குறித்த தம் முடிவுகளைக் குழந்தைகள் எட்டுகின்றனர். அதே அனுபவங்கள் தொடரும்போது இக்கருத்துகள் நெறியாக, முன்முடிவுகளாக மாறிவிடுகிறது.
இந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் மேல் இருக்கும். கல்வி ஆண்டின் தொடக்கம். ஜீன் மாதம் . அட்மிசன் நேரம். குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது என்பது சவாலான காரியம். அதுவும் தமிழ் வழிக் கல்விக்கு குழந்தைகளைச் சேர்ப்பது கடினமான காரியம்.
இன்று தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது அதே போன்று அரசுத்துறைகளின் வேலை வாய்ப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.
மேலும், ரூ.1000 உதவித்தொகை, காலைச் சிற்றுண்டி ஆகியவை தொடர் அறிவிப்புகளாக வெளிவந்து மாணவர்களை அரசு பள்ளி நோக்கி ஈர்க்க முன்னெடுப்புகளைச் செய்துவருகிறது. உண்மையில் இச்செயல் பாராட்டுக்குரியது.
இவை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் பொருந்துமா? தெளிவு இல்லை. ஆசிரியர்களைத் தக்க வைக்க அரசு உதவிப்பெறும் பள்ளிகள் பல ஆண்டுகளாக போராடிவருகின்றன.
இன்று, பணிநிரவல் காரணமாக அரசு பள்ளிகளில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி என்பதால் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையில் சரிவர முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதில்லை.
இதனால், பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசு இன்னும் உணரவில்லை. பெரும்பாலும் இதுமாதிரியான பணிமாறுதலில் அந்தந்த ஆசிரியர்கள் அந்தந்தச் சரக அளவில் கூட பணிமாறுதல் பெறுவதில்லை.
அந்தச் சரகத்திலுள்ள மாணவர்கள் நிலை என்ன? என்பதைக் குறித்த முழுத்தகவல்களை அரசு கவனத்தில் கொண்டால், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்துவதாக இருப்பதை உணரலாம்.
அதைத்தவிர்க்க, அரசு உதவிப்பெறும் பள்ளிகளையும், அரசு பள்ளிகளைப்போல் பாவிக்கும் மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு அறிவிப்புகள் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்ற தெளிவு வேண்டும்.
சரி விசயத்திற்கு வருவோம்.
எனது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி என்னிடம் தயங்கியபடி வந்தாள். என்ன தயங்கி நிக்கிறே எனக் கேட்டேன். ” சார், ஜந்தாம் வகுப்பு டீச்சர் கூப்பிட்டாங்க. மூன்றாம் வகுப்பு படிக்கும் கார்த்திகா உனக்கு சொந்தமான்னு கேட்டாங்க. இல்லை. தெரிஞ்சவங்க. எங்க பக்கத்து வீடுன்னு சொன்னேன்.
அவுங்க அம்மாவை வரச்சொல்லுன்னு சொன்னாங்க. அவுங்க வேலைக்குப் போறாங்கன்னு சொன்னேன். வேலைக்கு போகணும்ன்னு சொன்னாங்கன்னா பேச சொல்லுன்னு சொன்னாங்க. அப்படி இல்லைன்னா அவுங்க சாதி என்னன்னு கேட்டு வான்னு சொன்னாங்க.
சாதின்னா என்ன சார்? ” எனக் கேட்டாள். அருகில் நின்றிருந்த மற்றொரு மாணவி , ” ஏய் ! இது கூடவா தெரியாது. என்ன ஆளுங்கன்னு கேட்கிறாங்க. நானு , ப்ரியா, சுரேஷ் எல்லாம் தேவமார். நீங்க ?” என்றவள், ” ஓ ! அதுவா.” எனக் கடந்தாள்.
நமது குழந்தைகள் பாகுபாடு காட்டப்படும் உறவுகளிலேதான் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள்.
அவளது முன்முடிவு என்னவாக இருக்கும்? ஆசிரியரின் பங்கு என்ன?
பள்ளிக்கூடம் சமத்துவம், சமூகநீதி மற்றும் பல்வகையான சமூக நிலைக்கு மதிப்புக் கொடுக்கின்ற ஒரு பொது இடமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மாணவர்களின் மதிப்பும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இதற்காக ஆசிரியர் எந்தவித சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளத்தேவையில்லை. மாணவர்களை வேறுபடுத்திப்பார்க்காமல் ,அவர்களிடையே சமத்துவத்தை வளர்ப்பதே ஆசிரியரின் முக்கிய பணி ஆக இருக்க வேண்டும்.
பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதும் மாணவர்கள் தங்குதடையின்றி கேள்வி கேட்கும் இடமாகவும், ஆசிரியரோடும் , மற்ற மாணவர்களோடும் உரையாடும் இடமாகவும் வகுப்பறையை வைத்துக் கொள்ள ஆசிரியர் முயல வேண்டும்.
தங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், சந்தேகங்களைத் தீர்த்து வைத்தல், கேள்விகளைக் கேட்டல் ஆகியவற்றிற்கு இடமளித்து குழந்தைகளை படிப்பில் ஈடுபடுத்துபவராக ஆசிரியர் இருக்க வேண்டும்.
இன்றைய வகுப்பறை எப்படி உள்ளது?
இன்று வகுப்பறைகள் ஒரு போட்டாபோட்டி மனப்பான்மையையே உருவாக்குபவையாக உள்ளன. உண்மையான பங்கேற்பு இல்லை.
பொதுமை, மக்களாட்சி, மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகிய பண்பாட்டு நெறிகளை உயிர்துடிப்புள்ளதாக மாற்றும் பெரும் பொறுப்பு பங்கேற்பின் இலக்கு ஆகும். கலைத்திட்டம், பாடத்திட்டம் முதலியவை வடிவமைக்கும்போதும், கற்றலின் எல்லா நிலைப்பாடுகளிலும் பங்கேற்பை பிணைக்கப்பட வேண்டும்.
கல்வி ஓர் அரசின் உள்மனதை வெளிப்படுத்துவதல்ல. மக்களாட்சி செயல்பாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் அனுபவத்தை ஏற்படுத்தி தரவது ஆகும். .ஆகவே, ஆசிரியர்கள் அந்த அனுபவத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர முயலவேண்டும்.
தர்ஷனுக்கான பதில், ” அனைத்து செயல்பாடுகளிலும் (பங்கேற்க) கலந்து கொள்ளச் செய்வதன் வழி அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். அதன்வழியாக அவர்களை மேம்படுத்துகிறேன்.”
பங்கேற்பு என்பது உள்ளபடியே ஒதுக்கப்பட்ட மற்றும் வலிமையற்றோரை ஆற்றல் பெற்றவராக மேம்படுத்துதல் என்பதாகும். அனைவருக்கும் நீதி, விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற எதிர்பார்ப்புடன் விளங்கும் இந்திய கனவான பொதுமை, மக்களாட்சி, மதநல்லிணக்கனம் ஆகியவை மெய்ப்பட வேண்டுமெனில் குழந்தைகளின் பங்கேற்பு அவசியம்.
அதுவே முதன்மையானது. அதற்கான முதல்படியை உருக்கித்தர ஆசிரியர்கள் முயல வேண்டும். முயல்வோம்.
க.சரவணன், மதுரை.
Leave a Reply