கல்வி உயர : (பாகம்-6) கலைக்கல்வி தேவையா?

Share Button

கலைக் கல்வியின் அவசியத்தை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

கலைக்கல்வி நமது பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதுடன், வகுப்பறையை உயிரோட்டத்துடன் பாதுகாக்க உதவி செய்யும்.

இன்னும் கலைகளை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்க்காமல், குழந்தைகளின் திறமையாக பார்க்க ஆசிரியர்கள் பழக வேண்டும்.

கலைகள் மதச்சார்பின்மைக்கும் , பன்முக கலாச்சாரத்திற்கும் உதாரணமாக திகழ்வதுடன், அனைத்து பாடங்களையும் போதிக்கும் கருவி ஆகும் என்பதை உணர்ந்து அதனை வகுப்பறையில் செயல்படுத்த வேண்டும்.

கற்பிப்பதை விட கற்றலுக்கு முக்கியம் தர ஆசிரியர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். விவாதப்பதற்கு, பங்கேற்பதற்கு, அனுபவத்தை பகிர்வதற்கான இடமாக வகுப்பறை திகழ வேண்டும். கலைக்கல்வியும் அவ்வாறே கற்பிக்கப்பட வேண்டும்.

இசை, நடனம், நாடகம், ஓவியம் போன்றவை தனிப்பட்ட திறமைகளாக வளர்த்தெடுத்தாலும், பள்ளி பருவத்திலிருந்து தொடர்ந்து கற்றுக் கொடுப்பதன் வழியே சமுகத்தை சிந்தித்து புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுபவை என்பதை ஆசிரியர் மட்டுமின்றி ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.

ஆசிரியர்கள் கலைகளைக் கற்றுக் கொள்வது காலத்தின் அவசியம். ஏனெனில், தங்களை வளர்த்துக் கொள்வதன் வழியே, குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும்.

குழந்தைகள் பலதரப்பட்ட திறமைகள் உடையவர்கள். வகுப்பறை பன்முகத்தன்மை கொண்டது. பல்வேறு குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் வேறுபாடின்றி இணைந்து பழகி செயல்பட வைக்க வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. அதற்கு கலைக்கல்வி உதவும்.

ஓவியம் தொடக்க நிலையோடு முற்றுப்பெற்றுவிடுகிறது.அங்கும், குழந்தைகளுக்கு போதுமான நேரம் ஒதுக்கி வரைய பயிற்சி அளிப்பதும், வரையவும் விடுவதில்லை. இடைநிலை மற்றும் மேனிலை வகுப்புகளில் கலைக்கல்வியின் அவசியம் முக்கியமானது. அவை மாணவர்களின் படைப்புத் திறனுக்கு இடமளிக்கும் என்பதை உணரவேண்டும்.

தமிழக அரசு கல்விக் கொள்கை அமைக்கும் இவ்வேளையில் கலைக்கல்வியின் அவசியத்தை உணர்ந்து, தொடக்க கல்வியில் இருந்து மேனிலை வகுப்புவரை இசை, நடனம், ஓவியம், நாடகம் போன்ற கலைகளை கொண்டு செல்வதற்கான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

கலைக்கல்விக்காக ஒன்றரை மணி நேரம் பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். அதற்கான ஆசிரியர்களை பணி நியமணம் செய்ய வேண்டும்.

அப்படி ஒவ்வொரு பள்ளிகளிலும் அதற்கான ஆசிரியர்களை நியமிக்க (நிதி சார்ந்த பிரச்சனைகளால்) வாய்ப்பு இல்லை எனில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பண்பாட்டு கூடங்கள் அமைத்து, வருடத்தில் முப்பது நாட்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அதற்கான நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் பெற்ற பயிற்சிகளை பாடத்துடன் இணைந்து நடைமுறைபடுத்த வேண்டும். சிறத்த படைப்புகளை வீடியோவாக்கி எமிஸ் Teachers platform ல் பதிவேற்றம் செய்ய வலியுறுத்த வேண்டும்.

பிற ஆசிரியர்கள் அந்த அனுபவத்தினை பெற வாய்ப்பாக அமையும். சிறந்த கலை படைப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை அரசு ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

க.சரவணன்,
மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *