பச்சைத்துண்டுகளால் நிரம்பிய அரங்கம், திரும்பிப் பார்த்த தமிழ்நாடு!
சென்னை :-
மாணவர்களையும் மரங்களையும் சரியாக வளர்த்துவிட்டால் இந்த தேசம் பிழைத்துக்கொள்ளும் என்பதற்கிணங்க மாணவர்களை வளர்க்கும் SRM பல்கலைக்கழகமும், மரங்களை வளர்க்கும் விவசாயிகளும் ஒன்றிணைந்து தமிழகத்தின் தலைநகரில் சென்னை அக்ரி எக்ஸ்போ 2022 என்னும் பெயரில் பிரம்மாண்ட விவசாயிகளுக்கான கருத்தரங்கும், கண்காட்சியும் மூன்றுநாட்கள் மிகப்பிரம்மாண்டமாக SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை அக்ரி எக்ஸ்போ 2022
தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்களில் அக்ரி எக்ஸ்போ என்னும் பெயரில் விவசாயக் கண்காட்சிகள் நடந்துள்ளன.
ஆனால், முதன்முறையாக விவசாயிகளே ஒன்றுசேர்ந்து விவசாயிகளால், விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட ஒரு கண்காட்சி என்றால் அது சென்னை அக்ரி எக்ஸ்போ 2022 தான் என்னும் வகையில் விவசாயிகளால் நிரம்பி வழிந்தது அரங்கம்.
உழைக்கின்ற விவசாயிகள் உயர வேண்டும். அவர்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலை வேண்டும் என்பதை மையப்படுத்தி நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை, வருமானவரித்துறை கூடுதல் இயக்குனர் நந்தகுமார், கவிப்பேரரசு வைரமுத்து, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் மருத்துவர் சிவராமன், வேளாண்பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் ராமசாமி, தமிழ்ப் பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் பாலசுப்பிரமணியம், கீழடி ஆய்வுக்குழுத் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணன், மேனாள் வானிலை இயக்குநர் ரமணன், இந்து பத்திரிகையின் மூத்த செய்தியாளத் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சிகரம்சதிஷ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜ், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு அமைப்பின் ஓசை காளிதாஸ் எனப் பல்துறை சார்ந்த வல்லுநர்களும், பல்துறை ஆளுமைகளும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.
200 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளுடன் நடைபெற்ற, இந்நிகழ்வில் பாரம்பரிய கலை நிகழ்வுகள், உணவுத் திருவிழா, வேளாண் பொருள் கண்காட்சிகள், வேளாண் எந்திரங்களின் கண்காட்சிகள், ஆளுமைகளின் கருத்தரங்குகள் என மூன்றுநாட்களும் முத்தாய்ப்பாக இருந்தது.
மூன்றுநாட்களின் நிகழ்வுகளிலும் விவசாயிகள், வேளாண் ஆர்வலர்கள், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்கள் என மாநிலம் முழுவதிலுமிருந்து பரவலாகப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
தமிழ்நாட்டின் தலைநகருக்கு அருகாமையில், விவசாயிகளை ஒருங்கிணைத்து மொத்த அரங்கத்தையும் பச்சைத்துண்டுகளால் நிரம்பிய அரங்காக மாற்றிச் சாதித்த விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் விழி விரிய வைத்தார்.
வேளாண் பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்குமான ஒப்பந்தம் SRM பல்கலைக்கழக வேந்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
அவர் தொடர்ந்து பேசும்பொழுது விவசாயிகள் இந்நாட்டில் வாழ்வதோடு மட்டுமல்லாமல்,
நாட்டை ஆளுகின்ற இடத்திற்கும் முன்னேறி வர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் வளர்ச்சியில் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தததாகவும், சென்னை அக்ரி எக்ஸ்போ 2022 ன் வெற்றியாகவும் அங்குள்ள விவசாயிகளால் கொண்டாடப்பட்டதை உணர முடிந்தது.
Leave a Reply