எழுச்சி தந்த ஏந்தல் : இளைஞர்களின் அடையாளமாக இருந்தவர் விவேகானந்தர்
இந்தியாவில் எத்தனை எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் இருந்திருக்கின்றபோது ஒரு ஆன்மீகவாதியின் பிறந்த நாளை எப்படி தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்?
அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொல்லிவிட்டார்? என்ற கேள்விகள் நமக்குள்ளே எழலாம். கல்வியின் முக்கியத்துவம் தொடங்கி பெண்மை கொண்டாடப்பட வேண்டியதின் அவசியம்வரை இளைஞர்களுக்குச் சிறந்த கருத்துக்களைக் கூறியவர் விவேகானந்தர்.
இளைஞர்களின் அடையாளமாக இருந்தவர் விவேகானந்தர். அவரின் சிந்தனைகள் இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும். அவருடைய சிந்தனைகள் சில:
இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கைக் கொண்டிருந்தார் விவேகானந்தர். ‘இளைஞர்களின் முன்னேற்றம் நமது நாட்டின் முன்னேற்றம்’ என்று கூறியவர் சுவாமி விவேகானந்தர். ‘நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன்’ என்றவர் விவேகானந்தர்.
இதிலிருந்தே அவர் இளைஞர்கள் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது தெளிவாகிறது.
‘செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.
அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்’ என்று கூறியவர் விவேகானந்தர். நமது நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பதை முழுமையாக நம்பியவர்.
பொறுப்புணர்ச்சி வேண்டும் ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்’ என்று இளைஞர்களுக்கு ஊக்கமூட்டுகிறார்.
ஆனால் அதற்கான முயற்சி தேவை என்பதை வலியுறுத்துகிறார். ‘உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன’ என்பதை வலியுறுத்துகிறார்.
ஆகவே இளைஞர்கள் அவற்றைப் பயன்படுத்தி தங்களுக்கான நல்ல எதிகாலத்தை உருவக்கிக் கொள்ள வேண்டும்.
“துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல” என்கிறார்.
‘நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு’ என்ற பொறுப்புணர்ச்சி இளைஞர்களுக்கு வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
அறிவே அறம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோட கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார். அக்கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையையும் வெளிப்படுத்துகிறார்.
“வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல.
வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி” என்றவர் மேலும், “வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல.
தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி” என்றார்.
அச்சம் தவிர் கட்டளையிடும் பதவி வேண்டுமென்றால் அச்சத்தைத் தவிர்க்கச் சொல்கிறார்.
“எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே.
உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவன் என்பதை நம்பு. பலவீனமானவன் என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து.
ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும் வரை ஓயாதே!” என்று அறைகூவல் விடுத்தார். இவ்வரிகள் இளைஞர்களுக்கு எக்காலமும் பொருந்தும்; உத்வேகம் ஊட்டும்.
ஆளுமைத் திறனை வளர்த்திடு ‘கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்’ என்ற அவரது அறிவுரை இன்றைய இளைஞர்களும் ஏற்றுப் போற்றத் தக்கது.
பதவி வேண்டுமென்றால் பணிவு வேண்டும் என்கிறார். ‘உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன.
‘உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும்’ என்று இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார். ‘ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.
அதுவே ஆன்மிகத்தில் புதிய விடியல்’ என்றார் சுவாமி விவேகானந்தர். பலத்தைக் கொண்டு, பலவீனத்தை போக்க வேண்டும். வந்தோம் இருந்தோம் என்று போவது வாழ்க்கை அல்ல என்பதைப் புரியவைத்தவர் சுவாமி விவேகானந்தர்.
மனிதனின் அளப்பரிய ஆற்றலை வளர்ப்பதன்மூலம், அவன் எத்தகைய காரியங்களையும் செய்யக் கூடியவன் என்றவர்.
உடல் வலிமையை வளர்த்திடு இளைஞர்கள் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள மனவலிமையோடு உடல் வலிமையும் வேண்டும் என்கிறார்.
‘உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்’ என்கிறார். “கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்” என்கிற அவரது வரிகளும், ‘இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்’, என்கிற அவரது வரிகளும் ‘பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்’ என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
சமூகப் பொறுப்புணர்வும் அன்பின் அவசியமும் இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு வேண்டும் என்கிறார். இளைஞர்களை சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க அழைப்பு விடுத்தார்.
“நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே! தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்” என்றார்.
‘பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. உன் இதயம் சொல்வதைச் செய்; வெற்றியோ தோல்வியோ அதைத் தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு’ என்றும், ‘பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன.
மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல’ என்றும் மனித வாழ்வின் உன்னதத்தை எடுத்துரைக்கிறார்.
‘எந்த குடும்பத்தில் பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்’ என்ற அவரது இந்த தீர்க்க தரிசனம் யாருக்கு வரும்? கொரோனா காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறை போன்றவற்றால் பெண்களைக் கொடுமைப் படுத்தும் ஆண்கள் இதை உணர வேண்டும்.
இப்படி கல்வியில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம், பெண்மை கொண்டாடப் பட வேண்டியதின் அவசியம்வரை இளைஞர்களுக்குச் சிறந்த கருத்துக்களைக் கூறி முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் விவேகானந்தர்.
அவருடைய சிந்தனைகளைப் பின்பற்றத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும் என்றால் மிகையில்லை.
Leave a Reply