யார் அந்த 4 பேர் : (ஊக்கமது கைவிடேல் : Episode-8)
”தலை குனிந்து என்னைப்பார், உன்னைத் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறேன்”
போதும் என நொந்து புதியவாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள், இது இங்கர்சாலின் மொழி. இதன் உண்மை உணர, புத்தகத்திடம் கேட்டால்… ”தலைகுனிந்து என்னைப்பார், உன்னைத் தலைநிமிர்ந்து நடக்கவைக்கிறேன்” என்கிறது.
நாம் என்ன படிக்கிறோம்? சற்று மெதுவாகக்கேட்போம்… சற்று பின்னோக்கிச் செல்லுங்களேன்…
இன்று ஒரு பட்டியல் செய்வோம். எத்துனைபேருக்கு நாம் உதவி செய்திருக்கிறோம் என்றும், தொல்லை கொடுத்திருக்கிறோம் என்றும். உதவி செய்திருந்தால் நல்லது, இல்லையென்றால், தொல்லை செய்யாமல் இருந்திருக்கிறோமா எனப் பார்ப்போம். ஏனெனில் இதுவும் அறமே.
ஒருமரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும்போது, தவறி கீழே நின்ற ஓநாயின் மீது விழுந்தது. ஓநாய் அந்த அணிலை சாப்பிட முயற்சிக்கும்போது, தன்னை விட்டுவிடுமாறு அணில் கேட்டது. ஓநாயோ, ‘விடுகிறேன். ஆனால் நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியான விடையளிக்க வேண்டும்’ என ஒரு நிபந்தனை விதித்தது. சம்மதித்த அணில், ”உன் பிடியில் இருக்கும்போது நான் எப்படி பதிலளிக்க முடியும்,
என்னை விட்டால்தானே’ எனக் கேட்க, ஓநாயும் தனது பிடியைத் தளரவிட்டது.
உடனே, அங்கிருந்து தப்பிய அணில், ஒரு மரத்தின்மேல் ஏறிக்கொண்டு, ”இப்போது உன் கேள்வியைக் கேள்” எனச்சொல்ல, ”நான் உன்னைவிட பலம் கொண்ட மிருகம், ஆனால் என்னைவிட, நீ எப்பவும் மகிழ்ச்சியாக எப்போதும் மரத்தில் விளையாடிக் கொண்டே இருக்கிறாயே, இது எப்படி?” எனக் கேட்டது ஓநாய்.
அணில் மறுமொழியில், ”நீ எப்போதும் கொடியச் செயல்களைச் செய்கிறாய், அது உன் மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது, ஆதலால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் நானோ, யாருக்கும் எந்தத் தீங்கும் எப்போதும் கொடுப்பதில்லை, தானாகப் பழுத்தப் பழங்களை மட்டுமே மரத்திலிருந்து
சாப்பிடுகிறேன், அதனால் ஏன் மனதில் எப்போதும் கவலை இல்லை, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றது.
இதில் இலைமறையாய் ”உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் பண்ணாதே” என்கிற உன்னதமான வாக்கியம் இருக்கிறது. இக்கதைபோல் இல்லாமல், நமக்கு உதவியும் செய்யாமல் எப்பொழுதும் துன்பங்களை மட்டும் தருபவர்களிடத்தில் நாம் என்ன செய்வது என்கிற வினா சில பேர்களுக்கு வரலாம்..அவர்களுக்காக: நமக்குத் துன்பம் தருகிறவர்களுக்கு, அவர்கள் வெட்கப்படும்படி, நாம் நல்லது செய்வோமாக.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்-குறள் 314
இன்னும் தொடரும்…
நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M
தன்முனைப்புப் பேச்சாளர் / மதச் சொற்பொழிவாளர் / தத்துவப் பேச்சாளர்
Leave a Reply