எது கவிதை
எது கவிதை
……………………
விடியாத இரவுக்கு வானம் எதுக்கு? உதிரா பூவுக்கு வாசம் எதுக்கு? மண்ணில் தவழா நீருக்கு வாழ்வு எதுக்கு?என அடுக்கிக் கொண்டே போகலாம் வாழ்க்கையின் தத்துவத்தை.
தத்துவத்தோடு கூடிய அழகு தான் கவிதை. கவிதை மற்ற இலக்தியத்தை விட இதற்கு கூர் அதிகம். சொல்ல வந்ததை மூன்று வரிகளில் அழுத்தமாகச் சொல்லி விடலாம்.
சுதந்திரத்தோடு இயங்கும் எதுவும் தோற்றதில்லை. அதற்குக் கட்டுப்பாடு என்பதே கிடையாது. காட்டில் தனித்து வாழும் குயிலின் கத்தலில் சுதந்திரம் ஏதேனும் பாதிக்கப்படுகிறதா?
சுதந்திரத்தோடு இருந்தால் யானையின் பிளிறல் சத்தம் உரத்துக் கேட்கும். சுதந்திரப் பட்டாம்பூச்சிக் கூட தனது வண்ணத்தைக் காற்றிலே வரைந்து செல்லும். கட்டுப்படாத (சுதந்திர ) சிந்தனையின் வீச்சு வானளவு அகலமடைந்து கிடக்கும் என்பது உண்மை.
புத்தகத்தை மட்டுமே படித்து கவிதை எழுத முற்பட்டால் அது கண்ணாடி குடுவைக்குள் தீயை அடைப்பது போன்றது. வெளிச்சம் வெளியே வராது. சுதந்திரத்துடன் அழகையும் , அழுக்கையும் ரசிப்பவன் தான் இறவா காவியத்தை இயற்றுவான்.
கவிஞன் பிறப்பதில்லை உருவாகிறான். நேசிப்பவன் தான் கவிஞன். மண்ணை முத்தமிடும் மழைத் துளியாகவும்… மலரிலே உட்கார்ந்து வண்டுக்குக் கொடுக்கும் தேனாகவும்… நீர் போல் வரப்புகளை முத்தமிட்டு செல்பவனாகவும்… கவிஞன் இருக்க வேண்டும்.
வீட்டுச் சிறையில் இருந்து வாடும் பூக்களாக கவிஞன் இருக்கக் கூடாது. காட்டுப்பூவாக இருந்து மணம் பரப்பி சுதந்திரக் காற்றோடு கை குலுக்க வேண்டும்.
கவிதை ஏழையின் பாக்கெட்டில் சிணுங்கி மகிழும் சில்லறைகளாக இருக்க வேண்டும். கனா காணும் சாதாரணன் வாழ்வைக் கூற வேண்டும். மகரந்தத்திற்கு ஏங்கும் பூவையும்… ஏன்? மலராத மொட்டை பற்றியும் கவிதை ஆழ கூற வேண்டும்.
மூன்று வரிகளில் நினைத்ததைச் சொல்ல முடியுமா என்றால்… கண்டிப்பாக முடியும். இரவு நேரம் ஆகாயத்தைப் பார்த்து அதிசயித்து எழுத வேண்டும். உன்னுள் உள்ள சில உணர்வுகளின் நீட்சியாகவும் இருக்க வேண்டும்.
தனித்து பறக்கும் பறவையிடம் பேச முற்பட வேண்டும். அது சொல்லும் வாழ்க்கை அனுபவத்தைக் கவிதையாக்க வேண்டும்.
காய்ந்த சருகினையும் வரப்பு நீரையும் காதலையும் காமத்தையும் வட்ட நிலாவினையும் பாடம் புகட்டும்
தன்னம்பிக்கையினையும் பேச வேண்டும்.
கு. நிருபன் குமார்
Leave a Reply