எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

Share Button
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
★★★★★★★★★★★★★★★★★★
யாருக்கெல்லாம் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். செய்த செயல்களுக்குப் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கா விட்டால் அதனால் ஏமாற்றமும், யாருக்காக செய்தோமோ அவர்களின் மீது கோபமும் வரும்!
இது ஒருவகையான மன ஏமாற்றம். ஆண், பெண் யாராக இருந்தாலும்அவர்கள் விரும்பிய வாழ்வும், சுகமும் கிடைக்கா விட்டால் மிகுந்த ஏமாற்றம். இது ஒரு வகையான வாழ்வின் ஏமாற்றம்.
தான் வாழ்ந்து கொண்டிருக்கிற நாட்களில் நினைத்தபடியோ அல்லது திட்டமிட்டபடியோ நடக்காவிடில் ஏமாற்றம். இது ஒருவர் தான் கண்ட கனவின் ஏமாற்றமே! காதலில் ஏமாற்றம், நட்பில் ஏமாற்றம், படிப்பில் ஏமாற்றம், உறவில் ஏமாற்றம், குழந்தைகளின் மீது ஏமாற்றம், நம்பிக்கையில் ஏமாற்றம், நாணயத்தில் ஏமாற்றம், சத்தியத்தில் ஏமாற்றம், பொருள் ஏமாற்றம், சுகத்தில் ஏமாற்றம், உண்மையில் ஏமாற்றம்
இப்படி மனித வாழ்க்கையின் ஏமாற்றங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒருவரின் ஏமாற்றம் மற்றவொருக்கு சுகமாகவும் கூடத் தோன்றலாம். இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
மனித இனம் இப்படித்தான் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.
என்னுடைய மகன், மகள் நன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துப் பாடத்திலும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு!
அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே முதல் இடத்தில் வருவார்கள் என்று அதிகம் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள் பெற்றோர்கள். தேர்வு முடிவு வந்தது! பார்த்தால் அவர்கள் எதிர்பார்த்தற்கு மாறாக இருந்தது.
இதனைக் கண்டதும் பெற்றோர்களால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை! மிகுந்த வேதனை அடைந்தார்கள். தங்களது குழந்தைகளைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்!
நாம் எல்லோரும் கற்பனையாக எப்பொழுதும் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கின்றோம். அப்படி வசதியாக இருக்கணும், இந்த மாளிகையில் வசிக்கணும், இன்ன வாங்கணும் என்ற அதிகப்படியான ஆசைகளை மனதில் போட்டு வைத்து இருப்போம். அவைகளை அடையாதபோது மனம் துயரம் கொள்கிறது. ஏமாற்றத்தில் வாடுகிறது.
எனவே அதீத எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தரும் என்பது இயற்கையின் நியதி என்பதை நினைவில் கொள்ள மறந்து விடுகிறோம். அதிகமாக எதனையும் எதிர்பார்ப்பதால் அது கிடைக்காதபோது மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகிறோம்.
இது ஒரு உளமார்ந்த ஏமாற்றம். பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜென்னி கால்மன்ட் என்ற பெண்மணி 122 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்தார் என்று அண்மையில் ஒரு செய்தி பார்த்தேன். 2.12.1875 முதல் 04.08.1997 வரை மகிழ்ச்சியாக வாழ்ந்தவர் அவர்.
தனது கடைசி பனிரண்டு ஆண்டுகள் சாய்வு நாற்காலியில் இருந்தபடியே வாழ்க்கையை ஓட்டினார். இறுதி ஐந்து ஆண்டுகள் அவருக்கு காதுகள் கேட்க வில்லை. கண்ணும் சரியாக தெரியாமல் போயிற்று.
ஆனாலும் அந்தப் பெண்மணி இறுதிவரை மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து இருக்கிறார்.
இவரது காலத்தின் போதே மூன்று மகள்களும் பேரன், பேத்திகளும் கூட இவருக்கு முன்பாகவே இறந்து விட்டார்கள் என்ற செய்தியைப் படித்த பொழுது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
122 ஆண்டுகள், தான் வாழ்ந்ததற்கான காரணத்தை அவர் கூறியதைக் கேளுங்கள். எனக்கென வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும்,எதை நினைந்தும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததே காரணம் என்று சொல்லி கலகலவெனச் சிரித்தாராம்.
சுயநலம் சிறிதும் இல்லாமல், புகழ், பணம், உறவுகளின் தன்னலம் என்னும் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றியமைக்கும் சக்தி அவனிடம் இருந்து வெளிப்படும் எனக் குறிப்பிட்டு இருந்தார்கள்.
நண்பர்களே… நாம் எதிலும் அதிக எதிர்பார்ப்போடு இல்லாமல் இருந்தால் நமக்கு ஏமாற்றமே இருக்காது .
அதிக எதிர் பார்ப்பும், எதைப்பற்றியும் கவலையும் இல்லாத மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால்,எந்த இடத்தில் இருந்தாலும் பதற்றம் என்பதே இருக்காது.
பதற்றமில்லாத இடத்தில் கவனம் சிதறாது என்பது பொதுவான சித்தாந்தம். கவனம் சிதறாதபோது, எந்தச் செயலைச் செய்தாலும் செய்வதில் மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் இருந்தால் நமது உடலில் என்றும் ஆரோக்கியம் கிடைக்கும்.
அதிகப்படியான எதிர்பார்ப்பு இல்லாமல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட கற்றுக் கொள்வோம். மிகுந்த பாக்கியத்துடன் இந்த மானிடப் பிறவியைப் பெற்று இருக்கிறோம். எந்தவொரு செயலிலும் நமக்கெனத் தனி எதிர்பார்ப்பு இல்லாமல் ஆழ்ந்து ஈடுபட வேண்டும்.
எத்தனை வேலைகள் இருந்தாலும் கொஞ்ச நேரமாவது ஏதாவதொரு பொதுப் பணி செய்வதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். “உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன், என்னையும் உன்னில் இட்டேன்”
எனத் திவ்யப் பிரபந்தம் பேசியதை நினைவில் கொண்டு மகிழ்வுடன் வாழ்வோம்..!
– அரங்க சுப்ரமணியம்
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *