பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோரின் கல்வித் தகுதிகளைப் பறித்து, தகுதியிழப்பு செய்ய வேண்டும் – கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை
பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோரின் கல்வித் தகுதிகளைப் பறித்து, தகுதியிழப்பு செய்ய வேண்டும் – கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை.
பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோரின் கல்வித் தகுதிகளைப் பறித்து, தகுதியிழப்பு செய்ய வேண்டும்.
அதற்கான உடனடிச் சட்டம் வேண்டி தமிழ்நாடு அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை வைத்துள்ளது.
இன்றைக்கு தினசரி செய்தித் தாள்களைப் பார்க்கும் பொழுது, சாலையில் நடைபெறும் விபத்துக்களைப்போல, ஆங்கங்கே நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சார்ந்த செய்திகளையும் பார்க்க நேர்கின்றது.
அதிலும் கல்வி நிலையங்களில் பாலியல் குற்றச்சாட்டு என்பது அதிர்ச்சிகரமானதாக இருக்கின்றது. இதனைச் சாதாரணமான பிரச்சினையாகப் பார்க்க இயலாது.
பெற்றோராக இருக்க வேண்டிய இடத்தில், பெரும்பாவச் செயல்களில் ஈடுபடுவதென்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
கல்வி நிலையங்களைப் பொறுத்தவரையில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அதிகாரிகள், ஆசிரியர்கள் எவராயினும் அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் உடனடிப் பணி நீக்கம் செய்யப்படுவதுடன் அவர்களின் பணப்பலன்களை நிறுத்தி வைக்கவும் சட்டமுன்வடிவைக் கொண்டுவர வேண்டும்.
குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்கள் தனியார்கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது கல்வித்தகுதி முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு தகுதியிழப்பு செய்யப்பட வேண்டும்.
குற்றவாளிக்கு நிர்வாகம் துணைபோயிருந்தால் அந்நிறுவனத்தின் அங்கீகாரத்தைத் திரும்பப்பெற வேண்டும்.
அத்துடன் அபராதத்துடன் கூடிய, சிறைத் தண்டனையும் வழங்கும் வகையில் உடனடியாகச் சட்ட முன்வடிவை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை ஊடகங்களில் வெளியிடாமல், தவறிழைத்தவரைப் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடச் செய்யும் வகையில் வரைமுறைப்படுத்த வேண்டும்.
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்
Leave a Reply