கனடாவில் இனிய நந்தவனம் சிறப்பிதழ் வெளியீடு

Share Button
கனடா :-
இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு : 
சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில் மாலை 7:00 மணியளவில் மிகவும் சிறப்பாக வெளியிடப்பெற்றது.
கோவிட் -19 கட்டுப்பாடு விதிகளின்படி இருக்கை வசதிகள் போடப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். இரண்டு தடுப்பூசியும் பெற்றுக் கொண்டவர்களே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வை கனடா உதயன் ஆசிரியரும், இனிய நந்தவனம் ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது. விழாத் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரையைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம் பெற்றன.
முதல் பிரதியை… குரு அரவிந்தன் வெளியிட சாந்தா பஞ்சலிங்கம் பெற்றுக்கொண்டார்
எழுத்தாளர் திரு. வாகீசன், கவிதா செந்தில், கணபதி ரவீந்திரன் ஆகியோரின் உரைகள் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் நூல் பற்றிய ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து இனிய நந்தவனம் கனடா மலர் வெளியிடப் பெற்றது. முதற் பிரதியை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களிடம் இருந்து வர்த்தகப் பிரமுகரும், கனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை வர்த்தகப் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கனடா சிறப்பிதழில் சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், கட்டுரைகள், நூல் ஆய்வுரை, நேர்காணல், உரையாடல், சேவைப்பாராட்டு, கனடிய தமிழர் வர்த்தக சம்மேளத்தின் தலைமையகக் கட்டிடத் திறப்புவிழா செய்தி போன்ற பல ஆக்கங்களும், தகவல்களும் இடம் பெற்றிருந்தன.
செப்ரெம்பர் இதழில் கனடிய கவிஞர்களான கவிஞர் வி. கந்தவனம், கவிஞர் சிவா சின்னத்தம்பி, விருத்தக்கவி வித்தகர் தேசபாரதி வே. இராசலிங்கம், அருட்கவி ஞானகணேசன், கவிஞர் அனலை ஆ. இராசேந்திரம், கவிஞர். க. குமரகுரு, கவிஞர் அகணி சுரேஸ், கவிஞர் வ. ந. கிரிதரன், மட்டுவில் ஞானகுமாரன், சுதர்சன் மற்றும் குரு அரவிந்தனின் சிறுவர் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. அக்ரோபர் மாத சேவைச் சிறப்பிதழிலும் கவிஞர் திருமதி பவானி தர்மகுலசிங்கம், கவிஞர் மா. சித்திவினாயகம், கவிஞர் சி. சண்முகராஜா ஆகிய கனடியக் கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.
கலாநிதி மைதிலி தயாநிதி, மு. முருகேஷ் ஆகியோரது நுல் ஆய்வுக்கட்டுரைகள், எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுடனான நேர்காணல், இந்திராணி நாகேந்திரலிங்கத்துடன் உரையாடல், நூல் நயம், சசிகலா நரேந்திரன் பற்றிய அறிமுகம், மற்றும் ராஜ்ஜா, நாச்சியார், நந்தவனம் சந்திரசேகரன், பா. தென்றல்;, மாலதி சந்திரசேகரன், மு. முருகேஷ் ஆகியோரது ஆக்கங்கள். ஆர். என். லோகேந்திரலிங்கம், மாலினி அரவிந்தன் ஆகியோரது சிறுகதைகள் மேலும் பல ஆக்கங்கள் இந்தக் கனடா சிறப்பிதழில் இடம் பெற்றிருக்கின்றன.
நூல் வெளியீட்டின்பின் சிற்றுண்டிகள் வழங்கப்பெற்றன. அதன்பின் கனடா மலர் பற்றிய பார்வையாளர்களின் கருத்துப் பரிமாறல் இடம் பெற்றது. மலரில் இடம் பெற்ற அகணி சுரேஸ் அவர்களின் பாடல் இப்போது ஒலி வடிவம் பெற்றிருப்பதாக கவிஞர் அகணி சுரேஸ் தெரிவித்தார். குமரகுரு, ஞானகணேசன், இந்திராணி, சசிகலா. சிவா ஆகியோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். உலகமெங்கும் உள்ள ஒவ்வொரு தமிழரின் திறமையையும் இனங்கண்டு அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இனிய நந்தவனம் ஆசிரியரான த. சந்திரசேகரனைப் பலரும் பாராட்டித் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
ஆக்கங்கள் இடம் பெற்றவர்களின் சார்பாக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். அவர் தனது நன்றியுரையில் இந்த விழவை ஏற்பாடு செய்த ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும், உரையாற்றியவர்களுக்கும், சிறப்பாக நடைபெற வருகை தந்தவர்களுக்கும், உதவிகள் வழங்கிய வர்த்தகப் பெருமக்களுக்கும், மண்டபத்தைத் தந்துதவிய பைரவி மியூசிக் அக்கடமி அதிபருக்கும், மற்றும் கனடா சிறப்பு மலரை வெளியிட்டுக் கனடிய படைப்பாளிகளையும், தன்னார்வத் தொண்டர்களையும் உலகறியச் செய்த இனிய நந்தவனம் ஆசிரியர் த. சந்திரசேகரன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இரவு 9:00 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *