ஒரு துளி செயல் இருபதாயிரம் வெற்றுப் பேச்சுக்களைவிட சிறந்தது!

Share Button

நம் பாரத நாடு ஒரு புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இந்நாட்டில் பல புனித நதிகள் பரந்தோடி, நாடு முழுவதும் பண்பாடு, கலாச்சாரம் பரவச் செய்கின்றன.

மேலும், வெவ்வேறு காலங்களில் பல மகான்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஞானிகள், விஞ்ஞானிகள், தேசபக்தர்கள் தோன்றி மக்களின் அறியாமையைப் போக்கி ஞானம் அளித்து அன்பு, அறம், வீரம் போன்ற நற்பண்புகள் வளரவும் வழிகாட்டியாக விளங்கினார்கள்.

இவ்வாறு நம் நாட்டில் தோன்றிய மகான்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர் அவருடைய வரலாற்றை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

விவேகானந்தர், கல்கத்தா மாநகரின் வடக்குப் பகுதியான சிம்லாவில் 1863 ம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ம் தேதியன்று பிறந்தார். இவரது பெற்றோர் விசுவநாத தத்தர், புவனேசுவரி தேவி தம்பதியர் ஆவர்.

இவருக்கு வீரேசுவரன் என்று பெயரிட்டு ‘பிலே’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். குழந்தையான பிலேவை பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட பெண்மணி தினமும் பிலேவிற்குப் பக்தி, வீரக் கதைகள் சொல்வது வழக்கம். அவைகள், பசுமரத்து ஆணிபோல் பிலாவின் மனதில் ஆழமாகப் பதிந்தன.

சிறுவயதிலேயே பிலா வீரம் உள்ளவனாக இருந்தான். ஒரு சின்ன சம்பவம் இதனை விளக்கும். ஒருநாள் தோட்டத்தில் தன் நண்பர்களுடன் பிலா விளையாடிக் கொண்டிருந்தான்.

தோட்டக்காரன் அந்த மரத்திற்குப் பின்னால் போகாதே, பேய் இருக்கும் என்று கூறித் தடுத்தார். மற்றவர்கள் பயந்து ஓடிவிட்டனர். பிலேயோ தோட்டக்காரனிடம் ‘‘அந்தப் பேயைக் காட்டு’’ என்றான். அவன் துணிவைக் கண்ட தோட்டக்காரன் மிரண்டு போனான்.

சிறுவயதிலேயே தன் நண்பர்கள் சிலரை அழைத்து வந்து வீட்டின் ஓர் அறையில் அமர்ந்து ‘‘தியானம்’’ செய்வான். நண்பர்கள் சிறிது நேரத்தில் எழுந்து போய்விடுவார்கள். ஆனால் பிலே நீண்ட நேரம் கண்களை மூடி, தன்னையே மறந்த நிலையில் தியானம் செய்யும் ஆற்றல் படைத்திருந்தான்.

பின்னர், மெட்ரோபாலிட்டன் எனும் பள்ளியில், ‘நரேந்திரநாத்’ என்று பெயரிட்டுச் சேர்க்கப்பட்டான்.

சுருக்கமாக இவனை நரேந்திரன் என்று அழைத்தார்கள். சிறுவனுக்குப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம் இரண்டு பாடங்களையும் படிக்க விருப்பமில்லை. ஆங்கிலம் அந்நியர் மொழி. எனவே தனது தாய்மொழியான வங்காள மொழியில் படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தான்.

பின்னர் பலர் அவனைச் சமாதானப்படுத்தி ஆங்கிலம் படிக்க வைத்தார்கள். அம்மொழியில் நல்ல புலமையும் பெற்றான். நரேந்திரனுக்கு இதிகாசம், இலக்கியம் போன்றவைகளில் விருப்பம் அதிகமாக இருந்தது. பள்ளிப் படிப்பில் தேர்ச்சி அடைந்த நரேந்திரன், அசெம்பிளிகா எனும் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தான்.

பால்ய பருவத்திலேயே இவன் படிப்பு, விளையாட்டு, இசை என்று பல துறைகளில் சிறந்து விளங்கினார்.

உருவமற்ற இறைவனிடத்து நம்பிக்கை என்பதே பிரம்ம சமாஜத்தின் நோக்கமாக இருந்தது. அந்த சமாஜத்தில் நரேந்திரன் இணைந்த பின்னர், அவனுக்குத் தியானம், பஜனை போன்றவற்றில் நாட்டம் கொண்டது. இதனால் அவனுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் சிறந்து விளங்கியது.

மனதை ஒருமுகப்படுத்துவது என்பது நாம் எந்தக் காரியத்தைச் செய்கின்றோமோ, அதில் முழுமனதுடன் ஈடுபடுவதாகும். நரேந்திரன் எந்தப் புத்தகம் படித்தாலும் அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் அவனது மனதில் ஆழப் பதிந்து விடும்.

என்ஸைக்ளோ பீடியா போன்ற பெரிய புத்தகங்களையும் எளிதில் படித்து அதிலுள்ள யாவற்றையும் நினைவில் இருத்தி, பலரையும் வியக்கச் செய்தான். தினமும் தியானம் செய்வதன் மூலம் இவனுக்கு ஏற்பட்ட பலன்கள் திடமான சிந்தை, பக்குவப்பட்ட மனம், அற்புதமான ஞாபக சக்தி.

ஒரு சமயம் இராமகிருஷ்ணர் அங்கு வருகை தந்தபோது, சுரேந்திரபாபு என்ற நண்பர் நரேந்திரனை அவர் முன்னிலையில் பாடல்களைப் பாட அழைத்தார். பாடும் பொழுது நரேந்திரனின் குரல் வளமும், பக்திப் பரவசமும் இராமகிருஷ்ணரை மிகவும் கவர்ந்தது.

எனவே நரேந்திரனிடம் ‘‘ஒருநாள் தட்சிணேசுவரத்திற்கு வா’’ என்று அழைப்பு விடுத்துவிட்டுப் புறப்பட்டார். இதன் பின்னர் தன் படிப்பில் கவனத்தைச் செலுத்தி பி.ஏ., பட்டம் பெற்றான். அச்சமயம், நரேந்திரனின் குடும்பத்தினர் அவனுக்குத் திருமணம் செய்ய அவனுடைய அனுமதியைக் கேட்டனர்.

ஆனால் அவன் தனக்குத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்று முடிவாகக் (உறுதியுடன்) கூறிவிட்டான். நரேந்திரனுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு இருப்பதையறிந்த அவனது உறவினர் ஒருவர் அவனை இராமகிருஷ்ரைச் சந்திக்குமாறு சொல்லி அதனால் அவனுக்கு நன்மை கிடைக்கும் என விளக்கினார்.

இராமகிருஷ்ணரும் நரேந்திரனைச் சீடராக ஏற்றுக் கொண்டார். நரேந்திரனுக்குத் தியானம், ஜபம் போன்றவைகளைக் கற்பித்தார். அச்சிறுவனும் பல அரிய ஆன்மீக விஷயங்களைக் கற்றறிந்தான்.

இறை அறிவோடு கூடிய மக்கட் சேவை என்பது இராமகிருஷ்ணரின் எண்ணமாக இருந்தது. பின்னர் நரேந்திரன் வழக்கறிஞர் படிப்பைப் படிக்க ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் அவனுடைய தந்தையார் காலமானார்.

குடும்பம் வறுமையால் வாடியது. எனவே குடும்பத்தைதக் காக்க ஒரு பள்ளியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார் நரேந்திரன்.

இராமகிருஷ்ணருக்குத் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது. நரேந்திரன் தலைமையில் பக்தர்கள் இராமகிருஷ்ணருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தார்கள். டாக்டர் மகேந்திரன் இராமகிருஷ்ணருக்குச் சிகிச்சை அளித்தார்.

இராமகிருஷ்ணர் உயிருடன் இருக்கும்போதே தன் ஆன்மிக வாழ்வைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தபடி அவரருகே நின்றுகொண்டிருந்தார் நரேந்திரன். பிறர் மனதில் என்ன உள்ளதோ அதை அறியும் ஆற்றல் பெற்றவர் இராமகிருஷ்ணர்.

எனவே நரேந்திரனை அருகில் அழைத்து ‘‘நீ எதை விரும்புகிறாயோ அதைப் பெறுவாய்’’ என்று திருவாய் மலர்ந்தருளினார். தன் இறுதிக் காலத்தில் இராமகிருஷ்ணர் தியானத்தில் ஈடுபட்டார். நரேந்திரனை அருகில் அழைத்தார்.

அவர் கண்களில் நீர் வழிந்தது. ‘என்னிடமிருந்து எல்லாவற்றையும் உனக்கு வழங்கிவிட்டேன். இளைஞர்களைக் கவனித்துக் கொள். அன்னை பராசக்தி நீ நினைப்பத்தை எல்லாம் நிறைவேற்றுவாள்’ என்று கூறிய பின் அவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தது. இதற்குப் பிறகு நரேந்திரன் ‘‘விவேகானந்தர்’’ என்று அழைக்கப்பட்டார்.

பின்னர், விவேகானந்தர் மற்ற இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு சங்கம் அமைத்தார். பல புண்ணியத் தலங்களைத் தரிசிக்கவும், தனிமையான இடத்தில் தவ வாழ்க்கை வாழவும் 1888 ம் ஆண்டு கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார். இமயம் முதல் குமரி வரை சுற்றித் திரிந்து மக்களுடன் நன்கு பழகினார்.

அரசன் முதல் குடியானவன் வரையிலும், பண்டிதர் முதல் பாமரன் வரையிலும் எல்லோரையும் ஒன்றாகப் பாவித்துப் பழகினார். அவரிடம் விளக்கம் கேட்டவர்களில் பல கேள்விகளுக்கு விடை அளித்தார்.

‘ஒருவனை நிறை மனிதன் ஆக்குவது எதுவோ, அதுவே கல்வி’ என்றார். கோடிக்கணக்கான மக்களின் வேதனைகளை நேரில் கண்டார். இந்தியாவில் பல இடங்களுக்குப் பயணம் செய்து மக்களுடன் நன்கு பழகி அவர்களுடைய துன்பங்களையெல்லாம் தெரிந்து கொண்டதுதான் நரேந்திரனை சுவாமி விவேகானந்தராக மாற்றியமைத்தது.

தவத்தை மேற்கொண்ட சந்நியாசியான நரேந்திரன், தேசபக்தராக, மனித சமுதாயத்தில் அக்கறை கொண்டவராக, உலகுக்கு ஆன்மிகத்தைப் போதிப்பவராக, ‘சுவாமி விவேகானந்தராக’ மாறினார்.

அவர், ஜெய்ப்பூர், ஆஜ்மீர் முதலிய இடங்கள் சென்று குஜராத் மாநிலத்தில் பல புண்ணிய தலங்களைத் தரிசித்தார். பாரத நாட்டின் பழம்பெருமைகளை மேலை நாடுகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்யும்படி அங்கு சில பண்டிதர்கள் கேட்டுக் கொண்டனர். பின்னர் குஜராத்திலிருந்து பம்பாய், மைசூர் வழியாக இராமேஸ்வரம் வந்தார்.

அங்கு சிவபெருமானைத் தரிசித்து விட்டு கன்னியாகுமரி வந்தடைந்தார். அங்கிருந்த ஒரு பாறைமீது அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். அவரது சிந்தனை முழுக்க பாரத நாட்டை விழிப்படையச் செய்ய வேண்டும் என்பதைப பற்றியே நினைத்திருந்தது. மக்களைப் பார்த்து அவர் கூறியதாவது:

‘எழுந்திருங்கள், விழித்துக்கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்காகப் பேராற்றல் உங்களுக்குள்ளேயே இருக்கிறது’ என்பதாகும். பின்னர் அவர் சொன்ன மாகாணத்தை வந்தடைந்தபோது, இளைஞர்கள் மிகுந்த மரியாதையுடன் சுவாமி விவேகானந்தரை வரவேற்றனர்.

அச்சமயத்தில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ‘சர்வமத மகாநாடு’ ஒன்று நடக்க இருந்தது. சுவாமி விவேகானந்தர்மீது அளவற்ற அன்பு கொண்ட தமிழ் மக்கள், குறிப்பாக சென்னை மக்கள் நிதி திரட்டி சுவாமி விவேகானந்தரை அந்த மகாநாட்டில் கலந்து கொள்ளுமாறு வேண்டினார்கள்.

அவரும் அதற்கிசைந்து 1893&ம் ஆண்டு அமெரிக்கா சென்று மகாநாட்டில் கலந்து கொண்டார்.
அச்சமயம் ஆங்கிலேயர்கள் கூட்டத்தில் பேசும் பொழுது, ‘சீமான்களே, கனவான்களே, சீமாட்டிகளே’ என்று அழைத்து துவக்குவது வழக்கமாக இருந்தது. ஆனால், தன் முறை வந்தவுடன், சுவாமி விவேகானந்தர் ‘சகோதரர்களே, சகோதரிகளே’ என்று மக்களை அழைத்துப் பேச்சைத் துவக்கினார்.

இந்த இரண்டு வார்த்தைகள் மந்திர வார்த்தைகளாக மக்களைக் கவர்ந்தன. அக்கூட்டத்தில் விவேகானந்தர் இந்து மதத்தின் மேன்மையை எடுத்துரைத்தார்.

அவரது பேச்சை மக்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதே அவரது வெற்றியாகும். அவரது வலிமையான சொற்பொழிவு கூடியிருந்த மக்களை மயக்கியது. அவரது சொற்பொழிவு ஒரு புதிய வரலாற்றையே உருவாக்கியது.

‘சொற்பொழிவு நிகழ்த்துவதற்காகத் தெய்வத்திடம் இருந்து ஆணை பெற்று வந்தவர் விவேகானந்தர்’ என்று பத்திரிகைகள் விவரித்தன. அமெரிக்காவில் பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

இதன் விளைவு, விவேகானந்தர் ‘உலகப்புகழ்’ பெற்றவராக மாறினார். சில காலம் அமெரிக்காவில் தங்கி, பற்பல இடங்களில் சொற்பொழிவு ஆற்றி, நம் நாட்டின் கலாச்சாரம், மதம் ஆகியவற்றைப் பரவச் செய்தார்.

பிறகு இலண்டன், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்தியாவிற்குத் திரும்பியதும் அங்காங்கே படிப்படியாக ஸ்ரீராமகிருஷ்ண மடங்களை நிறுவி சமூகப் பணி ஆற்றத் திட்டமிட்டார்.

1899 ம் ஆண்டு கல்கத்தாவில் பேலூரில் கங்கைக் கரையில் முதன்முதலாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தோன்றியது. விவேகானந்தர் அங்கே இராமகிருஷ்ணரின் அஸ்தியை வைத்து குருதேவருக்கென ஒரு கோயிலை எழுப்பினார்.

அதன் பிறகு, சென்னையில் இராமகிருஷ்ண மடம் உருவானது. பின்னர், இலங்கை, அமெரிக்கா, இலண்டன் என்று பல இடங்களில் மடங்கள் அமைக்கப்பட்டன. இத்தகைய மடங்களில் முக்கிய பணி என்னவென்றால் பஞ்சம், நோய், மற்றும் துன்பம் ஏற்படும் சமயங்களில் மக்களுக்கு நிவாரப் பணிகளைச் செய்து உதவியளித்தல் போன்றவைகளே.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அவர் இந்து மதத்தின் மேன்மையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளைக் கூறி எடுத்துரைத்தார். அவற்றில் சில முத்துக்களைக் (பொன்மொழிகள்) காண்போம்.

‘உடம்பாலும், மனத்தாலும், தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றுகிறார். தூய்மையற்ற உள்ளத்தோடு கோயிலுக்குச் செல்லும் ஒருவன் ஏற்கெனவே இருக்கிற தன் பாவங்களுடன் ஒன்றைக் கூட்டுகிறான்.

ஏழைகளிடமும், பலவீனமானவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையில் கடவுளை வழிபடுகிறான். பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள்; எப்போதும் இவற்றுடனேயே இருந்திருக்கப் பழகினால் ‘வெற்றி’ நிச்சயம்.

எந்த நிலையிலும், நல்ல காலத்திலும், கெட்ட காலத்திலும், உடல் சுகமாக இருந்தாலும் நோயுற்று இருந்தாலும் தியானப் பயிற்சியை ஒரு நாளும் கைவிடக் கூடாது. தினமும் தியானம் செய்ய வேண்டும்.

நல்லவற்றை நினைத்தால் நல்லதே நடக்கும். அன்பின் வழியாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொடுக்கும். மிருக பலம் இன்றி (வன்முறை இன்றி) ஆன்மிகப் பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெற முடியும்.

நாம் எதையும் சாதிக்க வல்லவன் என்ற துணிவும், உறுதியும் இருக்க வேண்டும். இதன் பிறகு மீண்டும் ஒருமுறை அயல்நாடுகளுக்குச் சென்று ஆசிரமங்கள் நிறுவி, சொற்பொழிவுகளும் நடத்தினார்.

இந்தியா திரும்பிய பின்னர், தன் பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் சீடர்களின் பெயர்களுக்கு மாற்றினார். தனது பொறுப்புகள் மனைத்தையும் சீடர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் உடல் நலம் குன்றி சீடர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் உடல் நலம் குன்றி நோயுற்றார். கடின உழைப்பும், இடைவிடாத சுற்றுப் பயணம் போன்றவை அவர் உடல் நலனுக்குக் கேடு விளைவித்தன.

எனவே காலையிலும், மாலையிலும் உலாவுவார். தினமும் பூஜை அறையில் தியானம் செய்வார். மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பார். மடத்தில் சாதுக்களுடன் சற்று நேரம் பேசுவார். இவ்வாறு அவரது வாழ்க்கை முறையைச் சற்று மாற்றிக் கொண்டார்.

1902 ம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி ஒரு அற்புத நிகழ்ச்சி நடந்தது. சுவாமி விவேகானந்தர் தன் உடலை விட்டுப் போக முடிவு செய்தார். அன்று இரவு தியானத்தில் ஆழ்ந்தவர் தன் உடலைவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்தத் துயரமான சம்பவம் அறிந்து உலகமே அவருக்காகக் கண்ணீர் அஞ்சலி செய்தது. இந்த மாபெரும் இழப்பு இந்தியாவிற்கு மட்டும் அல்ல; உலகத்திற்கும்தான்.

இத்தகைய மகானுக்காக நாம், குறிப்பாக இளைஞர்கள் செய்ய வேண்டிய கடமை யாதெனில், அவரது உபதேசம் ஏற்று, அவர் கூறிய அறிவுரைகளை வாழ்வில் கடைபிடித்து செயல்பட்டு நம் நாட்டிற்கும், உலகிற்கும் பெருமை சேர்ப்பதுதான்.

இதன் மூலம் அவரது ஆத்மா பூர்ண நிம்மதி அடையும் என்பது திண்ணம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *