மாணவச் செல்வங்களே, அது உங்கள் கைகளில் தான் இருக்கிறது
நமது போற்றுதலுக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கண்ட கனவு நமது இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற வேண்டும் என்பது தானே!
ஒரு நாட்டின் முன்னேற்றமே மாணவர்களாகிய இளைஞர்களின் முன்னேற்றத்தில் தான் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டதால், நேரம் கிடைத்த பொழுதெல்லாம் அவர் மாணவச் செல்வங்களைத் தான் தேடிக் கொண்டு போனார்.
ஆம்! இளைஞர்கள் மேம்பாடு அடையும் பொழுது, அவர்களுக்கு கிடைக்கும் நல்ல கல்வியால் அவர்களுடைய குடும்பங்கள் பொருளாதார வளம் பெற்று, அமைதியான வாழ்க்கைத் தரத்தோடு முன்னேற்றம் அடைகிறது.
எல்லாக் குடும்பங்களும் மேம்பாடு காணுவது தான் ஒரு நாட்டின் சுபிட்சம் ஆகும்! ஒரு நாட்டின் முன்னேற்றமே இளைஞர்களை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது! அதை நம் நாட்டில் பிறந்த ஒவ்வொரு இளைஞர்களுக்கும் நாம் புரிய வைக்க வேண்டும்!
இளைஞர்கள் தங்கள் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முதலில் அவர்கள் நல்ல கல்வியைத் தேடிக் கொள்ள வேண்டும்!
இளைஞர்களாகிய மாணவ செல்வங்களின் முன்னேற்றமும், வெற்றியும் அவர்கள் கல்வியைப் பொருத்தே இருக்கிறது. இன்றைய கல்வியின் வெற்றி அவர்கள் கல்லூரியிலிருந்து, வெளியே வரும் பொழுது அவர்கள் சுமந்து வரும் பட்டங்களைப் பொருத்து இருக்கிறது.
இன்று நல்ல கல்வியை அவர்கள் இளமையில் தேடிக் கொள்ள நிறைய நேரம் தேவைப்படுகிறது! பல இளைஞர்கள் இன்று நேரத்தின் அருமை தெரியாமல் இருக்கிறார்கள்!
இந்த அறிவியல் உலகத்தில் இளைஞர்களின் நேரத்தை அப்படியே மொத்தமாக விழுங்க ஆயிரம் வழிகள் வந்து விட்டன.
சொறி பிடித்தவன் கைகளைப் போல இந்தக் கால இளைஞர்கள் எந்த நேரமும் தன் கைகளில் இருக்கும் உயர் தர செல்போனில் ‘பேஸ்புக்’ ‘வாட்ஸ்அப்’ என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்! கேட்டால் பொழுது போக்கு என்று சொல்கிறார்கள்.
அவர்கள் பொழுதைப் போக்க வில்லை! தங்கள் பொன்னான எதிர் காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அதை என்று அவர்கள் உணர்கிறார்களோ அன்றே அவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டதாக அர்த்தம்!
நாம் முயன்றால் முடியாது எதுவுமே இல்லை! இன்று இல்லாவிட்டால் முயற்சி செய்து நாளை எதையும் நம்மால் தேடிக் கொள்ள முடியும் -நேரத்தைத் தவிர! அதைப் புரிந்து கொண்டு இளைஞர்கள் இளமையில் உயர் கல்வி தேடி பெற வேண்டிய பொன்னான நேரத்தில், ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் நேரத்தை சேமித்துப் பயன்படுத்த வேண்டும்.
நேரத்தை பொன் போன்றது என்று சொல்வார்கள். அது கூட உண்மையல்ல! இழந்த பொன்னை மீண்டும் முயற்சி செய்து நம்மால் தேடிக் கொள்ள முடியும். ஆனால், இந்த நேரம் என்பது உயிர் போன்றது. போனால் நிச்சயம் வராது.
உங்கள் வளமான எதிர்காலத்தை நிர்ணயம் செய்வது அந்த நேரம்தான். நேரத்தை உயிர் போன்றது என்று உணர்ந்தவர்களே உயர் கல்வி பெற்று வாழ்க்கையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள்.
நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்! வறுமைக்கு நடுவே நீங்கள் பிறந்திருந்தாலும் உயர் கல்வியின் மூலம் சமுதாயத்தில் முதல் இடத்திற்கு உங்களால் வர முடியும். எறும்புகள் வரிசையாக ஊர்ந்து கொண்டு போகும் பார்த்திருப்பீர்கள்.
அந்த வரிசைப் பயணத்தை தடுக்க ஒரு தடையை வைத்துப் பாருங்கள். அடுத்த நொடியே வளைந்து அந்த தடையைச் சுற்றிக்கொண்டு தங்கள் பயணத்தை அவை தொடரும்.
நேரத்தை அவை வீணாக்குவதில்லை.
தேவையில்லாமல் அவை போராடுவதும் இல்லை. முடிவு எடுப்பதில் கால தாமதமும் இல்லை. முன்னேற்றத்திற்கு இது போன்ற சமயோசிதமான முடிவுகளே தேவைப்படும்.
எதிர்காலத்தைப் பற்றி நினைத்து கவலைப் பட்டு நிறைய நேரத்தை வீண் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி செய்யும் பொழுது நிகழ்காலமும் வீணாகி விடுகிறது.
எதிர் காலம் நம் கையில் இல்லாத ஒன்று. நிகழ்காலம் நம் கையில் இருப்பது. நாம் முன்னேற நம் கைகளில் கிடைத்ததை முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை முதலில் செய்யுங்கள். எதிர்காலம் தானாக உங்கள் கைகளுக்கு வந்து விடும். வாழ்க்கை என்பது கூட ஒரு போட்டிப் பந்தயம் தான்.
பணம் இல்லாதவன் ஜெயித்திருக்கிறன். படிப்பில்லாதவன் ஜெயித்திருக்கிறான். ஏன், கை கால்கள் இல்லாதவன் கூட ஜெயித்திருக்கிறான். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவன் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. முடியும் என்றால் முடியாதது எதுவுமே இல்லை!
முதலில் உங்களால் முடியும் என்று நம்புங்கள். நிச்சயம் அது முடியும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை ‘பிரேக்’ இல்லாத வண்டியில் பயணம் செய்வதைப் போல் இருக்கும். அதனால் எங்கே கொண்டு போய் தள்ளுமோ யார் கண்டார்கள்?
உயர் கல்வி கற்றபின், அடுத்து உங்கள் எதிர் காலத்தில் நீங்கள் என்னவாக உருவாக வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை, ஒரு இலட்சியத்தை நிர்ணயம் செய்து கொண்டு அதை நோக்கிப் பயணத்தை தொடங்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கை முழுவதற்கும் ஒரு பெரிய இலக்கு, ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். உங்கள் இலக்கு மிகவும் தெளிவானதாகவும், அதை செயல்படுத்தும் வழி வகைகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். அந்த இலக்கிலே எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது.
அந்த இலக்கு உங்கள் வாழ்க்கையே புரட்டிப் போட்டு, மாற்றி அமைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தக் குறிக்கோள் தான் இலட்சியம் என்பது.
அந்த இலட்சியத்தை அடைய, அயராத உழைப்பு தேவைப்படும். அதற்கு முதலில் உங்கள் இலட்சியம் உங்கள் உள்ளத்தில் எந்த நேரமும் குடியிருக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் உங்கள் இலட்சியத்தை ஒருமுறை மனசில் ஓட விடுங்கள்.
இதுவரை எடுத்த முயற்சி, அடைந்த வெற்றி, தோல்வி, இனிமேல் செய்யப்போகும் முயற்சி பற்றி ஒருமுறை சிந்தியுங்கள். அதே போல் இரவு படுக்கப்போகும் பொழுதும் ஒருமுறை அலசிப் பாருங்கள். திட்டமிட்டபடி அன்று செயல் படுத்த முடிந்ததா, முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று யோசித்து, மறுநாள் எதை எதை செய்ய வேண்டுமென்று திட்டம் தீட்டியபின் தூங்கப் போங்கள். சிறு குழந்தைகள் நடை பழகுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அடிக்கடி ‘தொப்’ ‘தொப்’ என்று விழும்! அடுத்த வினாடியே எழுந்து சிரித்த முகத்தோடு நடக்கத் தொடங்கும்.
விழுந்தவுடன் அக்குழந்தை சோர்வு கொள்வதில்லை. ஆர்வத்தோடு எழுந்து அடுத்த நொடியே தன் முயற்சியைத் தொடங்கி விடுகிறது.
அதுபோல்தான் தன்னம்பிக்கை உள்ளவனும், அடிக்கடி வரும் எதிர்பாராத இடையூறுகளைப் பொருட்படுத்தாமல், அவைகளை முறியடித்து, தன் இலக்கை நோக்கிய பயணத்தைத் தொடர்வான்.
குழந்தை நடக்கப் பழகிய பின் தான் தன் முயற்சியை நிறுத்தும். அதேபோல்தான் தன்னம்பிக்கை உள்ளவனும் தன் குறிக்கோளை அடைந்த பிறகு தான் தன் முயற்சிகளை கைவிடுவான். இன்று நம்மில் பலரிடம் தங்கள் எதிர் காலம் பற்றிய இலட்சியமோ, திட்டமிடலோ இல்லை.
தங்கள் எதிர்காலம் பற்றி ஒரு தீர்க்கமாக திட்டமிடாதவர்களின் வாழ்க்கை நிச்சயமாக எதிர்காலத்தில் பிரகாசமாக அமையாது. பத்து வருடங்களுக்குப் பிறகு நீங்கள் என்னவாக, எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்றே யோசித்து ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்வது தான் புத்திசாலித் தனம்.
முதலில் உங்கள் இலட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை அடையும் முயற்சியில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். வழியில் பல இடையூறுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அவைகளைக் கடந்து நீங்கள் முன்னேற வேண்டும்!
தோல்விகள் வரலாம். வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் எல்லோருமே தோல்விகளை கடந்து வந்தவர்கள்தான். தோல்விகளை சந்திக்காமல் வெற்றி அடைய முடியாது.
துடுப்பதி ரகுநாதன்
Leave a Reply