பாலமதி பால முருகனை காணத் தவறாதீர்கள், முப்பாட்டனுடன் மணிஸ்ரீகாந்தன் சில மணித் துளிகள்!
முப்பாட்டனுடன் சில மணித் துளிகள்…
எனது இல்லம் அமைந்துள்ள வேலூர், ஓட்டேரி பூந்தோட்டத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் மலைக் குன்றின் மீது அமர்ந்திருக்கும் குழந்தை வேலாயுதபாணியை (முப்பாட்டன்) ஒரு எட்டுப்போய் பார்த்துட்டு வரலாம்னு இன்று காலை புறப்பட்டேன்.
வீட்டிலிருந்து வெறும் 15 நிமிட பயணம்தான் (ஹேர்பின்) கொண்டை ஊசி வளைவுகளுடனான மலைக்காட்டை கடந்து மலை உச்சிக்கு இருசக்கர வண்டியில் சென்றேன்.
அந்த இடத்தின் பெயர் பாலமதி அந்தப் பகுதியை சுற்றி அரசங்குளம், செட்டேரி, செங்கநத்தம், கிருஷ்ணாபுரம், மேல்செங்கநத்தம் உள்ளிட்ட சில கிராமங்கள் அமைந்திருக்கின்றன.
கோயில் படிக்கட்டுகளில் சுமார் 150 படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பாலமதி முருகனை தரிசிக்கலாம். மலை உச்சி என்பதால் நன்றாகவே காற்று வீசுகிறது.
மலை உச்சியிலிருந்து கீழே பார்த்தால் அதல பாதாளமாக காடும், பாறைகளும் நம்மை மிரட்டுகிறது.
தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியைச் சேர்ந்ததுதான் இந்த பாலமதி மலைத் தொடர்.
கோயிலின் அடிவாரத்தில் 29 அடி உயரத்தில் ஒரே கருங்கல்லில் ஆன முருகன் கற்சிலை மிகவும் அழகாக அமையப்பெற்றுள்ளது.
ஆலயத்தின் உற்சவ மூர்த்தி வீதி உலா வரும், வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள தேர் காண்போரை கவர்கின்றது. குறிப்பாக தேரில் எழுந்தருளி இருக்கும் பால முருகன் பக்தர்களின் கவனம் ஈர்க்கின்றார்.
கோயில் அடிவாரத்தில் உள்ள கடைகளில் பூஜை பொருட்கள் 50 ரூபாவிற்கு ஒரு பையில் தருகிறார்கள்.
10 ரூபா செலுத்தி அர்ச்சனை சீட்டை பெற்றுக்கொண்டால் பால முருகனுக்கு அழகாக அர்ச்சனை செய்கிறார்கள்.
வேலூர் வருபவர்கள் கட்டாயம் பாலமதி பால முருகனை காணத் தவறாதீர்கள்.!
பாலமதி முருகன் கோயிலின் அழகான தருணங்களையும், அந்தப் பகுதியையும் நிழல் படங்களில் காணுங்கள்.
மணி ஸ்ரீகாந்தன், வேலூர்.
Leave a Reply