பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா எழுதும் ”மயிலிறகு” : அத்தியாயம்-3
மயிலிறகு : (அத்தியாயம் – 3)
“வாழ்க்கை அன்றாடம் மாறிக் கொண்டே இருக்கிறது.” கிருஷ்ணா பேசுவதை நிறுத்தினான்.
சன்னமாய் ஏசியின் ரீங்காரம் மட்டும் கேட்க, ஹால் அமைதியாக இருந்தது.
இந்த அமைதி அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பேசும்போது யாரானும் குறுக்கே பேசினால் அவனின் கவனம் சிதறும். பார்வை இல்லாததால் அவனின் செவிகள் மிகக் கூர்மையாய் எந்தச் சப்தத்தையும் கிரகித்துக் கொள்ளும்.
சரியான திருதிராஷ்டிரன் நீ என்பார் அப்பா.
“நீங்கதான் சஞ்சயன்”- சிரிப்பான் கிருஷ்ணா.
வாழ்க்கையைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுத் தந்தவர் அப்பா. பிறவியிலேயே பார்வை போய், பல சிகிச்சைகள் செய்தும் பலன் இல்லை என்ற பின் ஒருநாள் அப்பா அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்தார்.
“கண்ணா, இப்போ நான் உன்கிட்ட சொல்ற விஷயம் உனக்குச் சங்கடமா இருக்கும். ஆனாலும் நிஜத்தை நீ புரிஞ்சுக்கணும்.”
அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று அவனுக்குத் தெரிந்தது. அப்போது அவனுக்குப் பத்து வயது. தனக்காக அம்மாவும், அப்பாவும் படும் சிரமங்கள் அவனுக்குத் தெரிந்தது. எனவே அவன் மனதை எல்லாவற்றிற்கும் தயார் படுத்திக் கொண்டான்.
“இதோ பாரு. உனக்குக் கண் பார்வை இல்லைங்கறதால எதுவும் குறைஞ்சிடாது. உன்னுடைய மற்ற புலன்கள் நல்லா இருக்கு. அதன் மூலம் நீ இந்த உலகைப் பாரு. பார்வை இல்லை.
அவ்வளவுதான். அதை நெனைச்சு ஏங்கி நீ மற்ற விஷயங்களைத் தவற விடாதே. இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் வாழ ஒரு வழி இருக்கு. எப்படி வாழனும்கறதை நீ டிசைட் பண்ணு.”
“நான் அறிவாளியா வாழணும்.”
“அதுக்கு என்ன செய்யணும்?”
“நிறையப் படிக்கணும்.”
“எஸ். நிறையப் படி. படிச்சிட்டே இரு. அதேசமயம் யாருக்கும் கெடுதல் செய்ய வேண்டாம். உனக்கு பார்வை இல்லைங்கற குறையை நினைக்காதே. இரண்டு கண்ணும் இருக்கறவங்களை விட நீ வாழ்வில் ஜெயிக்க முடியும். ஏன்னா, உன்கிட்ட உத்வேகம் இருக்கும்.”
நல்ல தகப்பன் கிடைப்பது கூட ஒரு வரம்தான். தகப்பனே வழிகாட்டியாய், குருவாய், நண்பனாய், இருப்பது பெரும்பேறு. அப்பாவே தாயுமானார். மகன் இப்படி என்ற ஏக்கத்தில் அம்மா நோயாளி ஆகிவிட, அப்பா அம்மாவையும் குழந்தையாய் ஏற்றார்.
இரண்டு குழந்தைகள் என்பார் அப்பா. இரு கைகளால் இருவரையும் அனைத்துப் பாதுகாத்தார் ஜெகதீசன்.
கிருஷ்ணா முதுகலைப் பட்டம் வாங்கினான். அவனுக்கு பத்திரிகைத் துறையில் ஆர்வம் அதிகம் அதனால் சரோஜம் என்று அம்மா பெயரில் ஈ மேகசீன் ஆரம்பித்தான்.
அது போக கல்லூரி, அலுவலகங்கள், வங்கிகள் என்று பல இடங்களுக்கு வாழ்வியல் பயிற்சிகள் கொடுக்கப் போவான். சுய முன்னேற்ற வகுப்புகள், சொற்பொழிவுகள் என்று சுறுசுறுப்பாக இருக்கிறான். தன் குறை பற்றி நினைக்க அவனுக்கு நேரம் இல்லை. விருப்பமும் இல்லை.
இன்று இந்தக் கல்லூரி ஆசிரியர்களுக்கான மன அழுத்தம் பற்றிய வகுப்புகள் இரண்டு நாளைக்கு. ஆர்வமாக வந்து கலந்து கொண்டவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்தான் கிருஷ்ணா.
அர்த்தமுள்ளதாக இருக்கிறது வாழ்க்கை. மகிழ்ச்சியும், மனத் திருப்தியும். நன்றிப்பா.
தனக்குள் கூறிக் கொண்டான். அதுவே டீ குடித்தது போல் புத்துணர்ச்சியாக இருந்தது. புன்னகயுடன் ஆரம்பித்தான்.
“வாழ்க்கை அன்றாடம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான வாழ்க்கை. எல்லாமே அவரவர் மனதின்படிதான்.
இதில் நாம் மற்றவர்களைப் பார்த்து, ஏங்கி, பொறாமை, வருத்தம் என்று மனதைக் கெடுத்து, அழுத்தம் அதிகரித்து உடலைக் கெடுத்துக் கொள்கிறோம்.
வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் மாறிவிடாது. ஆனால் ஒரு நிமிஷத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் எல்லாவற்றையும் மாற்றக் கூடியது. அமைதியாக இருங்கள். பொறுமையாக இருங்கள். நம் சாதனைகள் நம் வாழ்வின் பாதையை நிர்ணயிக்கும்.
ஒரு விளக்கு எப்போதும் பேசாது. ஆனால் அது தன் ஒளியின் மூலம் தன்னை உணர்த்திக் கொண்டே இருக்கும். சாதனையாளர்களும் அப்படித்தான். தங்களை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் அவர்களின் சாதனைகள் அவர்களை வெளிப்படுத்தும்.
தம்மை உயர்த்திக் காட்ட வேண்டும், மற்றவர்களை விட தான் உயர்வாக இருக்க வேண்டும் என்ற ஆசையே மன அழுத்தத்திற்குக் காரணம். தீபமாய் இருங்கள். சாதனை புரியுங்கள். முக்கியமாய் புன்னகை புரியுங்கள்.
அது நறுமணமாய் உங்களைச் சுற்றிப் பரவும். உங்கள் அருகில் உள்ளவர்களுக்கு அது அருமருந்தாய் அமையும்.”
“எஸ். இப்போ உங்க தன்னம்பிக்கையும், தைரியமும் எங்களுக்கு உற்சாக டானிக்காய் இருப்பது போல்”- அருகில் குரல் கேட்டது.
கிருஷ்ணா யார் என்பது போல் திரும்பினான்.
“நான் சத்யன். இந்தக் கல்லூரியின் தாளளார்.’- அவன் கிருஷ்ணாவின் கை பற்றிக் குலுக்கினான்.
“இது என் மனைவி சுசீலா. உங்க மேகசீன் சரோஜத்தின் ரெகுலர் ரீடர்”
‘அப்படியா”- கிருஷ்ணா கை கூப்பினான். கம்மென்ற சென்ட் மனம் சத்யனுக்கு அருகில் ஒரு பெண் நிற்பதை உணர்த்தியது.
“இதில் வரும் கட்டுரைகள், கதைகள் எல்லாம் ரொம்ப அருமை. நான் விடாமப் படிக்கிறேன். உங்க உதவியாளர்கள் நல்ல அருமையா செலக்ட் செய்யறாங்க.”- சுசீலா.
“நன்றி. இப்பத்தான் ஒரு உதவியாளர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்கேன். இதுநாள் வரை அப்பாதான் உதவியாளர்.”
“அப்படியா. கிரேட்.”
“இன்றுதான் அவர்களுக்கான இன்டர்வ்யூ.”
“எனக்குத் தெரிஞ்சு யாராவது இருந்தா சொல்லவா?”
“ஒ. தாராளமா”
“என்ன குவாலிபிகேஷன்?”
“ரசனைதான் ஒரே தகுதி.”
படபடவென்று கை தட்டினான் சத்யன்.
“மிகச் சரியாச் சொன்னீங்க. வாழ்வதற்கான ஆதாரமே ரசனைதான்.”
கிருஷ்ணா மெல்லச் சிரித்தான். “சரிதான். ஆனால் நம் ரசனை எதையும் அழிக்கக் கூடாது. புதுசா உருவாக்கணும்.”
“ஆமாம், ஆமாம்.”- ஏனோ சத்யன் குரலில் ஒரு தடுமாற்றம் தெரிந்தது.
“ஒகே. வாங்க. லஞ்ச் முடிச்சிட்டு மத்தியான செஷனுக்கு ரெடியாகலாம்.”
“ஒகே.” கிருஷ்ணா அவர்களுடன் நடந்தான். மாடியில் மீட்டிங் ஹால். வகுப்பறைகளைக் கடந்து லிப்ட் வந்தபோது கிருஷ்ணா வேண்டாம் என்று கூறி விட்டான்.
“படி இறங்கி, வகுப்பறைகள் வழியாகப் போகலாம்.”
வகுப்புகளில் இருந்த மாணவர்கள் ஓடி வந்தார்கள். சென்ற வாரம் அவர்களுக்கு ஜெயித்துக் காட்டுவோம் என்று ஒரு நிகழ்ச்சி நடத்தினான். அதிலிருந்து அவனைக் கண்டதும் மாணவர்களுக்குப் பிரியமாகி விட்டது.
சிலர் தனியாகப் போன் செய்தும், சிலர் அவன் அலுவலகத்திற்கு வந்தும் பேசி விட்டுப் போனார்கள்.
சத்யன் இருந்ததால் தயங்கி நின்ற மாணவர்களின் உணர்வுகளை கிருஷ்ணா புரிந்து கொண்டான். ஹாய் என்று கை அசைத்ததும், கலகலவென்று மாணவர்கள் படை அவர்களைச் சுற்றிக் கொண்டது.
அவர்களுடன் பேசியபடி மெதுவாகப் படிகளில் தடங்கலில்லாமல் இரங்கி வந்தான். ஹாஸ்டலில் அவனுக்கு டைனிங் ஏற்பாடாகி இருந்தது.
“வாங்களேன் சாப்பிடலாம்.”- கிருஷ்ணா அழைத்தான்.
“டெய்லி அனுபவிக்கிற தண்டனை போதாதா சார்?”- ஒரு குறும்புக்கார மாணவன்.
“ஏன் அவ்வளவு மோசமா.?”
“சார், பயப்படாதீங்க. இன்னைக்கு நீங்களும், சத்யன் சாரும் இங்க சாப்பிடறதால நிச்சயம் சாப்பாடு நல்லாயிருக்கும்.”
“பயப்படாம உள்ள போங்க. சாப்பிடுங்க. நாங்க இங்க கடவுளை வேண்டிகிட்டு நிக்கிறோம்”
கிருஷ்ணா சிரித்தபடி உள்ளே வந்தான். மீட்டிங் ஹாலிலிருந்து படி இரங்கி, வராண்டாவில் நடந்து டைனிங் வரை வந்ததில் கல்லூரி மிகப் பெரியது என்று புரிந்தது. மூன்று மாடிக் கட்டிடம்.
இளநிலை வகுப்புகள் ஒரு வராண்டா. முதுநிலை வகுப்புகள் மற்றொரு வராண்டா. இதுதவிர மற்ற வகுப்பறைகள், ஆய்வுக் கூடம் என்று பெரிதாகவே இருந்தது கல்லூரி.
“கல்லூரி ஆரம்பித்து எத்தனை வருடங்கள் ஆகிறது?”- கிருஷ்ணா.
“இது ஆரம்பித்து இருபது வருடங்கள் ஆகிறது. இது தவிர ஒரு பள்ளியும் இருக்கு. ஆண்கள், பெண்கள் என்று தனித்தனி பள்ளிகள்.
இங்க மூவாயிரம் மாணவர்கள் படிக்கிறாங்க. ஸ்கூல்ல இதே அளவு இருக்காங்க. இது தவிர ஒரு பாலிடெக்னிக் காலேஜும் இருக்கு.”
“குட், குட். நல்லா கல்விப் பணிசெய்யறீங்க.”
“தாத்தா படிக்கலை. அதனால் ஒரு நல்ல கல்வி நிறுவனம் ஆரம்பித்து, தரமான கல்வியை, குறைந்த கட்டணத்தில் தரனும் என்று ஆரம்பித்தார் தாத்தா.”
“நல்ல எண்ணம்.”
“முதலில் அவர் ஆரம்பித்த ஸ்கூல் சேலத்தில்தான். அவரோட சொந்த ஊர். அப்புறம் அதை அரசுகிட்ட ஒப்படைச்சிட்டார். நானும் கூட அங்கதான் படிச்சேன்.
அதன் பிறகு சென்னை. படிப்பு முடிஞ்சு, இந்தக் கல்லூரிகளைக் கவனிக்கன்னு இங்க வந்துட்டேன்.”
“குட். உங்க குழந்தைகள் என்ன செய்யறாங்க?”
“எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம்தான் ஆறது சார். சுசீலாவோட அப்பா, ஒரு தேசிய கட்சியில் பெரிய ஆள். என் மாமா பெண்.’- சத்யன் குரலில் பெருமிதம்.
“சீக்கிரம் பிறக்கட்டும். இதை எல்லாம் ஆள்வதற்கு வாரிசுகள் வேண்டாமா?”
கிருஷ்ணாவின் மொபைல் அடித்தது. ஜெகதீசன்.
“மகனே எங்க இருக்க.”
‘நடுத்தெருவுல நிக்கறேன்.”
“இவ்வளவு சீக்கிரம் வந்துட்டியா? பேஷ்.”
“யப்பா, சாப்பாட்டுக்காக டைனிங் வந்திருக்கேன்.”
“கைல தட்டோட நிக்கறியா. நில்லு, நில்லு. இங்க ஆள் செலக்ட் செய்தாச்சு.”
“நல்லது. உனக்குத் திருப்தியா?”
“வெகு திருப்தி. அருமையா, அழகா, சீக்கிரமா லே அவுட் செஞ்சுட்டா. நிறைய இலக்கியங்கள், கதைகள் படிச்சிருக்கா. மீறான்னு பேர்.”
“சரி, அப்புறம்?” என்றவனிடம் அப்பா மீராவின் முகம் பற்றிச் சொல்ல “ அவ அறிவுதான் நமக்கு முக்கியம். முகம் எப்படி இருந்தா என்ன?” என்றான் கிருஷ்ணா.
மீராவின் முகத்தைச் சிதைத்தவன்தான் சத்யன் என்று அப்போது தெரியவில்லை.
Leave a Reply