அரசியல் களம் காண்பாரா நடிகர் விஐய்? கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!
அரசியல் களம் காண்பாரா நடிகர் விஐய்? கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பதே தற்போது தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்வி. அவரின் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியலை நோக்கியே இருப்பதாக அரசியல் நோக்கர்களும், சமூக வலைதளங்களும் ஆருடங்கள் சொல்லி வருகின்றனர்.
தினந்தோறும் ஒரு தகவலாக நடிகர் விஜய் அரசியல் களம் காணப்போவதாக பத்திரிகை செய்திகளும் தங்கள் பங்கிற்கு பொதுமக்களுக்கு தீனியை போட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகளும் தங்கள் பங்கிற்கு நடிகர்கள் அரியணைக்கு ஆசைப்படலாமா? என கேள்வி எழுப்பி தங்கள் பதட்டத்தை காண்பித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சியின் ஓட்டை பிரிப்பார். எந்த கட்சி வாக்காளர்களை கவர்வார். யாருடைய வெற்றி வாய்ப்பினை தட்டி பறிப்பார்? யாருக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தருவார் என பல்வேறு ஆருடங்களோடு, விவாதங்கள் செய்து வருகின்றனர்.
மொத்தத்தில் தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஐய் ஒரு பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறார் என்பதே உண்மை.
அரசியல் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். நடிகர் விஜய் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம் என்கின்றனர் விஐய் மக்கள் இயக்கத்தினர்.
அவர் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என அவருக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர் விஐய் மக்கள் இயக்கத்தினர்.
தனது முதல் அரசியல் நகர்வாக கடந்த மாதம் நடைபெற்ற விழாவில், மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் கவுரவித்த செய்திகள் பத்திரிகைகளில் பரபரப்பினை ஏற்படுத்தின.
அந்த மாணவர்களின் பாராட்டு விழாவில் விஜய் பேசியது ஒட்டு மொத்த தமிழக அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்தது.
விழாவின் அவரது பேச்சுகள் பொரும்பாலானோருக்கு அவர் அரசியலுக்கான அடித்தளத்தினை அமைக்கிறார் என தோன்றியதில் வியப்பில்லை. அவர் நிகழ்வில் பேசியது இது தான்.
பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடாதீர்கள், இதை உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள் என்று மாணவர்களிடம் கூறினார். பணத்துடன் வாக்களிப்பது உங்கள் சொந்த விரலால் உங்கள் கண்ணில் குத்துவது போன்றது என்று மேலும் கூறினார்.
நீங்கள் நாளைய வாக்காளர்கள் என்றும், நாட்டின் வருங்கால தலைவர்களை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்றும் விஜய் கூறினார்.
‘ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுப்பவர்கள், ஒன்றரை லட்சம் பேருக்கு கொடுத்தால், 15 கோடி ரூபாய். அதற்கு முன் எவ்வளவு பணம் சம்பாதித்திருப்பார் என்று யோசியுங்கள். நீ வீட்ல போய் உன் பெற்றோரிடம் இந்த பணத்தை வாங்கி ஓட்டு போடாதே என்று சொன்னால் அது நடக்கும்.
பலர் உங்கள் எண்ணத்தை மாற்றுவார்கள். ஆனால் மனதுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றார் விஜய்.
நான் பல திரைப்பட விழாக்கள் மற்றும் ஆடியோ விழாக்களில் பேசியிருக்கிறேன். ஆனால் இதுவே முதல் முறை. முடிந்தவரை அனைத்தையும் படியுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி படியுங்கள் என்றார் விஐய்.
இந்த பேச்சுக்களே அரசியல் களத்திற்கு அச்சாரமிடுகிறார் விஜய் என்கிற செய்தியோடு பரவலாக அரசியல் பரபரப்பினை கிளறியது.
விஜய் ஏற்கனவே தான் நடித்த படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மறைமுகமாக அரசியல் பற்றி பேசி வருகிறார் என பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் விஜயின் தந்தை மற்றும் பிரபல இயக்குனருமான சந்திரசேகர், விஜயின் பெயரில் ஒரு கட்சி ஒன்றை ஆரம்பித்தார். இதைதொடரந்து, “என் தந்தை ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று அறிவித்து ஆச்சரயத்தினை ஏற்படுத்தியிருந்தார் விஐய்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில் அவர் தற்போது அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
சமீபத்தில் அவர் சினிமாவில் இருந்து சிறிது ஆண்டுகள் ஓய்வு பெற போவதாக அறிவித்ததும் அதனை ஓரளவு உறுதி செய்ததாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் சந்தித்து வருவதும் அரசியல் களத்தின் சூட்டை கிளறியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது அவரின் பரபரப்பான சூட்டை கிளப்பும் அரசியல் நகர்வுகள் பல்வேறு கட்சிகளையும் சற்று பதட்டத்தில் ஆழ்த்தி வருகிறது என்பதே நிஜம்.
மொத்தத்தில் தமிழக அரசியல் களத்தினில் சூரியனின் தகிப்பை காணமுடிகிறது. விஜய் அரசியலுக்கு வருவாரா? தமிழக இளைஞர் மனதில் ஈடில்லா சிம்மாசனமிட்டது போல் அரசியல் களத்தினிலும் நாற்காலிக்கான போட்டியில் தனது சிம்மான கனவினை மெய்ப்பித்து கொள்வாரா? அரசியல் அரியணையை தட்டி தூக்குவாரா விஜய்? என எதிர்பார்க்கின்றனர் விஜய் ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும்.
– Thanuja Jayaraman
Leave a Reply