நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு இரு சபைகளும் நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டன.
விசுவரூபம் எடுத்து வரும் ராமர் கோவில் விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், ரபேல் போர் விமான பேரம், ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்திய விவகாரம் என நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பாகி உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8–ந் தேதி முடியும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதுவே முழுமையான கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மக்களவை நேற்று கூடியதும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார், எம்.பி.க்கள் போலா சிங், ஷா நவாஸ், முகமது அஸ்ரருல் ஆகியோரின் மறைவு செய்தியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று, மறைந்த தலைவர்களுக்கும், எம்.பி.க்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் பற்றி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் குறிப்பு வாசித்தபோது, ஐ.நா. சபையில் முதன்முதலாக 1977–ம் ஆண்டு இந்தியில் அவர் பேசியதை நினைவுகூர்ந்தார். 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை வகித்த அவர் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை 1994–ல் பெற்றதையும், நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை 2015–ம் ஆண்டு பெற்றதையும் குறிப்பிட்டார்.
ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘அடல்ஜி, இந்திய அரசியல் வானில் பிரகாசித்த நட்சத்திரம்’’ என புகழாரம் சூட்டினார்.
சபைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர்.
மறைந்த தலைவர்கள், உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக சபைக்கு வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களை சந்திக்க உள்ள நிலையில், இந்த குளிர்கால கூட்டத்தொடரை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தாமல் நாட்டு மக்களின் நலனுக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்த வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக நடக்கும் எனவும், உறுப்பினர்கள் மக்கள் நலனுக்கான விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் ஆகியோரின் மறைவுக்கு மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவிக்கும் குறிப்புகளை வாசித்தார்.
உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Leave a Reply