பாரதியாருக்கு பார்புகழஞ்சலி

Share Button
*பாரதியாருக்கு பார்புகழஞ்சலி*
ஒருவனது பிறப்பால்
ஓரினமே பெருமை கொள்ளுமென்றால்
அப்பிறப்பிற்குச் சொந்தக்காரன்..
கவிதையென்பது
கற்பனை மட்டுமல்ல-அதில்
 உண்மையைக் குழைத்து
ஊருக்கே சொல்லமுடியும்
என்றுணர்த்தியவன்.
இன்பக்களிப்பிற்கு மட்டுமல்ல
பாடல்கள்
அதில் பண்பைக்கலந்து பண்பாட்டைக்
காட்டவும் ஊட்டவும் முடியுமெனச் சொன்னவன்…
பொற்கிழி தேடும்  புலவன் அல்ல -நான்
பொன்னையே தந்தாலும் புரட்டின்றி வாழும் வாய்மையுடையவன் என வாழ்ந்துகாட்டியவன்…
மனிதர் மட்டுமல்ல காக்கை குருவி என
காணும் உயிரிடமெல்லாம் களங்கமன்ற காதல்கொண்ட மனிதநேய மாண்பாளன்…
தமிழ்ப்புலவன் ஒருவன் வறுமையால் வாடுகிறான் என உலகம் கேலி
பேசிவிடக்கூடாது என
கோட் அணிந்து
கந்தைமறைத்து தமிழ்த்தாய்க்கு குடை பிடித்தவன்..
துப்பாக்கி தூக்கிய வெள்ளையன் முன்னே
துண்டுப்பேனாவைத் தூக்கி
பயம் காட்டிய பலசாலி..
மகுடம் சூடிய அரசரெல்லாம்
சிரம்பணிந்து  கொண்டாடிய முண்டாசுக்கவிஞன் இவன்…..
கோபியர்கொண்டாடிய கண்ணனுக்கு பாட்டெழுதினாலும்
தன் செல்லம்மாவிற்கு கடைசிவரை கண்ணியம் குறையாத கணவனாய் வாழ்ந்தவன்…
அச்சம் என் அகராதியில் கிடையாது என
ஆயுள் முழுதும் அதனடி தொழாமல் வாழ்ந்த வைராக்கியத்தின் அசல்வடிவம் இவன்…
தமிழ்நேசிக்கும் எந்தவொரு தமிழனும்
இவனை நேசிக்காமல் இருந்தால்
அவர்களது தமிழ்நேசத்தில்
எனக்கொரு ஐயமுண்டு…
எட்டயபுரத்து இலக்கியச்சூரியனாய்
உதித்தாலும்
தமிழ்வாழும் நாள்வரை
இவன் ஆயுள் நீளும்..
……………………………………….
சிகரம் சதிஷ்குமார்
புதுக்கோட்டை
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.