பிடிக்கும் ஆனால் பிடிக்காது : ஒரு கதை சொல்லட்டுமா? : Episode-2
ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் மேலதிகாரி ஒருவர் தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு பெண்ணின் மேல் ஒரு புகாரைச் சுமந்தபடி என்னைப் பார்க்க வந்தார். அக்குறிப்பிட்ட பெண் அலுவலகத்தில் அனைவரிடமும் நிறையப் பேசுவது, வேலைநேரத்தில் மற்றவர்களின் வேலையைக் கெடுப்பது போன்ற பல இடையூறுகளைச் செய்வதனால் அப்பெண்ணை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமலும் அதனால் தனக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கு விடை தேடும் நோக்கிலும் என்னிடம் வந்தார்.
ஆலோசனை (COUNSELLING) வழங்குவதற்காகவும் புரிதலுக்காகவும் கேட்கப்படும் வழக்கமான கேள்விகளுக்குப் பிறகு அவரிடம் அவரின் மன உளைச்சல் தொடர்பாக, “குடும்ப உறுப்பினர் தவிர உங்களுக்கு மிகவும் பிடித்த முதல் ஐந்து பேரின் பெயரைச் சொல்லுங்கள்” என்றேன். அவரும் பட்டியலிட்டார். மேலும் அவரிடம், “உங்களுக்கு மிகவும் பிடித்த இந்த ஐந்து பேரை ஒரு நாளைக்கு எத்தனைமுறை சிந்திக்கிறீர்கள்” என்று கேட்கப்பட்டது.
அதற்கு, “இல்லையே, இவர்களைப் பற்றி நான் யோசிப்பது மிக அரிது. அவர்களை நேரில் பார்க்கும்போதோ, அவர்களிடம் தொலைபேசி அழைப்பு வரும்போதோ மட்டுமே அவர்களின் நினைவு எனக்கு வரும்” என்றார். பிறகு அவருக்கு அவர் மன உளைச்சல் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் சாராம்சத்தை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நான் பார்த்த மனிதர்களில் பெரும்பாலானோர் வயது வித்தியாசமில்லாமல் இதே மனநிலையில்தான் இருக்கின்றனர்.
இதில் இரண்டு விஷயம் உள்ளது. ஒன்று உங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றி நீங்கள் யோசிப்பதே இல்லை. அதே நேரத்தில் உங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி நிறைய யோசிக்கிறீர்கள். இது ஒரு முரண்பாடான வாழ்க்கை மனநிலை. முதலில் உங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி நீங்கள யோசிப்பதை அலசுவோம். “அவங்க இப்படி பேசுறாங்களே, இனிமே இப்பத் பேசினா நாம இந்த மாதிரி பதில் சொல்லணும்” என்கின்ற ரீதியில் ஒரு திட்டமிடுதல் உங்கள் மனதில் ஓடும்.
அதே விஷயம் திரும்ப நடந்தால் எப்படிக் கையாளுவது என்று திட்டமிடுவது, அவர்கள் பேசுவது மற்றும் அதற்கு நீங்கள் பதில் சொல்வது போன்ற வார்த்தைத் தயாரிப்புகள் நீங்கள் குளிக்கும்போது, துவைக்கும்போது, கழிவறையில் இருக்கும்போது என்று நீங்கள் தனிமையில் இருக்கும் அனைத்துச் சூழலிலும் உங்கள் மனதுக்குள் நடந்துகொண்டே இருக்கும். இது வேறு ஒரு உதாரணம் மூலம் உங்களுக்கு எளிதாகப் புரியும்.
காதலர்களை கவனித்ததுண்டா? நாளை சந்தித்துக் கொள்ளும் நிலையில் உள்ள காதலர்கள் முதல் நாள் அவர்கள் மனதிற்குள் பலவிதமான வார்த்தைத் தயாரிப்புகளில் இருப்பார்கள். “அவர்/அவள் இப்படி சொன்னால் நாம் இப்படிச் சொல்லவேண்டும்.” “இந்தந்த விஷயங்களைப் பேச வேண்டும்.” “இந்த நேரத்தில் அவருக்கு/அவளுக்கு பரிசளிக்கவேண்டும்” என்று பலவிதமான ஒத்திகைகள் இருவரின் மனதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அடுத்தநாள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளும்போது அவர்கள் இருவரும் முதல்நாள் பார்த்த ஒத்திகை வார்த்தைகள், உணர்வுகள் அனைத்தும் மறந்துபோகும்.
“நிறைய பேசணும்னு வந்தேன், எல்லாம் மறந்துபோச்சு” எனும் வசனங்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எதனால் இப்படி? நீங்கள் திட்டமிடும் அனைத்தும் நடைமுறையில் சாத்தியமில்லை. மன உளைச்சல் என்பது ஒரே விஷயம் சம்பந்தமான எண்ணங்கள் உங்கள் மனதில் திரும்பத் திரும்ப எழுவதுதான். காதலர்களுக்கு அவ்விதமான உளைச்சல் சுமையாக இருந்தாலும் ஒருபக்கம் ஆனந்தமாக இருக்கும். ஆனால் தொழில் தொடர்பாக, சமூக உறவு தொடர்பாக ஏற்படும் உளைச்சல் மிகப்பெரிய
தொல்லையாகவும், அடுத்தடுத்த விஷயங்களில் கவனம் செலுத்தமுடியாத சிக்கலாகவும் தொடரும்.
அடுத்ததாக, உங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றி யோசிப்பதை ஆராய்வோம். நீங்கள் ஏன் அவர்களைப் பற்றி பெரிதாக யோசிப்பதில்லை தெரியுமா? “கிணற்று தண்ணியை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு செல்லும்?” எனும் மனநிலை. அவர்கள்தான் உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயங்களைக் கொண்டிருக்கின்றனரே! அதனால் அவர்களிடம் செய்வதற்கு உங்கள் பக்கத்திலிருந்து எதுவும் இல்லை. எனவே இவர்கள் உங்களுக்கு உளைச்சலாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
இதனை மூன்று விதங்களில் அணுகலாம். ஒன்று, உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு எப்படி ஆச்சர்யப் பரிசுகள், உங்களின் அருகாமை மற்றும் உங்களின் அக்கறையை வெளிப்படுத்தி உங்களின் உறவுகளை பலப்படுத்திக்கொள்ளும் விதங்களில் உங்கள் மனதின் சிந்தனையை செலுத்தலாம். இதன் விளைவு மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், சிந்தனை பலம் மற்றும் உறவுகள் அழகாகும். இரண்டு, ஒரு இரகசியத்தைப் புரிந்துகொள்ளுதல். நீங்கள் அதிகமாக யோசிக்காத எந்த உறவுகளிடமும் உங்களின் உறவுமுறை மிக இயல்பாக, சரியாக அமையும்.
ஏனெனில் முன்னேற்பாடான நடிப்புகள் இல்லாதபோது யதார்த்தமான உங்களின் இயல்பு வெளிப்படும். இதன் விளைவு உங்களுக்குத் தொல்லை தரக்கூடிய மனிதர்களை சூழ்நிலைகேற்ப இயல்பாக கையாளும் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். மூன்றாவதாக, உங்களைப் பற்றி நிறைய யோசியுங்கள். உங்களின் பேச்சு, நிறைகுறைகள், குணம், பக்குவம், இவர்களை ஏன் பிடிக்கவில்லை, இவர்களை ஏன் பிடிக்கிறது, உங்களை மாற்றிக் கொள்ள ஏதேனும் வழி உண்டா, உங்களை வெளிப்படுத்துவதில் ஏதேனும் குறை உள்ளதா போன்றவற்றை பற்றி அதிகம் யோசியுங்கள்.
இதன் விளைவு உங்களிடம் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம். எந்த விதம் உங்களுக்கு எதுவாக இருக்குமோ அதனைக் கைகொள்ளலாம். வாழ்த்துகள்.
கதை தொடரும்…
…………………………………………………………………………………………………………………………………………………………..
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply