தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்படும். – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

Share Button

சென்னை :-

தமிழைச் சிறப்பாக உச்சரித்தால் பரிசு!

தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்படும். – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின் மீதான பதிலுரையின்போது உரையாற்றிய தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், அனைத்துக் காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் .

தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதுடன் ரூ.5 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு அளவில்லா உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 4 பேரைத் தேர்வு செய்து ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தமைக்கு தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.பிரபுதாஸன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தியாகராயநகர் SHASUN ஜெயின் கல்லூரியுடன் இணைந்து தமிழ்ச் செய்திவாசிப்பாளர்கள் சங்கம் நடத்தும் செய்திவாசிப்பு பயிற்சிமையம் (TSVS ACADEMY) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

மூத்த முன்னோடி செய்திவாசிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கொண்டு தமிழை அழகாக, உச்சரிப்பைத் தெளிவாக, நம் மொழியைச் சரியாக பயன்படுத்த இளம் தலைமுறைக்காக இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்ச்செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் கூறும் நல்லுலகில் ஊடகங்கள் வாயிலாக தமிழை உயர்தனிச் செம்மொழியாக எந்நாளும் காத்து எட்டுத்திக்கும் அதன் புகழ்பரப்பச் செய்வதற்கான ஆகச் சிறந்த இந்த முயற்சிக்கு, தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்கள் சங்கமும், அதன் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களின் தலையாய பங்களிப்பை நிச்சயம் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம்.

தமிழ்நாடு அரசின் இது போன்ற மேலும் பல அறிவிப்பு அருவிகள் எங்களின் தமிழ் தாகத்தை தீர்த்து வைப்பதோடு மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கும் வாய்க்கால் வெட்டிவிட வாய்ப்பளிக்கும் என்பதை நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிழ்ச் செய்திவாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.பிரபுதாஸன் தெரிவித்துள்ளார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *