எனக்குப் பிடித்த நபர்களில் ஒருவர் திரு இறையன்பு!

Share Button

சிலர்மீது நேரில் சந்தித்துப் பேசிப் பழகாமலேயே மனதுக்குள் ஒரு இதமான நட்புணர்வும் நன்மதிப்பும் ஏற்படும்.

அப்படி எனக்குப் பிடித்த நபர்களில் ஒருவர் திரு. இறையன்பு.

அரசின் எந்தத் துறையில் எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் அதை இதற்கு மேல் சிறப்பாக செம்மைப்படுத்த இயலாது என்கிற அளவில் தனக்குத் தானே இலக்குகள் அமைத்து செயல்பட்டவர்.

மாநில அரசின் தலைமைச் செயலாளர் என்கிற பணியின் பொறுப்பு மிக முக்கியமானது. அவர் அதை ஏற்றச் சூழல் கொரானா என்கிற வினோத மருத்துவ சவால் நிறைந்த நேரம்.

பணியிலிருந்து ஓய்வு பெறும் நேற்றுவரை ஒரு புகாரும் சொல்ல முடியாத திறமையான செயலதிகாரியாகவே இயங்கியிருக்கிறார்.

புத்தாண்டு வாழ்த்து அனுப்பினால், நன்றி சொல்லி பதிலுக்கு வாழ்த்தி கைப்பட எழுதிய கடிதம் வரும். அந்த அளவே அறிமுகம் என்ற சூழ்நிலையில் என் இரண்டாம் மகளின் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தேன்.

நேரில் செல்லவில்லை. போனிலும் அழைக்கவில்லை. வாழ்த்துக் கடிதம் வருமென்று நினைத்தால் வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு ஆச்சரியமளித்தார்.

இரண்டு முறை மட்டுமே தலைமைச் செயலகத்தில் சந்தித்தேன். ஒரு முறை ஒரு அழைப்பிதழ் கொடுக்க. மற்றொரு முறை ஒரு பொதுநலக் கோரிக்கையுடன்.

அந்தக் கோரிக்கையை பிறகு படிப்பதாகச் சொல்ல உரிமை உண்டு. ஆனால் உடனே படித்தார். பரிசீலிக்கச் சொல்லி குறிப்பெழுதி கையெழுத்திட்டார்.

உடனே தன் மொபைலில் படம் எடுத்தார். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிக்கு என் முன்பாகவே அனுப்பி வைத்தார். என்ன ஒரு வேகம்.

புத்தகங்கள் பரிமாறிக் கொண்டோம். அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் நாம் பரிமாறிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இப்போது பரிமாறிக் கொள்ளலாம் என்பதால் இத்துடன்…

பணி ஓய்வுக்குப் பிறகு சமூக நலப் பணிகளில் முழுமையாக ஈடுபடப் போவதாக சொன்னார்.
அவரின் அப்படியான செயல்பாடுகளில் அணிலுதவி செய்யக் காத்திருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வடிவம் பெற்றுவரும் விதைப்போம் திட்டம் குறித்தும் விரைவில் அவரைச் சந்தித்து கலந்துரையாட இருக்கிறேன். அவரின் வழிகாட்டல்கள் அந்தத் திட்டத்திற்கு வலு கூட்டும் என்பது உறுதி.

அவர் தலைமைச் செயலாளராக பதவியேற்றதும் அரசின் நூலகங்களுக்கு தனது புத்தகங்களை வாங்கக் கூடாதென்றும், அரசு விழாக்களில் தனது புத்தகங்களைப் பரிசளிக்கக் கூடாதென்றும் முதல் உத்தரவு போட்டார்.

இப்போது அவரின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால் இனி அவர் புத்தகங்களை அரசு வாங்கலாம். விழாக்களில் பரிசளிக்கலாம். இதை அவர் சொல்லமாட்டார் என்பதால் அவர் சார்பாக நான் தெரிவிக்கிறேன்.

இறையன்பு என்பதை விடவும் மனிதன்பு என்கிற பெயரே அவருக்குப் பொருத்தம். மனித நேயப் பணிகளை அதிகாரமின்றித் தொடரப் போகும் உதாரண மனிதருக்கு நல்வாழ்த்துகள்.

– Pattukkottai Prabakar Pkp, Writer

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *