மு.க.ஸ்டாலினுக்கு முட்டுக் கட்டையாகும் உதயநிதி? குடும்பத்தை குலுக்கி எடுக்கும் சின்னவர் சென்டிமென்ட்!
சென்னை :-
மு.க.ஸ்டாலினுக்கு முட்டுக் கட்டையாகும் உதயநிதி…? குடும்பத்தை குலுக்கி எடுக்கும் சின்னவர் சென்டிமென்ட்!
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று சொல்லியபடியே நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாரே… அந்த ஒரு பார்வையில் தமிழக மக்கள் ஏராளமாக எதிர்பார்த்தார்கள்.
ஆனால் இந்த இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக வேறு மாதிரியான பிம்பம் திமுக அரசின் மீது ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதுதான்.
காரணம் திமுகவை தற்போது உலுக்கி வருவது உதயநிதி ராசி சென்டிமென்ட்தான். பகுத்தறிவுக் கோட்டையான திமுகவில் ராசி சென்டிமென்ட்களுக்கு இடமுண்டா என்ற ஆச்சரியத்தோடு திமுக சீனியர்கள் சிலரிடம் பேசியபோதுதான் அந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
“திமுகவில் அதுவும் முதல்வரின் குடும்பத்திலேயே ஜோதிடம், கோயில் வேண்டுதல், ராசி எல்லாம் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த நிலையில்தான் சிலர் முதல்வரின் வீட்டிலேயே உதயநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் பற்றி முதல்வர் குடும்பத்தினரிடம் பகீர் சென்டிமென்ட் மேட்டரை சொல்லியிருக்கிறார்கள்.
சில வாரங்களாகவே இதுதான் டாப் லெவலில் ஹாட் ஆன பேச்சாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்க கொடுக்க அது முதல்வர் ஸ்டாலினுக்கு தேவையில்லாத புதிய பிரச்சினைகளை கொண்டுவரும் என்பதுதான் அவர்களின் ஆரூடமாம்.
உதயநிதி பிறப்பதற்கு முன்பே எமர்ஜென்சியில் சிறை சென்றவர் ஸ்டாலின். உதயநிதி நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அதாவது 2016 சட்ட மன்றத் தேர்தலிலேயே திமுக ஆட்சிக்கு வரவேண்டியது.
2015 ஆம் ஆண்டு ஸ்டாலின் நமக்கு நாமே என்ற வெற்றிகரமான பயணத்தை தமிழகம் முழுதும் வெற்றிகரமாக நடத்தினார். அப்போது உதயநிதி எனக்கு நானே என்று சினிமா உலகின் சொகுசுச் சுற்றுலா வந்துகொண்டிருந்தார்.
அப்போதே குடும்பத்தில் இருந்து உதயநிதியை திமுகவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அழுத்தங்கள் இருந்தன. ஆனால் கலைஞர் என்ற பெருஞ்சுவர் இருந்ததால் இது சாத்தியப்படவில்லை.
ஆனால், உதயநிதி கட்சிக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து குடும்பத்துக்குள் கருவாகி உருவான அந்த நேரத்திலேயே, 2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர வேண்டிய பொன்னான வாய்ப்பு கை நழுவிப் போனது.
நூறு தொகுதிகள் திமுக கூட்டணி பெற்றும் அதிமுகவே பெரும்பான்மை பெற்றது. ஸ்டாலின் உழைப்பு வீணானது. இது உதயநிதியின் 2016 ஆம் ஆண்டு பலன். 2018 இல் கலைஞர் காலமான நிலையில் 2019 தேர்தல் பிரச்சாரத்தில் குடும்ப அழுத்தத்தால், உதயநிதி ஸ்டாலின் திணிக்கப்பட்டார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றபோது அப்போது திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பு பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐபேக் நிறுவனம், ‘இந்தத் தேர்தலில் திமுக மட்டுமே 150 தொகுதிகளுக்கு மேலாக ஜெயிக்கும்.
ஆனால் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மகனுக்கு சீட் வேண்டும் சிலர் குறுகிய லாப நோக்கோடு கோரிக்கை வைக்கிறார்கள். உதயநிதிக்கு இந்த முறை தேர்தலில் வாய்ப்பு வழங்கக் கூடாது.
அப்படி வழங்கினால் திமுகவின் மீது அழுத்தமாக குத்தப்பட்டு தற்போது மறைந்து வரும் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் மீண்டும் மிக வேகமாக மக்களிடம் எழும். எனவே உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம்’ என்ற ஆலோசனையை முன் வைத்தனர்.
இதை ஸ்டாலின் ஒப்புக் கொண்டாலும் அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாததால் ஐபேக் ஆலோசனையை மீறி உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்டார்.
இதுவே மக்களுக்கு பெரும் சலிப்பானது. 1971 தேர்தலைப் போல மெகா வெற்றி பெற வேண்டிய திமுக உதயநிதி என்ற ’கத்துக்குட்டி’ வாரிசுத் திணிப்பால் 2021 இல் 125 இடங்களை மட்டுமே பெற்றது. இதுதான் உதயநிதியின் அடுத்த ராசி.
முதல்வரின் முதல் குடும்பம் என்ற சொற்றொடர் இன்று எதிர்க்கட்சிகளால் பெரும் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டதற்கு முதன்மைக் காரணம் உதயநிதிதான்.
2021 தேர்தல் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் இன்னும் இருபது முதல் முப்பது சீட்டுகள் திமுகவுக்கு கூடுதலாக கிடைத்திருக்கும். வாரிசு அரசியல் என்ற பயத்தால் அது தடுக்கப்பட்டது.
அதுபோலவே உதயநிதி அமைச்சராக வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு, 2022 டிசம்பர் மாதம் அதுவும் நிறைவேற்றப்பட்டது.
அதன் விளைவு என்ன தெரியுமா, ‘முதல் அமைச்சரே’ என்று உதயநிதியை புகழ்வதாக சொல்லி முதலமைச்சர் ஸ்டாலினின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் செயல்பாடுகளில் திமுகவினரே வெளிப்படையாக இறங்கிவிட்டனர்.
’அவருக்கு இப்போது அளிக்கப்பட்டு வரும் அதிகப்படியான முக்கியத்துவத்தால்தான் செந்தில்பாலாஜி ரூபாத்தில் ஸ்டாலினுக்கு மேலும் பல சிக்கல்கள் காத்திருக்கின்றன.
எனவே இப்போதைக்கு உதயநிதிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை குறைத்தால்தான் கட்சிக்கும் நல்லது, உதயநிதிக்கும் நல்லது என்று அந்த ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.
இதனால் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கிறார்களாம் குடும்பத்தில் என்று திமுக தலைமைக்கு நெருக்கமான சீனியர்களே…
மேலும், “சின்னவர் சின்னவர் என்று உதயநிதியை அழைப்பதால் அவருக்கு மட்டுமல்ல கட்சிக்கும் இறங்குமுகம்தான். ஏனென்றால் அண்ணா காலமானபிறகு திமுகவின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலைஞரை, ‘சின்ன அண்ணா’ என்று அழைக்கலாம் என்று அப்போது ஒரு நிர்வாகி தெரிவித்தார்.
அப்போது கலைஞர் எழுந்து, ‘சின்ன அண்ணா நடு அண்ணா என்றெல்லாம் யாரும் கிடையாது. அண்ணா என்றால் ஒருவர்தான்’ என்று முளையிலேயே கிள்ளி எறிந்தார்.
அதிமுகவில் சசிகலா சின்னம்மா என்று அழைக்கப்பட்டார். சின்னம்மா என்றாலே அம்மாவுக்கு அடுத்தது என்றாலும் அது ஒரு நெகடிவ் நேரேஷனைக் கொடுக்கிறது. அதாவது அளவு குறைவானது என்று பொருள்படுகிறது.
சின்னம்மா என்ற பெயரை வைத்துக் கொண்டு அவரும் சிறைக்கு சென்றுவிட்டார். கட்சியும் நான்கைந்து துண்டுகளாகிவிட்டது. அதேபோல உதயநிதியை சின்னவர் என்று அழைப்பதால் அவருக்கும் ஆபத்து, கட்சிக்கும் ஆபத்து” என்று மேலும் சில பிட்டுகளையும் ஜோதிடர்கள் போட்டிருக்கிறார்கள்.
இதனால் டாப் குடும்பமே இப்போது குழப்பத்தில் இருக்கிறதாம். பரிகாரம் உண்டா என்ற கேள்வியோடு அடுத்த கட்ட ஆலோசனைகள் தொடர்கிறதாம்…
Leave a Reply