திருவண்ணாமலை நவ.02- திருவண்ணாமலை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 5804 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், திண்டிவனம் நெடுஞ்சாலையில் தென்அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து ஆழ்துளை கிணறு மூடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்ததை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 5804 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டு, அதில் மழைநீர் சேகரிப்பாக மாற்றக் கூடியதை மாற்றியும், பயன்படுத்த முடியாத ஆழ்துளை கிணறுகளை முழுமையாக மூடும் பணிகளும் முடிவடைந்துள்ளது. இப்பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உள்ளாட்சி நிர்வாகம் (நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள்), வருவாய்த் துறை, காவல் துறை மூலமாகவும், மேலும் 25 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டது. மேற்கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 1800-425-3678 மற்றும் 04175-233141 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், எனது கைபேசி 94441 37000 எண்ணிலும் தொடர்பு கொண்டும், வாட்ஸ்அப் தகவலாகவும் தெரிவிக்கலாம்’ என்றார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த சுஜித்தின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், அங்கிருந்த ஆழ்துளை கிணறு மழைநீர் சேகரிப்பாக மாற்றப்பட்டு, பாதுகாப்பாக மூடும் பணிகளை பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
பா. ஜெயசுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்தன், வட்டாட்சியர் அமுல், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply