கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் அவரது தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்!

Share Button
கோவை : கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரடைப்பால் சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை வதம்பச்சேரியிலுள்ள அவரது தோட்டத்து வீட்டில் உயிரிழந்தார்.
கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த கனகராஜ் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 16 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்தார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
தொடர்ந்து அவ்வப்போது கட்சி குறித்தும் ஆட்சி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த கனகராஜ் சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை அருகேயுள்ள வதம்பச்சேரி பகுதியிலுள்ள தனது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வீட்டில் நாளிதழ் வாசித்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக அருகிலிருந்த மருத்துவரை அழைத்து பரிசோதித்துள்ளார்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் துவங்கியுள்ள நிலையில் நேற்றைய தினம் பிரச்சாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கனகராஜ் பொதுமக்களையும் சந்தித்துள்ளார்.
திடீரென அவர் உயிரிழந்த தகவல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1952 ம் ஆண்டு பிறந்த கனகராஜ் கடந்த 35 ஆண்டுகளாக அதிமுக வில் உறுப்பினராக உள்ளார். மேலும் சுல்தான்பேட்டை ஊராட்சி தலைவராக இரண்டு முறையும் மாவட்ட கவுன்சிலராக ஒருமுறையும் பதவி வகித்த அவர் கடந்த 2011 முதல் 2016 வரை கோவை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *