கல்வி உயர : (பாகம்-1) தேர்வுகள் அடிப்படையில் தரமான கல்வியை தீர்மானிக்க முடியுமா?

Share Button

எது தரம்?

மதுரை தென்சரகத்திற்குட்பட்ட பகுதியில் எங்கள் பள்ளி அமைந்துள்ளது. இதுவரை பல நேர்மையான கல்வி அதிகாரிகளைக் கண்டிருக்கிறேன்.

ஆனால், சமீபத்தில் வந்துள்ள கல்வி அதிகாரிகள் இருவரும் நேர்மையுடனும், கல்வியின் தரம் குறித்தும் தொடர்ந்து தலைமையாசிரியர் கூட்டங்களில் வலியுறுத்தி வருவது வியப்பளிக்கிறது.

நேற்றைய த.ஆ கூட்டத்தில் தேர்வு குறித்து சில விபரங்கள் பேசபட்டன. ஒன்று முதல் எட்டுவரை எல்லா பருவத்திற்கும் பொதுவான வினாத்தாள், தேர்வுகளை நியாயமான முறையில் நடத்துவதன் வழி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வட்டாரக் கல்வி அதிகாரி விவாதித்தார்.

அப்போதுதான் தரம் குறித்த சிந்தனை தோன்றியது.

தேர்வுகள் அடிப்படையில் தரமான கல்வியை தீர்மானிக்க முடியுமா?

பொதுவாக தரம் தேர்வுகளை மட்டும் அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. அதனாலே, தனியார் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவுகளை விளம்பரப்படுத்தியே , தங்களை தரமானதாகக் காட்டிக் கொள்கின்றன.

மேலும், அவைகள் கட்டமைப்பு வசதிகளை முன்நிறுத்தி தரத்தை அடையாளபடுத்தியும் வருகின்றன. கட்டமைப்பு வசதிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தர வளர்ச்சிக்கு தடைகளாக உள்ளன. மேம்படுத்துதல் அவசியம்.

தேர்வு முடிவுகள், கட்டமைப்புகள் மட்டுமே தரத்தை தீர்மானிப்பவையா? அது உண்மையான தரமா?

தரம் என்றாலே ஒப்பிடுவது என்றாகிவிட்டது. காலம்காலமாக இப்படி தனியார் பள்ளிகளுடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை ஒப்பிடுகிறோம். அதுசரியான அணுகுமுறையா?

ஒப்பிடுதற்குமுன் சில கேள்விகள்…

இந்தியாவில் கல்வி எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கிறதா? கிடைக்கிறது என்றால் அனைவருக்கும் சமமான அளவிலா? சமத்துவம் நிலவுகிறதா?

2009 – கல்வி உரிமைச் சட்டம், கட்டாய இலவச கல்வியை 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உறுதி செய்கிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை.

இன்னும் மாநிலம் முழுவதும் இடைநிற்றல் மாணவர்கள் எண்ணிக்கை காணப்படுகிறதே? ! மாவட்டம் தோறும் காணப்படுகிறது. ஏன்?

2.5 % சதவீதம் தனியார் பள்ளிகளில் பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும் , அந்த வகுப்பறைகளில் பலதரப்பட்ட பொருளாதார, பண்பாட்டுப் பின்னனியுள்ள குழந்தைகள் பயிலும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது அல்லது இல்லை.

கல்வியின் தரத்தை எப்படி அணுகுவது?

குழந்தைகள் அறிவையும், திறமையையும் பெறுவதற்கு அளிக்கப்படும் அனுபவங்களின் அடிப்படையிலும் கல்வியின் தரத்தை காண வேண்டும்.

1. குழந்தைகளுக்கு அறிவையும் திறமையையும் அளிப்பவர் யார்? எவை?

1. அடிப்படையில் ஆசிரியர்கள் . 2.
பாடநூல்கள், பாடத்திட்டத்தை உருவாக்குவோர்.

தற்சமயம், தனியார் பள்ளிகளின் பாடநூல்கள் அரசு பள்ளி பாடநூல்களும் வெவ்வெறானவை.

அமைய உள்ள கல்விக் கொள்கை அனைவருக்கும் ஒரேமாதிரியான பாடநூல் வழங்குவற்கு உறுதி அளிக்க வேண்டும். ஆகவே, தனியாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் , மனிதகுலம் எதிர்நோக்கும் சவால்களைச் சந்திக்கும் வகையில் பாடநூல்கள் மற்றும் பாடப்பொருள்களை அமைக்க வேண்டும்.

அதேபோல், தரமான கல்விக்குத் தகுதி வாய்ந்த, ஈடுபாடுள்ள ஆசிரியர்கள் தேவை. ஆசிரியர்கள் தெரிவு டெட் தகுதித் தேர்வு அடிப்படையிலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும். தற்போது நடைபெறுகிறது. அவர்களை ஈடுபாடு உள்ளவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு கல்விக்கொள்கையின் முன் உள்ள சவால் ஆகும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, பணி திறமைகளை மேம்படுத்துவது போன்றவை குறித்தும் தமிழக கல்விக் கொள்கை தெளிவான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தரமான கல்வியை உருவாக்குவதன் வழி சமூகமாற்றத்தை நோக்கி குழந்தைகளை நகர்த்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிந்தனைகள் மேம்படுத்தவும் முடியும். அதன் வழி தரமான வாழ்க்கையை உருவாக்க முடியும். அமைதி கல்வி குறித்த சிந்தனையை விதைக்க போர் , மனித உரிமை குறித்தும் பாடகருத்தாக்கத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

கல்வித் தரம் என்பது ஆசிரியர்களின் தரம் சார்ந்து உள்ளது . ஆகவே, ஆசிரியர்கள் நியமனத் தேர்வு வழிமுறைகள், பயிற்சி முறைகள் குறித்து இன்னும் பொறுப்பான ஊழல் அற்ற கட்டமைப்பு தேவை என்பதையும் , ஆசிரியர்களின் பொறுப்புகள் உறுதிப்படுத்துதல் சார்ந்தும் அமைய உள்ள கல்விக் கொள்கைக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.

தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கல்வி அனைவருக்குமானதாக ஏழை எளியவர்களுக்கும் முழுமையாகவும் தரமுடன் சென்றடைய வேண்டும் என்ற அதிகாரிகளின் பேச்சு , கல்வி துறை மீது நம்பிக்கையை கொஞ்சம் கூடுதலாக்குகிறது. தமிழக கல்வி கொள்கை குறித்த எதிர்பார்ப்பும் , நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

தொடர்ந்து கல்வி உயர , தரமான கல்வி அமைய கல்வி குறித்து விவாதிப்போம்.

க.சரவணன், எழுத்தாளர் – மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “கல்வி உயர : (பாகம்-1) தேர்வுகள் அடிப்படையில் தரமான கல்வியை தீர்மானிக்க முடியுமா?”

  1. Visali M says:

    சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *