பல்திறன் வித்தகி டாக்டர் ராஜி ஸ்ரீனிவாசன் (சிங்கப்பூர்) – சிறப்பு நேர்காணல்!

Share Button

பல்திறன் வித்தகி டாக்டர் ராஜி ஸ்ரீனிவாசன் (சிங்கப்பூர்) – சிறப்பு நேர்காணல்!

தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் எனும் முண்டாசுக்கவிஞனின் வைர வரிகளை, தன் வாழ்வின் கொள்கையாக வரித்துக்கொண்டு, குளித்தலையில் பிறந்து வளர்ந்து, மாமதுரையில் ஆங்கிலம் பயின்று, அயல்தேசமான சிங்கப்பூரிலே பணிக்கமர்ந்து, அங்கே பல்துறை வித்தகியாகி, தமிழை அங்கே பரப்பிக்கொண்டிருக்கிறார் முனைவர் ராஜி ஸ்ரீனிவாசன்.

இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்ன தெரியுமா? இவரது தாய்மொழி தெலுங்கு என்பதுதான். எழுத்தா? பேச்சா? நடிப்பா? பட்டிமன்றமா? மொழிபெயர்ப்பா? மலையேற்றமா? கலை அரங்கேற்றமா? சிங்கையில் தமிழ்ப்பெண் சிங்கமாய் இருக்கிறார் ராஜி ஸ்ரீனிவாசன்.

அவரை இனியதொரு மாலைப்பொழுதில் இணைய வழியில் சந்தித்து உரையாடினோம். இனி கேள்விகளும் அவரது பதில்களும்…

உங்களின் பிறப்பு, கல்வி குறித்துச் சொல்லுங்க?

எனது அப்பா பெயர் எஸ்.பாலசுப்ர மணியன். தெலுங்குதான் எங்களது தாய்மொழி. குளித்தலையில்தான் பிறந்தேன். குளித்தலை எஸ்பிஜி மிஷன் பள்ளியிலும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரையில் உள்ள நிர்மலா மகளிர் பள்ளியிலும் எனது பள்ளிப்படிப்பு இருந்தது.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில், ‘நான் கணிதம்தான் படிக்க வேண்டும்’ என்று எனது அப்பா ஆசைப்பட்டு, அங்கே என்னை பிஎஸ்சி மேத்ஸில் சேர்த்தார். உண்மையில் சொல்லப்போனால் எனக்கு மேத்ஸ் படிக்க விருப்பமே இல்லை. ஆனாலும் படிச்சிகிட்டுதான் இருந்தேன்..

கணிதவியல் படித்த நீங்கள் எப்படி ஆங்கில இலக்கியம் படித்து முடித்தீர்கள்?

அங்கு படிக்கிறபோது உடம்பு சரியில்லாம போனதால், அதைச் சாக்கா வச்சிகிட்டு, மதுரைக்கு வந்துவிட்டேன். மேத்ஸ் படிக்க விருப்பமில்லை என்பதால், அப்பாவிடம் அடம்பிடித்து அங்கே இறுதி ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்து படித்து முடித்தேன்.

எம்.ஏ., ஆங்கில இலக்கியம், எம்.பி.ல்., ஆங்கில இலக்கியம் மதுரை தியாகராயர் கல்லூரியில் படிச்சேன். என்னுடைய அப்பா அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். கல்லூரியில் இருக்கும்போது என்னிடம் ரொம்ப கண்டிப்பான ஆசிரியராக இருப்பார். எனதுத் துறையில் இருந்த பேராசிரியரான சுப்பாராவ், அந்தகாலத்திலேயே கேம்ப்ரிட்ஜில் படித்துவிட்டு வந்தவர்.

பேராசிரியர் சக்திவேல் என்பவர் நடமாடும் பல்வேறு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட பேராசிரியர்களின் மாணவியாக வளர்ந்தேன். அவர்கள் சொல்லிக்கொடுத்த ஆய்வு முறைகள், கல்வி முறைகள் இன்றும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

எனது அப்பா அங்கே பேராசிரியராக இருந்தாலும் எனக்குச் சலுகை காட்டமாட்டார். படிப்பில் சிறந்து விளங்க வேண்டும். ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். இல்லை என்றால் தொலைச்சிக் கட்டிடுவார். இது எனக்கு மட்டுமல்ல. அவருடைய எல்லா மாணவர்களுக்கும்தான்.

கல்லூரி வாழ்க்கையில் உங்களை எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?

கல்லூரியில் படிக்கும்போது நான் என்சிசியில் இருந்தேன். துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றப்பயிற்சி என எதையும் தவற விடமாட்டேன். ஒவ்வொரு ஆண்டும் நான் இமயமலையில் மலையேற்றப்பயிற்சிக்கு செலக்ட் ஆயிடுவேன்.

என்சிசியில் இருந்ததால், எனக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைச்சது. எங்க தனியா மாட்டினாலும் சரி, அசால்ட்டா எப்படி வெளிய வரமுடியும்ங்கறதெல்லாம் என்சிசி மூலமா நான் கத்துகிட்ட பாடங்கள்னு சொல்லலாம். துணிச்சல், தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் என்சிசி எனக்குக் கற்றுக்கொடுத்தது.

குடியரசு தினத்தப்போ டிவியில என்சிசி மாணவர்கள் நடந்து வரதைப் பார்த்தா எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கும். இவை எல்லாமே என்னை நேர்த்தியான, பண்பட்ட, தன்னம்பிக்கையுள்ள பெண்ணாக உருமாற்றியது.

ஆங்கிலத்தில் முனைவர் பட்டப்படிப்பை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் சிறப்பாக செய்து முடித்தேன். இந்த பிஎச்டி எனக்கு வேலை கிடைப்பதற்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

உங்களின் கல்விப்புலமைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது யார்?

என்னுடைய அப்பாதான். பள்ளியில் இருந்து பிஎச்டி வரை அவரே எல்லாம். பிஎச்டி முடித்தப் பிறகு எனது அறிவை வளர்த்துக்கொள்ள சுயதேடலில் இறங்கினேன். சிங்கப்பூரில் Life Long Learning Journey என்று சொல்வார்கள்.

அதாவது, வாழ்நாள் முழுக்கக் கற்றல் என்று பொருள். அதை எனது சின்ன வயசிலேயே எனது அப்பா எனக்குச் சொல்லிக்கொடுத்து விட்டார். என் அப்பா மூன்று முதுகலைப் பட்டமும், இரண்டு பிஎச்டி பட்டமும் பெற்றவர். பிஎட் படித்திருக்கிறார்.

அந்தக் காலத்தில் குறைவாக இருந்த வசதிகளைக் கொண்டே இதையெல்லாம் அவர் படிச்சு முடிச்சிருக்கார்ங்கறதுதான் நாம கவனிக்க வேண்டிய விஷயம். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, சென்னைப்பல்கலையில் மறுபடியும் ஒரு முதுகலைப் படிப்பில் சேர்ந்து 70 வயதில் பட்டம் வாங்கினார்.

அதற்கடுத்த மூன்று வருடத்தில் ஒரு பிஎச்டி பட்டம் படித்து வாங்கினார். இதை ஏன் இங்கே சொல்றேன்னா, அவரே அப்படி இருக்கும்போது, அவரது மகளான எனக்குக் கல்விச் சார்ந்த அடித்தளத்தைச் சிறப்பாக அமைத்துக்கொடுத்திருந்தார். அதனால் படிப்பதில் எனக்குச் சிரமம் இல்லாமல் போனது.

பள்ளியில் படிக்கும்போதே பட்டிமன்றங்களில் பேசுவேன். தனிநபர் நடிப்பில் திறமையைக் காண்பிப்பேன். மேடைக்கலைகள் என்ற பெயரில் அப்போது நாங்கள் அடிக்காத கூத்தே இல்லை என்று சொல்லலாம்.

அவ்ளோ செஞ்சிருக்கேன். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என்னைக் கட்டுப்படுத்தி வைக்காமல் வேண்டிய சுதந்திரம் கிடைத்தது. எல்லாவற்றிலும் கலந்துகொண்டு, திறமையை வளர்த்துக்கொள்ள எனது அப்பா, அம்மா துணையாக இருந்தனர்.

இவங்க எல்லோரையும் விட என் பாட்டி என் மீதும், என் திறமை மீதும் நம்பிக்கை வைத்திருப்பவர். என் பேத்தி எங்க போனாலும் அசத்துவா. அவளைக்கண்டா மத்தவங்களுக்குத்தான் பயம் வரும் என்று என் பக்கம் நிற்பார். அவர்கள் கொடுத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தி வளர்ந்தேன்.

உங்கள் திருமண வாழ்க்கை குறித்து சொல்லுங்கள்?

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் வேறொரு முகத்தைப் பார்க்கவேண்டியிருக்கும் என்பார்கள். என் வாழ்விலும் அது இருந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால் அதை என் கணவர் சீனிவாசன் மாற்றிக்காட்டினார். நான் பிஎச்டி படிக்கும்போது என் வீட்டில் பார்த்து திருமணம் செய்துவைத்தார்கள். கல்யாணமாகி சென்ற வீட்டில், “என்ன இந்தப்
பொண்ணு படிக்கப்போறேங்குது, வேலைக்குப் போறேங்குது? இதெல்லாம் நம்ம வீட்டுக்குச் சரிப்பட்டு வராதே” என்று புகுந்த வீட்டில் எதிர்த்தார்கள்.

திருமணமான இரண்டாவது மாதத்திலேயே, என் மனைவி பிஎச்டி படிப்பார். அவரைப் படிக்க வைக்கறேன்னு வாக்குக் கொடுத்திருந்தேன். படிக்க வைப்பேன் என்று அவரது வீட்டில் எனக்கு ஆதரவாக நின்றார்.

யார் என்னச் சொல்லியும் கேட்கவில்லை. என்னை பிஎச்டியில் சேர்த்தது என் அப்பாவாக இருக்கலாம். அது மகள் எனும் ரத்தபந்தம். ஆனால், பிஎச்டிக்கு வேண்டிய பொருளுதவிகளை, ஆய்வு உதவிகளை கூட இருந்து செய்துக் கொடுத்தவர் என் கணவர் சீனிவாசன்தான்.

இத்தனைக்கும் நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள் இல்லை. வீட்டில் பார்த்து செய்துவைத்தத் திருமணம் இது. இப்படி ஒரு கணவர் கிடைத்தது கடவுள் அருள்தான்.

பட்டிமன்றம், தனிநபர் நடிப்புன்னு பல துறைகளில் வெளுத்து வாங்குகிறீர்களே? இதெல்லாம் எப்போது தொடங்கியது? எப்படி அதை வளர்த்தெடுத்தீர்கள்?

குளத்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது குடியரசு தினம் வந்தது. அதில் பேச்சுப்போட்டி இருந்தது. 5 நிமிடம் பேச வேண்டும். யார் பேசுகிறீர்கள் என்று வகுப்பில் கேட்டபோது, தைரியமா கையைத் தூக்கிட்டேன்.

அந்த வயசுல சுதந்திர தினம்னா என்ன? குடியரசு தினம்னா என்னன்னு எனக்குத் தெரியல.
பத்துப் பக்கத்துக்குச் சுதந்திர தினத்தைப்பத்தி எழுதிகிட்டு வந்து நிக்கறேன். அதைப்பார்த்த எனது ஆசிரியை, ஏய்… குடியரசு தினத்துக்குப் பேச வான்னு கூப்பிட்டா… நீ என்ன சுதந்திர தினத்தைப் பத்தி எழுதிகிட்டு வந்திருக்கன்னு சொன்னாங்க.

ஐயோ…! அப்படியான்னு சொல்லிட்டு உடனே தேதியையும், தினத்தையும் மாத்தி எழுதி வச்சிகிட்டு, மிகப்பெரிய கூட்டத்திற்கு முன்னாடி மேஜையை இறுக்கமாக பிடிச்சிகிட்டுப் பேசி முடிச்சேன்.

அதுதான் எனது முதல் மேடைப்பேச்சு அனுபவம். அதே தினத்துல ஒரு நாடகம் இருந்துச்சி. என்னை நடிக்கறதுக்கு கூப்பிட்டாங்க. மூன்று விதமான சீன்ல, மூன்று பேர் வரணும். அதுல முதல் சீன் எனக்கானது. அதை நடிச்சி முடிச்சிட்டேன்.

அடுத்த இரண்டு சீன்ல நடிக்க வேண்டிய இரண்டு பேரும் வரல. பயிற்சியின்போது அவங்க சொல்லிக்கொண்டிருந்த டயலாக் எல்லாத்தையும் கேட்டதால, அந்த இரண்டு சீன்களில் சிரமம் இல்லாம நானே நடிச்சேன்.

இதை என் அப்பாகிட்ட போய் சொன்னதும். அருமைம்மா நீ தனிநபர் நடிப்பே நல்லா பண்ணலாமே. அதைக் கத்துக்கோன்னு சொன்னார். ஷேக்ஸ்பியர் நாடகத்தை என் அப்பா பிரமாதமா மோனோஆக்ட் செய்வார். அதை எனக்கு செய்தும் காண்பித்தார். தனி நபர் நடிப்பில் எனக்கு ஆசான் யாரென்றால் என்னுடைய அப்பாதான்.

என்னுடைய பிஎச்டி ஆய்வு ஆப்ரிக்க அமெரிக்க பெண் ஆங்கில நாடக ஆசிரியர்களின் 5 நாடகங்களைப் பற்றி செய்திருந்தேன். இதனால் நாடகங்களும் எனக்குப் பரிச்சயமானது. நான் நடத்தும் நாடகப்பட்டறைகளிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கும்.

குடும்பத்தில் உங்களுக்கான ஆதரவு எப்படி இருந்தது?

என் அம்மா மிகவும் கண்டிப்பானவர். ஆனால், வேண்டிய அளவு சுதந்திரம் கொடுத்து, எனது முயற்சிகளுக்கு தடைசொல்லாமல், என்னை எல்லா துறைகளிலும் கலந்துக்கொள்ள ஆதரவு தந்தவர்.

திருமணத்திற்குப் பிறகான சுதந்திரம் என்பது நான் சிங்கப்பூர் வந்தபிறகுதான் அனுபவித்தேன். என்னுடைய பணிகளுக்கு, செயல்பாடுகளுக்கு எனது கணவர் ஆதரவு தந்ததை ஏற்றுக்கொண்டேன்.

முதல் மகள் அமெரிக்காவில் என்ஜினீயரிங் படித்துவிட்டு அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் பணிபுரிந்து இப்போது ஆஸ்திரேலியாவில் உயர் பதவியில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இரண்டாவது மகள் ம்ரித்திகா சிங்கப்பூரில் படித்துவிட்டு, இப்போது சிட்னியில் (ஆஸ்திரேலியா) சட்டம் மற்றும் பொருளாதாரம் படிச்சிகிட்டு இருக்காங்க.

தொடக்க காலங்களில் சிங்கப்பூரில் என்னென்ன பணிகளைச் செய்தீர்கள்?

சிங்கப்பூரில் பலவிதமான பணிகளைச் செய்திருக்கிறேன். ஆரம்பக் காலத்தில் அக்கவுண்டட்டாகப் பணியாற்றி இருக்கிறேன். எனக்கும் அக்கவுண்டட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. என் கணவர் ஒரு சார்ட்டட் அக்கவுண்டட்.

எனக்குக் கல்யாணமான புதிதில், அவரது வாடிக்கையாளர்களுக்கான கணக்கு வழக்குகளை அவர் தயாரிக்கும்போது, அவருக்கு உதவியாக இருந்திருக்கிறேன். அதன் மூலம் கற்றுக்கொண்டதை வைத்து, இங்கே அக்கவுண்ட் அசிஸ்டென்டாகப் பணியாற்றினேன்.

அதன்பிறகு மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்திருக்கிறேன். சிங்கப்பூரில் பல இடங்களில் சீனியர் புரோகிராம் எக்ஸிகியூட்டிவ் ஆக இருந்திருக்கிறேன். மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்தபோது, மாலை நேரங்களில் பல்கலைக்கழக வேலைகளையும் பார்ப்பேன்.

ஒரு காலகட்டத்தில் எனது குழந்தைகளுக்கு நான் அதிக நேரம் செலவிடுகின்ற சூழல் ஏற்பட்டது. இதனால் பகலில் பார்த்த வேலை நேரங்களைப் பிரித்து வெவ்வேறு நேரங்களில் பணியாற்றுவதாக வைத்துக்கொண்டேன். குழந்தைகளுக்கு நேரத்தைச் செலவிட்டேன்.
இதைத்தான் நேர நிர்வாகம் என்று சொல்வார்கள். நேர நிர்வாகம் மிகவும் முக்கியம்.

பட்டிமன்ற அனுபவங்கள் எப்படி? மற்றத்துறைகளில் தாங்கள் பங்கேற்றதும், வாய்ப்புகள் கிடைத்தது பற்றியும் சொல்லுங்கள்?

நான் பட்டிமன்றத்தில் பேசுகிறேன் என்றால், எனது திறமையை அடையாளம் கண்டு, அதைச் சரியான முறையில் செம்மைப்படுத்திய ஆசான் திருச்சியில் இருக்கும் மருத்துவர் கலைக்கோவனும், அவரது மனைவி மருத்துவர் ஔவை கலைக்கோவனும்தான்.

அவங்க இரண்டு பேருக்கும் நான் வாழ்நாள் முழுக்கக் கடன்பட்டிருக்கிறேன். பட்டிமன்றத்தில் என்ன பேசவேண்டும். எது பேசக்கூடாது. எப்படி நிற்கவேண்டும் என்றெல்லாம் என்னுடைய 15, 16-வது வயதிலேயே என்னைச் செதுக்கியவர்கள் அவர்களே. என் அப்பாவைப் பற்றிச் சொல்லும்போது எவ்வளவு பெருமைப்படுகிறேனோ கலைக்கோவன் அய்யாவைப் பற்றிப் பேசும்போதும் அதே பெருமையை அடைகிறேன்.

சிங்கப்பூரில் பட்டிமன்றத் துறையில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்றால் அது, தமிழ்ப்பட்டிமன்ற கலைக்கழகத்தின் நிறுவனரான யூசுப் ரஜீத் அவர்கள்தான். சிங்கப்பூரில் அவர் 100 பட்டிமன்றங்களை நடத்தி இருக்கிறார். அதில் 98 பட்டிமன்றங்களில் நான் பேசி இருக்கிறேன்.

நமக்கு பேசும் திறமை இருக்கலாம். ஆனா வாய்ப்புன்னு ஒண்ணு கிடைக்கணுமே. அந்த வாய்ப்பை எனது திறமை அறிந்து அவரது பட்டிமன்றங்களிலே பேச இடம் கொடுத்தவர் அவர்தான்.

மதுரையில் பலமுறை பட்டிமன்றங்களிலே பேசி இருக்கிறேன். தமிழ்க்குடிமகன் அதற்குத் தலைமைத் தாங்கி இருக்கிறார். திருச்சியில் பேராசிரியர் சத்தியசீலன் என்பவர் தலைமையில் பேசியிருக்கிறேன். எனது மதுரை தியாகராயர் கல்லூரிக்கால தமிழ்ப் பேராசிரியரான கு.ஞானசம்பந்தன் அய்யாவுடன் சிங்கப்பூரில் பட்டிமன்றம் பேசி இருக்கிறேன்.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றோரின் பட்டிமன்றங்களிலும் பேசி இருக்கிறேன். இப்படி நிறைய பெருந்தலைவர்களின் பட்டிமன்றங்களிலே பேசக்கிடைத்த வாய்ப்பு என்னை இத்துறையில் மென்மேலும் செதுக்கியது என்றே சொல்ல வேண்டும்.

புதுயுகம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நண்பர் சுவாமிநாதன் ஆதரவளித்தார். வலைத்தமிழ்த் தொலைக்காட்சியின் பார்த்தசாரதி அவர்கள் பல பன்னாட்டுப் பட்டிமன்றங்களுக்கு நடுவராக பங்கேற்க வாய்ப்பளித்தார். சிங்கப்பூரின் தமிழ்ப்பட்டிமன்றக் கலைக்கழகத்தின் நடப்புத் தலைவர் திரைப்படத் தயாரிப்பாளர் திரு.அருமைச் சந்திரன் அவர்கள் கல்யாணமாலை பட்டிமன்றத்தில் பங்கு பெற வாய்ப்பளித்தார்.

மேலும் ஜஷ்வர்யா ராஜேஷ் நடித்த “பறந்து செல்லவா” என்ற ஒரு திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். சிங்கப்பூரில் உள்ள தொலைக்காட்சியில் முதன்முறையாக திரு.பாலு மணிமாறன் அவர்கள் பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பளித்தார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை வாய்ப்புகளையும் நான் என் வசமாக்கிக்கொண்டேன் இதுதான் உண்மை.

சிங்கப்பூரின் இலக்கிய இதழ் ஜிலீமீ ஷிமீக்ஷீணீஸீரீஷீஷீஸீ ஜிவீனீமீs – ல் கட்டுரைகள், இலக்கிய மொழிபெயர்ப்பு மற்றும் நெடுங்கவிதைகள் எழுத வாய்ப்பளித்த திரு. ஷானாவாஸ், திரு.மகேஷ்குமார் மற்றும் திரு.சிவானந்தம் நீலகண்டம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அதேபோல எனக்குக் குறுநாவல் எழுத ஊக்குவித்த சகோதரர் எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தர் ராஜன் அவர்களுக்கும், சிறுகதைகளுக்கு வாய்ப்பளித்துப் பரிசளித்த சிங்கப்பூரின் தங்கமீன் இலக்கிய வட்டத்தின் நிறுவனர் திரு.பாலு மணிமாறன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்படி மாஸ்ட் நிறுவனத்தை தொடங்கினீர்கள்?

கற்பித்தல், தன்முனைப்புப் பேச்சு, நடிப்பு, கவிதை, பட்டிமன்றம், மொழிபெயர்ப்பு, ஆன்மீகம் எனப் பலத் துறைகளில் எனக்கு அனுபவம் இருந்ததால் அது என்னோடு நின்றுவிடக்கூடாது.

சிங்கப்பூரில் இருக்கும் குழந்தைகளுக்கும் அது தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மாஸ்டர்ஸ் அகாதெமி ஆஃப் ஸ்பீச் அண்ட் ட்ரெயினிங் எனும் மாஸ்ட் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

இந்த நிறுவனத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலத்தில் பேசுவது, எழுத்துப் பயிற்சி, நடிப்புத் திறன் மற்றும் ஆளுமைத் திறன் ஆகிய பயிற்சிகளைத் தந்துகொண்டிருக்கிறேன் இது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

உங்களின் தெலுங்கு மொழிப் புலமைக்கு உங்கள் மகள்தான் காரணம் என்று கேள்விப்பட்டோம். அதைப்பற்றி சொல்லுங்களேன்?

உண்மைதான் அது (சிரிக்கிறார்). தாய்மொழியில் புலமை இல்லாத ஒரு நபரால் பிரமாதமாக எதையும் செய்துவிட முடியாது. ஏனெனில், தாய்மொழி என்பது அவர்களுடைய அடையாளம்.

அந்த அடையாளமே இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதையும் மீறி செய்தால் அதில் பயனும் இருக்காது. அதைத்தான் சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்கு எனது நிறுவனத்தின் மூலம் கற்றுக்கொடுத்து வருகிறேன்.

சிங்கப்பூரில் தமிழில் நான் பல்வேறு துறைகளில் கோலோச்சினாலும், என் தாய்மொழியான தெலுங்கினைப் பேசுவேனே தவிர, எழுதப்படிக்கத் தெரியாது. ஒருமுறை எனது மகள் என்னிடம் வந்து, என்னை எல்லாம் தமிழ் படி, அதைப்படி, இதைப்படின்னு சொல்றியே? உன்னோட தாய்மொழியான தெலுங்கில் உனக்கு எழுதப்படிக்கத் தெரியுமா? என்று கேட்டாள்.

தமிழ்நாட்டில் நான் வளர்ந்தபோது அங்கே தெலுங்கில் எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கல. நம்மை இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாங்களே என்ற எண்ணத்தில் நானும், பன்மொழி வித்தகரான மெய்யப்பனுடன் சேர்ந்து தெலுங்கு மொழியை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன்.

அந்த மொழித்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பிறகு என் மகளிடம் வந்து, செல்லமாக ஒரு குத்துவிட்டு, இதோ பார் தெலுங்கில் எழுதப் படிக்கும் திறன் பெற்றவர் என்ற திறமையைப் பெற்றுக்கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னேன். என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். இந்த மொழியை நான் கற்றுக்கொண்டதற்குக் குருவாக இருந்தவள் என் மகள்தான்.

நீதிமன்றங்களில் தெலுங்கு மொழிபெயர்ப்பு, கவிதை படைப்பு என்று நான் செய்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகள் கேட்ட கேள்விதான் (சிரிக்கிறார்).

தன்முனைப்பு பேச்சு அனுபவங்கள் குறித்து சொல்லுங்கள்?

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பேச அழைப்பது பெரிதொன்றும் இல்லை. அது வழக்கமாக நடப்பதுதான். ஆனால் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்குப் பேச வாருங்கள் என்று அழைப்பது வழக்கமில்லாத ஒன்று.

அப்படி என்னைச் சிங்கப்பூரில் இருந்து இங்கே தன்முனைப்பு பேச்சிற்கு என்னை அழைத்தார்கள். இந்தியாவில் பல கல்லூரிகளில் பேசி இருக்கிறேன். பயிற்சிப்பட்டறைகள் நடத்தி இருக்கிறேன்.

ஆன்மீகச் சொற்பொழிவு, பட்டிமன்றங்கள் எனப் பல துறைகளிலும் இங்கே என்னைப் பேச அழைக்கும்போதெல்லாம் எனக்கு அது மகிழ்வைத் தரும். தமிழகதில் கத்துக்குட்டியாக பேசியவள், சிங்கப்பூருக்குச் சென்று பேசினேன்.

நன்கு திறமையை வளர்த்துக்கொண்டு மீண்டும் தமிழ்நாட்டில் பேசுகிறேன். அது ஒரு வட்டம் அடித்தது போல் தோன்றியது. வாழ்க்கை ஒரு சக்கரம்டா என்பதுபோல, ஒரு சுற்றுச் சுற்றிவந்து இருக்கிறோம் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அதற்குக் காரணம் நான் பல ஊர்களில், பல மேடைகளில் ஏறி எனது திறமைகளை வளர்த்துக் கொண்டதுதான்.

சிறுவர்களுக்கான பட்டிமன்ற பயிற்சி குறித்து சொல்லுங்கள்?

நான் கற்றுக்கொண்டதைப் பெரியவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதை விட, குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால் அவர்கள் கற்பூரம் போல பற்றிக்கொள்வார்கள். எனது பட்டிமன்ற ஆசான் கலைக்கோவன் இதைத்தான் அப்போது செய்தார்.

அதே வழியை நானும் பின்பற்றி சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்குப் பட்டிமன்றத்தில் பேச பயிற்சியளித்து அவர்களை மேடையேற்றிப் பேச வைத்திருக்கிறேன். சிங்கப்பூரில் ஆங்கிலம்தான் தாய்மொழி போன்று இருக்கும்.

பிறந்த குழந்தை ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அளவிற்கு இங்கே அது பேச்சுமொழியாக இருக்கும். தமிழராக இருந்தாலும் ஆங்கிலம்தான் இங்கே சரளமாக வரும். அவர்களுக்குத் தமிழில் பட்டிமன்ற பேச்சு சொல்லிக்கொடுப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. பெற்றோர்கள் ஆர்வத்தோடு அவர்களது குழந்தைகளைப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தக் குழந்தைகள் எங்களிடம் பயிற்சிபெற்று மேடையேறி பட்டிமன்றம் பேசியதைப் பார்த்து, அவர்களுடைய பெற்றோர்கள் அத்தனைப் பேரும் நெகிழ்ந்து போனார்கள். அதை என்னிடம் சொன்னபோது மகிழ்ந்து போனேன். அந்தக் குழந்தைகளைப் பாராட்டாத ஆளே கிடையாது.

இதுவரை எண்ணற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பன்னாட்டுப் பட்டிமன்றங்கள் மற்றும் International Webinars நடத்தி இருக்கிறேன். இதுதான் எனது சமீபத்திய வெற்றி என்று சொல்வேன். இதற்குத் தளம் அமைத்துக்கொடுத்த ரஜீத் சாருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மாணவர்கள் நிகழ்ச்சிகளுக்கு முதன்முதலாகக் களம் அமைத்துக் கொடுத்த புலவர் விஜயசுதா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய இளைஞர்களுக்கு தங்களது ஆலோசனை என்ன?

எந்தத் திறமையாக இருந்தாலும் சரி, அதை அவர்கள்தான் வெளிக்கொண்டுவர வேண்டும். எந்த ஆள்கிட்டயும் திறமை இல்லன்னு சொல்லவே முடியாது. எல்லாமே திறமைதான். சிங்கப்பூரில் ஒரு அம்மா, ரங்கோலியில் கூட உலகச் சாதனை வைத்திருக்கிறார். எதுல வேணா, யார் வேணா சிறப்பாக இருக்க முடியும். சாதனைப் படைக்க முடியும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.

உங்களுடைய வழிதான் பிறருடைய வழியா இருக்கணும்னு நினைக்காதீங்க. உங்களுக்குப் பிடித்தத் துறையில் புதியதாக என்ன செய்யலாம், அதைச் சமூகத்துக்குப் பயனுள்ளதாக எப்படி செய்யலாம்னு யோசிங்க, செயல்படுங்க, உங்கள் திறமை படிப்படியாக வளர்ந்து, வெற்றிப்படிகளில் ஏற்றி ஒரு நாள் வெற்றிச் சிகரத்தில் உங்களை அமர வைக்கும்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *