கல்வி உயர : (பாகம்-2) எது குழந்தைகளுக்குப் பிடித்தமான வகுப்பறை?

Share Button

அரவிந்த் கண் மருத்துவமனைச் சார்பாக, அங்கு பணிபுரியும் மருத்துவர் உட்பட, அனைத்துப் பணியாளர்களின் குழந்தைகளுக்கும் விடுமுறையில் கோடை முகாம் நடத்தப்படுகிறது. கொரோனாவுக்கு பின் நடத்தப்படும் இந்த முகாமிற்கு கதைக் கூற அழைத்திருந்தனர்.

குழந்தைகளிடம் விளையடலாம் என்று கூறினேன். ” ஐ! ஜாலி !ஜாலி! ” என மகிழச்சியில் துள்ளினர்.

“கிரவுண்ட் பார்த்து ரொம்ப நாளச்சு இல்லை…” என்றேன்.

“ஆமாம் , சார். எப்ப பாரு படி! படி! படி!” என ஒரு குரல்.

“விளையாட்டு பாடவேளையும் படிப்புக்குதான்…” என மற்றொரு குரல்.

“அங்கிள்! கிரவுண்டுக்கு கூட்டி போவாங்க. பார்த்துட்டீங்களா! வாங்க கிளாஸ் போவோம்னு கூட்டிட்டு வந்துடுவாங்க” எனக் குரல்கள் வரிசையாக ஒலிக்கத் தொடங்கின.

“அங்கிள்! பேசவே விடமாட்டாங்க .”

“எங்க போனாலும் வாயில் விரலை வைத்துப் பேசாமல் செல்லவேண்டும்.”

” கிளாசில் பேசக் கூடாது. வாஸ்ரூம் போகும்போதும் பேசக்கூடாது.”

” டவுட் கேட்பீங்களா?” எனக் கேட்டேன்.

” சும்மா தொணத் தொணன்னு பேசிகிட்டு இருக்குதே! போய் தூங்கு்ன்னு சொல்லிடுவாங்க. “

இவைகள் குழந்தைகளிடம் இருந்து கிடைக்கப்பட்ட குரல் பதிவுகள்.

மைதானத்தில் விளையாடத்தானே குழந்தை விரும்பும். விளையாடுவதால் கற்றல் பாதிக்கப்படுமா?

பொதுவாக கற்றல் என்பது பாடநூல், பாடக்கருத்து, வகுப்பறை என்ற பிணைப்பில் மதிப்பெண்ணை முன்னிலைப்படுத்தியே நடைபெறுவதால் குழந்தைகள் சக குழந்தையிடம் நண்பர்களிடம் பேசுவதுகூட தடுக்கப்படுகிறது.

எது உண்மையான கற்றல்?

வகுப்பறை மட்டுமல்லாது, வகுப்பறை தவிர்த்த பிற இடங்களிலும் ஆசிரியர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யும்போதுதான் சமூக உறவு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஏற்பட்ட பிணைப்பில் இருந்தே கற்றல் ஆரம்பமாகிறது. உரையாடல்களும், விவாதங்களுமே கற்றலைச் சாத்தியமாக்குகின்றன.

சமூக உறவு / சமூகத்துடன் இணைந்தச் செயல்கள் கற்றலின் தொடக்கப் புள்ளிகள்.

எங்கெல்லாம் சாத்தியம்?

பள்ளிக்கூட மைதானத்தில் குழந்தைகள் விளையாடும்போது, சமூக உறவு சாத்தியம். பாட இடைவேளையின் போதும், வகுப்பறையில் குழந்தைகள் நண்பர்களுடன் பேசும்போதும் சமூக உறவு சாத்தியம்.

காலை நேர பிரார்த்தனை, பள்ளி விழாக்கள் என பலரும் ஒன்றாக கூடும்போது சமூக உறவு சாத்தியம். பள்ளி விட்டு நண்பர்களுடன் வேறு இடங்களுக்குச் செல்லும் போதும், கல்விச் சுற்றுலா செல்லும் போதும் சமூக உறவு சாத்தியம்.

ஆக, கருத்துப் பரிமாற்றங்கள் வழியே கற்பித்தலையும், கற்றுணர்தலையும் வலிமையாக்க முடியும்.

எப்படி முடியும்?

வகுப்பறையை குழந்தைகள் விரும்புகின்ற, மகிழ்ச்சியான இடமாக வைத்திருப்பதுடன், குழந்தைகள் பாதுகாப்பை உணருகின்ற இடமாகவும் மாற்றி அமைப்பதன் வழியே கற்றலை வலுவுள்ளதாக மாற்ற முடியும்.

பள்ளி / வகுப்பறைச் சூழல் மற்றும் குழந்தைகள் உளம் ஆகியவற்றைச் சார்ந்து கற்றுணர்தல் வலு பெறுகிறது. எனவே, அமைய உள்ள தமிழக கல்விக் கொள்கைக் குழு கற்றுணர்வதற்கு உதவும் இடச் சூழ்நிலையின் முக்கியத்துத்தில் போதிய கவனம் கொள்ளுதல் வேண்டும்.

எனது வகுப்பறைச் சுவர்களில் ஒட்டபட்டிருந்தப் படங்கள் பழையனவாக இருந்தன.

” சார்! ஐந்தாம் வகுப்பு ‘ஆ ‘ கிளாஸ் டீச்சர் சூப்பரா, அழகு அழகா படம் ஒட்டிருக்காங்க. அவுங்க கிளாஸ் பார்க்கவே சூப்பரா இருக்கு! நாமளும் கலர்கலரா ஒட்டி வகுப்பறையை அழகுபடுத்துவோம்.”

” சார்! ஐந்தாம் வகுப்பு டீச்சரைப் பார்த்து மூன்றாம் வகுப்பு டீச்சரும் கலர் கலரா ஓட்டிருக்காங்க,
பேசாம மூன்றாம் வகுப்பு போயிடலாம்ன்னு தோணுது.”

ஆக! குழந்தைகளுக்கு வகுப்பறை வண்ணமானதாக இருக்க வேண்டும்.

அடுத்த நாளே ஆயுத்தமாகி, வகுப்பறைச் சுவர்களை மூன்றாம் பருவத்திற்குரிய வண்ணப்படங்கள் ஒட்டப்பட்ட சாரடுகள் , டிஎல்எம் கொண்டு புதுமையாக்கினேன். இல்லை, வண்ணமயமாக்கினேன்.

படங்களை ஒட்டும்போது குழந்தைகள் அறிவியல் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் சமூகவியல், தமிழ் வலது பக்கம் என ஒன்றுகூடி முடிவெடுத்து வகுப்பறையை வண்ணமயமாக்க உதவினர். அவர்களிடத்தில் கூச்சல் இல்லை. அமைதியாக வகுப்பறையை வண்ணமாக்கினோம்.

” சூப்பர் சார்! இப்ப நம்ம கிளாஸ் சூப்பரா ஆகிடுச்சு.” எனப் பாராட்டினாள் எஸ்தர்.

” சுவரை ஒட்டி பா வடிவில் டெஸ்க், பெஞ்ச் போடுங்க. அப்பதான் நாலு பக்கமும் ஓடி விளையாட வசதியா இருக்கும்.” என்றான் தர்ஷன்.

நீண்ட உலோக இருக்கைகள் இடவசதி இல்லை எனில், வரிசையில் மட்டுமே போடமுடியும். அதனால், குழந்தை மையக்கல்வி முறையின் சாத்தியத்தை குறைக்கும். கரும்பலகையை மட்டுமே பிரதானமாக வைத்துக் கற்பிக்கப்படும் முறையை வலுப்படுத்த உதவும். ஆகவே, ‘ப ‘ வடிவில் உலோக இருக்கைகள் மாற்றப்பட்டன.

“அந்த ரவுண்ட் டேபிள் இந்தக் கார்னரில் போடுங்க. இங்கப் புத்தகப் பூங்கொத்து நூல்களை அடுக்கி வைங்க. மீதி நூல்களைத் திறந்த அலமாரியில் அடுக்கி வையுங்கள். இந்த டேபிளில் நாங்க செய்ததை காட்சிபடுத்தி வைங்க” என மகிழ்தினி படபடத்தாள்.

இப்படி ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ணம் வகுப்பறையை மாற்றி அமைக்கிறேன்.

குழந்தைகளுக்குப் பிடித்தமான வகுப்பறை எது?

வகுப்பறை வண்ணமானதாக இருக்க வேண்டும். வகுப்பறையில் மாணவர்களும், நானும் ஒருவருக்கு ஒருவர் நட்பு பாராட்டியது போல் , வகுப்பறை நட்பு பாராட்ட கூடியதாக இருக்க வேண்டும். அமைதி நிறைந்ததாக இருப்பதுடன், குழந்தைகள் ஓடியாடி விளையாட ஏற்றபடி வகுப்பறை வசதியானதாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமா?

” சார்! ஃபேன் இறக்கை ஒவ்வொன்றுக்கும் ஒரு கலர் அடிச்சா நல்லா இருக்குமில்லே.” என்றான் தனுஷ்.

“சார்! பாத்ரூம் சுவரில் கலர் கலரா பூச் செடி வரைஞ்சு போட்டீங்கண்ணா, சுவத்தில் மூச்சா போகமாட்டானுங்க.” என்றான் குமரேசன்.

” சார், தோட்டத்தில் கலர்கலரா பூச்செடி வளர்க்கணும்.” என்றாள் ஒயிலா.

” வகுப்பறைக்கு வெளியே சுவரில் மிருகங்கள் படம் வரையலாமே” என ஆலோசனை வழங்கினாள் பவதர்ஷினி.

இப்படி குழந்தைகளுக்கு வகுப்பறைப் பிடிச்சதா மாற்றம் செய்து இருந்தாலும், தேவையான இயற்கை ஒளி கிடைக்கும் வண்ணம் ஜன்னல்களை அமைத்து , நன்கு வெளிச்சமுள்ளதாகவும், காற்றோட்டம் உள்ளதாகவும் வகுப்பறைகளை அமைக்க வேண்டும். இல்லையெனில் கற்றல் தடைபடும்.

கட்டிடங்கள் பழுப்பு அற்று , வெள்ளையடிக்கப்பட்டு, குழந்தைகள் ரசிக்குபடியான படங்கள் சுவர்களில் வரையபட்டு நல்ல பள்ளிச்சூழல் அமைய வேண்டும்.

குழந்தைகள் எழுதிப் பழக கீழ்மட்டக் கரும்பலகை அமைத்துத் தரவேண்டும். மூலிகை தோட்டம், மழைநீர் சேகரிப்பு கட்டாயம் பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிகளுக்கும் மைதானம் அவசியம். மைதானங்கள் விளையாடுவதுடன், வெளிப்புற கல்விச் செயல்பாடுகளுக்கு உதவி செய்பவை. கலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள வெளிபுறச் செயல்பாடுகளுக்கு மைதானம் இல்லாத பள்ளிகள் பெரும் சவாலை சந்திக்கவேச் செய்கின்றன . இதனைச் சரிசெய்யும் வகையில் கலைத்திட்டத்தை வடிவமைத்தல் அவசியம் .

மதிய உணவு இடைவேளை, மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். ரசினாவும், எஸ்தரும், எனது சேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் தரையில் அமர்ந்து சில மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் இதனைப் பார்த்தும் , “என்ன மரியாதை கெட்டதனம். சார் சேரில் உட்காரலாமா? உங்க சார் தரையில் உட்கார்ந்து இருக்கார்.” என அதட்டிவிட்டு, என்னை நோக்கி, “சார் , இந்தப் பழக்கம் வச்சுக்காதீங்க. இதென்ன மரியாதை கெட்ட தனம். அழகா உலோகத்தாலான பெஞ்ச் இருக்கு உட்கார்ந்து பேசச் சொல்லுங்க.” என்றார்.

” இதிலென்ன மரியாதைக் கெட போவுது. ” என ரசினா முறைத்தாள்.

” ரசினா! கோபம் ஏன்?” எனக் கேட்டேன்.

” மரியாதைச் சேரில் இல்லை. மனசில் இருக்கணும், சார். அவுங்க. எங்களை திட்டலை. உங்களைதான் திட்டுறாங்க. ” என சிரித்தபடி ” வாடி! கிரவுண்டில் உட்கார்ந்து பேசுவோம்” என மரத்தடி நோக்கிச் சென்றார்கள்.

குழந்தைகள் அமர்வதற்கு வசதியான, பிடித்தமான இருக்கைகள் வேண்டும். அதேநேரத்தில், புத்தகங்களை , உடைமைகளை வைக்க போதுமான இடம் வசதியும் தேவை. அதிகமான மாணவர்கள் வகுப்பறையில் இருப்பின் , இட பற்றாக்குறை வகுப்பறையில் நிகழும் . அது கற்றலுக்கு தடையாக இருக்கும்.

கலைத்திட்டத்தை அழுல்படுத்துவதில், ஆசிரியர் விருப்பமானக் கற்றல் முறையைத் தேர்ந்தெடுப்பதில் வகுப்பறையில் உள்ள மாணவர் எண்ணிக்கையும் ஒரு முக்கியமான காரணி ஆகும். 1966 ல் வெளியிடப்பட்ட கோத்தாரி கமிஷன் அறிக்கையில், அதிக மாணவர்களை உடைய வகுப்புகள் கல்வியின் தரத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது.

ஆகவே, அமைய உள்ள கல்விக் கொள்கை தற்போது நடைமுறையில் உள்ள 1:40 ஆசிரியர் மாணவர் விகிதம் (அரசாணை எண் 525) கல்வியின் தரத்தைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொண்டு , 1:25 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தை நடைமுறைப்படுத்த ஆவணம் செய்ய வேண்டும்.

கூட்டமான வகுப்பறையில் மிகச் சிறந்த கற்பித்தல் கூட முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும்.

வகுப்பறையில் குழந்தைகளின் குரல் ஒலிக்க அனுமதிப்போம்.. தமிழக கல்விக் கொள்கை சிறப்பாக அமைந்து தரமான கல்வி சாத்தியமாக, கல்வி உயர ….தொடர்ந்து பேசுவோம்.

க.சரவணன், எழுத்தாளர் – மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

2 responses to “கல்வி உயர : (பாகம்-2) எது குழந்தைகளுக்குப் பிடித்தமான வகுப்பறை?”

  1. S.vennila says:

    Well said
    Well done ? sir

  2. Parameswari Murugesan says:

    Well said…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *