முதல் மாற்றம் நம்முடையதாக இருக்க வேண்டும்! – தனது பிறந்த நாளில் பள்ளியை சீரமைத்து அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்!
புதுக்கோட்டை :-
பிறந்தநாள் பரிசாக வகுப்பறைக் கட்டமைப்பை மேம்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்!
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சதிஷ்குமார். தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது வகுப்பறைக்குப் புதிதாக வர்ணம்தீட்டி, வகுப்பறையின் முகப்பில் கல்வி, அறிவியல், விளையாட்டு, தேச விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் என ஆளுமைகளின் புகைப்படங்களால் அழகுபடுத்தி இருக்கின்றார்.
மாணவர்களுக்கு இருக்கை வசதி, White board , SMART TV என தனது சொந்தப் பணம் 60 ஆயிரம் ரூபாயைச் செலவழித்து வகுப்பறைக் கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளார்.
இந்தப் பள்ளிக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பாக பணிமாறுதலில் வந்த இவர் தனது சொந்தப் பணத்தில் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, சுற்றுச்சுவரை புனரமைத்ததுடன், ஜப்பானிலிருந்து நண்பர்கள் உதவியுடன் 75 ஆயிரம் ரூபாய் நன்கொடையாகப் பெற்று பள்ளியின் கழிவறையைப் புனரமைத்துக் கொடுத்து, குடிநீர் இணைப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
முதல் மாற்றம் நம்முடையதாக இருக்க வேண்டும் :
அரசு தொடங்குவதற்கு முன்பே இவர் பணிபுரியும் பள்ளியில் LKG, UKG வகுப்புகள் தொடங்கி ஆசிரியர்களை நியமித்து, அதற்குரிய ஊதியத்தை வெளிநாடுவாழ் நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொடுத்ததுடன், திருச்சி, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 6 பள்ளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்திக் கொடுத்ததன் மூலம் சுமார் 6 லட்ச ரூபாயை நன்கொடையாகப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply