கல்வி உயர : (பாகம்-3) குழந்தையை மையப்படுத்திய கல்வி!

Share Button

“சார்! உங்க கிளாஸ் குழந்தைகள் எப்பவும் வெடிப்பா இருக்காங்க. நான்காம் வகுப்பில் வாய் திறக்காத பையனும் உங்க வகுப்புக்கு வந்திட்டா நல்லா வெடுக்குன்னு பளீர்ன்னு பேசுறான்.

ஆடுறவன் இருக்கும் இடம் தெரியாமல் அமைதி ஆகிடுறான். இந்த வித்தையை எங்களுக்கும் கத்துக் கொடுங்க.” என ஒவ்வொரு வருடமும் சக ஆசிரியர்கள் கேட்பதுண்டு.

“குழந்தையை மையப்படுத்திய கல்வி முறையை மேற்கொள்வதே காரணம் ” என்பேன்.

“நாங்களும் குழந்தைகளை வட்டமாக அமரவச்சுதான், குழந்தைகளுடன் குழந்தையா ஒண்ணா அமர்ந்து கத்துதர்றோம். இருந்தாலும் எங்க உசிரு போகுது. ஆனா, நீங்க ரொம்ப cool ஆக, சந்தோசமா கற்றுக் கொடுக்குறீங்க.” என இன்னும் சில ஆசிரியர்கள் கொஞ்சம் பொறாமையுடன் கூறுவதுண்டு.

குழந்தை நேயத்துடன் செயல்படுவது என்பது குழந்தைகளுடன் அமர்வதில் மட்டும் அமைவதில்லை.

நான் கற்பிக்கும்போது பாடபுத்தகத்தில் உள்ள கருத்துக்களை மட்டுமே கவனத்தில் கொள்வதில்லை. அது கற்பித்தல் துணைக்கருவி மட்டுமே. நான் அந்த பாடத்திற்கான திறனை அடிப்படையாக கொண்டு கற்பித்தலை திட்டமிடுவேன்.

உதாரணமாக ஐந்தாம் வகுப்பு வடிவியல் முப்பரிமாணம் பாடத்திற்கு ஆர்வமூட்ட , அனைத்து குழந்தைகளுக்கும் காகிதத்தைக் கொடுத்து கப்பல் செய்யலாம் என என்னுடைய கையில் உள்ள காகிதத்தை மடிக்க ஆரம்பிப்பேன்.

எனக்கு முன்பே கொடுக்கப்பட்ட காகிதத்தை கொண்டு பலவிதமான கப்பல்களை உருவாக்கி இருப்பார்கள். பின்பு, காகிதத்தை பிரிக்கச் செய்து , மடிப்பில் உள்ள வடிவங்களை கணக்கு நோட்டில் எழுதக் கூறுவேன். அவர்கள் சதுரம், செவ்வகம், முக்கோணம் என எழுதுவார்கள்.

சில மாணவர்கள் உருவங்களின் பெயர்களைக் கூறுவார்கள். ஆனால், எழுதமாட்டார்கள். அவர்களுக்கு எழுத்துகள் வாசிக்க, எழுத தெரியவில்லை என்பதை அடையாளம் கண்டு கொள்வேன்.

நன்றாக வாசிக்க, எழுத தெரிந்த மாணவர்களில் ஒவ்வொருவராக எழச் செய்து கரும்பலகையில் உருவங்களை வரைந்து, அதன் பெயரை எழுதக் கூறுவேன். நான், நீ என முந்துவார்கள் . அவர்களை முறைபடுத்தி வரையவும் எழுதவும் அனுமதிப்பேன்.

பின்பு, அவர்கள் அறிமுகப்படுத்தாத வட்டம், அரை வட்டம் ஆகியவற்றை வரைந்து நினைவூட்டுவேன். இப்போது, ஐந்து / ஆறு மாணவர்கள் கொண்ட குழுவை வகுப்பறையின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து குழுவாக அமரச் செய்வேன்.

கரும்பலகையில் வரைந்த உருவங்களை இருபரிமாண உருவங்கள் என்கிறோம், ஏன்?
என்பதை குழுவில் விவாதித்து கூறச் செய்வேன். நீளமும், அகலமும் கொண்டதால் இவற்றை இருபரிமாண உருவங்கள் என்கிறோம் என எதாவது ஒரு குழு கூறிவிடும்.

அதன்பின் , ஒவ்வொரு குழுவிற்கும் பசை, காட்போர்ட் (5/6), பென்சில் ,கத்திரிக்கோல் வழங்குவேன். தீப்பெட்டியின் முப்பரிமாண வலை அமைப்பை கரும்பலகையில் வரைந்து போடுவேன். அதனைப் பார்த்து, கொடுக்கப்பட கெட்டித்தாளில் வலையமைப்பை பெரியதாக வரைவதெப்படி என்பதை என்னிடம் உள்ள கெட்டித்தாளில் வரைந்து காட்டுவேன்.

அதற்குபிறகு, அனைவரையும் வலையமைப்பை வரைந்து காட்டச் சொல்வேன். சிலர் சிறியதாக வரைவார்கள், சிலர் மிகப்பெரியதாக வரைவார்கள். அவற்றை சரியானபடி வரைய சகமாணவர் உதவியை அணுக கூறுவேன். வகுப்பறை முழுமையான உயிர் ஓட்டத்துடன் இருக்கும்.

அனைவரும் வரைந்த பிறகு, வலையமைப்பை எப்படி மடித்து ஓட்டி, தீப்பெட்டி செய்வது எனக் கற்றுக் கொடுப்பேன். சுறுசுறுப்பான , ஆர்வமான பங்கேற்பில் அனைவரின் கைகளிலும் தீப்பெட்டி இருக்கும்.

நீளம், அகலம் , உயரம் என மூன்று பரிமாணத்துடன் தீப்பெட்டி இருப்பதால் முப்பரிமாண வடிவம் என்பேன்.

குழுவில் சில குழந்தைகள் விரைவில் முடித்து காண்பிப்பார்கள். அவர்களிடம் ஒர் இருபரிமாண உருவம் மற்றும் ஒரு முப்பரிமாண வடிவம் வரைந்து கலர் அடித்துவர கூறுவேன். அதனால், பிறரை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

முடிவில் ஒவ்வொரு குழுவினரிடமும் வீட்டில்/வகுப்பறையில்/ பூங்காவில் / தெருவில்/ பலசரக்கடையில்/ என அவர்களுக்கு அறிமுகமாகி உள்ள இடங்களை குறிபிட்டு இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அவ்விடங்களில் குழந்தைகள் காணும் முப்பரிமாணஉருவங்களை பாடக்குறிப்பேட்டில் எழுதக் கூறுவேன்.

அதிகமான பொருட்கள் எழுதிய குழுவிற்கு பரிசு உண்டு என உற்சாகப்படுத்துவேன். பாடவேளை முடிவில் நாளை வரும்போது சதுர/ செவ்வக அட்டைபெட்டி செய்து வர வேண்டும் எனக் கூறி , அதற்கான வலையமைப்பை கரும்பலகையில் வரைந்து போடுவேன்.

மாணவர்கள் வகுப்பில் செய்த தீப்பெட்டியை காட்சிபடுத்தி வைப்பேன்.

என்னுடைய வகுப்பில் குழந்தைகள் உற்சாகமாக இருப்பதற்கான காரணம் புரிந்து இருக்கும். ஏனெனில், எனது வகுப்பறை குழந்தைகளை மையப்படுத்தும் கல்வி முறையை நடைமுறைபடுத்தப்படுகிறது.

ஆம்! குழந்தைகளை மையப்படுத்திய கல்வி என்பது குழந்தைகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும். ஆசிரியரின் குரலை மையப்படுத்தி கற்பித்தல் இருக்க கூடாது.

கற்பித்தல் முறையானது குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஏற்ப , குழந்தைகளின் மன இயல்போடு , அவர்களின் பங்கேற்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். அதற்கான திட்டமிடல் வேண்டும்.

முக்கியமாக கற்பித்தல் திட்டம், உடல்ரீதியாக பொருத்தக்கூடியதாகவும், சமூகத்தின் தேவைக்கேற்ப அமைய வேண்டும். எனது வகுப்பறையில் குழந்தைகள் ஒவ்வொரு செயல்களிலும் மதிக்கப்படுகிறார்கள். ஆகவே, வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

குழந்தைகள் தாங்கள் செய்த வடிவத்தைக் கண்டு திருப்திபட்டு கொள்கிறார்கள். அதனால், வகுப்பறையில். எளிதாக, நல்ல புரிதலுடன், மகிழ்வாக கற்றுக் கொள்கின்றனர்.

பொதுவாக வகுப்பறையில் மகிழ்ச்சி , திருப்திக்கு பதிலாக பயம், கட்டுப்பாடு மற்றும் அழுத்தம் கொண்ட சூழலே நிலவுகிறது. இவை கற்றலுக்கு இடையூறானவை. எனவே, அங்கு கற்றல் சரியாக நிகழ்வதில்லை.

ஆசிரியர்கள் மாணவன் வினா எழுப்ப அனுமதிக்க வேண்டும். அனைவருக்கு கற்றலில் சமவாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால், உண்மை நிலை ?

சிறந்த/ நல்ல/ அருமையான மாணவன் என்பவன் ஆசிரியருக்கு கீழ்படிந்தவனாகவும், ஆசிரியரின் வார்த்தையே அதிகாரபூர்வமான அறிவு என ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்க வேண்டும். அவனே நன்னடத்தை உள்ளவன். இந்த கருத்திற்கான அழுத்தம் தான் கல்வி அமைச்சரின் சமீபத்திய பேச்சு.

குழந்தைகளின் குரலும், அனுபவமும் வகுப்பறையில் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு , குழந்தையை மையப்படுத்திய கல்வி அவசியம்.

அமைய இருக்கும் தமிழக கல்விக் கொள்கை குழந்தைகளின் பேச்சுக்கு இடமளிக்கும் வகையிலும், அவர்களின் அறிவையும், ஆற்றலையும் வளர்க்கும் வகையிலும், செயல்பாடுகள் உள்ளடக்கியதாகவும், ஆய்வை தொடரும் வகையிலும் பள்ளி அறிவோடு தங்கள் அனுபவத்தை இணைத்துப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும் பாடநூல் அறிவை மறு உற்பத்தி செய்யும் வகையிலும் கலைத்திட்டத்தை அமைக்க வேண்டும்.

ஆகவே, குழந்தைகளை மையப்படுத்திய கல்வி குறித்து விரிவான கவனத்தை அமைய உள்ள தமிழக கல்விக் கொள்கை கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனால், மதிப்பீடு செய்தல் மற்றும் தேர்வு முறைகளில் சரியான மாற்றத்தை கொண்டுவர முடியும்.

தொடர்ந்து கல்வி குறித்து பேசுவோம். குழந்தை நேயபள்ளிகள் கூட்டமைப்பின் ஆசிரிய உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

2 responses to “கல்வி உயர : (பாகம்-3) குழந்தையை மையப்படுத்திய கல்வி!”

  1. Vairavakumar says:

    மிக அருமை ஸார்

  2. Sujatha says:

    Superb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *