ஞாபகம் வருதே ஞாபகம் வருதே : ஒரு வாசகியின் கடிதம்!

Share Button

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே : ஒரு வாசகியின் கடிதம் :

எங்கள் ஊர் ஜெகதாப்பட்டினம். ஊர் பெயரை சொல்லும் போதே உள்ளத்தில் இனம்புரியாத ஆனந்தம்…. என்னுடைய எட்டு வயதை சற்று எட்டி பார்க்க வைத்த தருணமிது. சிறகடித்த என் சிறுவயதை நினைத்து சிறு புன்னகையுடன் பேனாவை நகர்த்தி செல்கிறேன்….

அமைதியான கடல் ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம் கண்டு வியந்த விசைப்படகுகள் கரையோரம் ஒதுங்கிய கடல் பாசிகள் ரோட்டிற்கு சற்றே மேற்புறத்தில் அமைந்த வயல்வெளிகள் வரப்பு மீது நடந்துசென்று குளித்த கண்மாய் குவியல்கள்.

பசுமையை முழுவதுமாக போர்த்தியவாறு காற்றின் இசைக்கேற்ப தலையசைக்கும் நாற்றுகள் பால் முற்றிய நெற்கதிர்களை ஒருநாளும் திருடி வந்து பதம் பார்க்க மறந்ததே இல்லை.

வானம் பார்த்த பூமி என்பதால் மழை நாட்களில் மட்டுமே செழிப்பான விவசாயம் அங்குள்ள யாவருக்கும் அது சொந்த ஊர் கிடையாது. ஆனால் அனைவருமே சொந்தங்கள்தான். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து இடம்பெயர்ந்த மக்கள் இளைப்பாறிய ஊர்.

அது அறியாதவர்களைக் கூட, அன்போடு உபசரிக்கும் முறையை அங்குதான் கண்டு கொண்டேன். அங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் பத்து நாட்கள் நடக்கும் காப்புக்கட்டு திருவிழாவில் வரிசையில் நின்று சுண்டல் வாங்கி நினைவுகளை வரிகளால் சொல்லமுடியாது ஆசையாசையாய் அண்ணன்களின் சட்டைகளை அணிந்த போது இருந்த ஆனந்தம் இன்று 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பட்டுச்சேலைகளிலும் கிடைக்கவில்லை. தோழிகளுடன் பள்ளிக்குச் சென்று வந்த அந்த பழைய நினைவுகளை கூற பத்துப் பக்கங்கள் கூட, பத்தாமல் போகும்.

சொந்த ஊரில் மூன்றாம் வகுப்பு நிறைவு செய்துவிட்டு நான்காம் வகுப்பு தொடர நல்வாய்ப்பாக அமைந்தது அங்குள்ள இஸ்லாம் பள்ளி.

சேட்டைகள் நிறைந்தவளாக இருந்தாலும் புதிய பள்ளி என்பதால் சிறு பயம் நிறைந்த அந்த மனதோடு வகுப்பிற்கு சென்றேன். அங்கு யாரையும் முன்பின் தெரியாது இருந்தாலும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி அனைவரிடமும் பழகிவிட்டேன். அங்கு எனக்கு கிடைத்த ஒரு நல்ல தோழி கவிதா.

இன்று அவள் இல்லை. ஆனால் அவளின் நினைவுகள் இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை. புத்தம்புது சீருடையில் புத்தகத்தை எனக்கு அளித்து சிறு புன்னகையை பரிசளித்தாள். அடிக்கடி பேசிக் கொண்டே இருந்ததால் இருக்கையை மாற்றி அமர வைத்த ஆசிரியரால் பிரிக்க முடிந்தது எங்களின் இருக்கையை மட்டுமே. எங்கு சென்றாலும் இணைந்தே இருக்கும் எங்களின் இரு கைகளை அல்ல.

எனக்கு முன் அமர்ந்திருக்கும் என் கவிதாவின் தலையில் உள்ள முல்லை மலரின் நறுமணத்தை காற்று திருடி வந்து என்னிடம் சேர்க்கும். அன்றிலிருந்து இன்றுவரை அதிகம் விரும்பிச் சூடும் மலர்களில் முல்லைக்குத்தான் முதலிடம்…

கச்சத்தீவு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட ஒரு சிறிய தீவு கச்சத் தீவு அன்றைய ஆட்சிப் பொறுப்பில் இருந்த மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது அன்றிலிருந்து இன்றுவரை கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்து கொண்டே இருந்தது விசைப் படகுகளை பறிமுதல் செய்வதையும் தாண்டி மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு குடும்பங்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர் கூட்டம் நிறைந்து நெரிசலாக காணப்பட்ட ஊர் தற்போது விரிசலாகிப்போனது சீருடையில் பார்த்த பள்ளி தோழிகள் எங்கெங்கோ திசைக்கொரு பக்கமாய் இருக்கின்றனர்.

மத்திய அரசு கட்சத்தீவை மீட்டெடுக்குமா என ஏக்கம் நிறைந்த எட்டு வயதுக் குழந்தையாய் இன்றும் நான்…

கவிஞர் பிரவீணா

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *