ஒருவருக்கு ஓய்வு கொடுத்தால், ஐவருக்கு வேலை கொடுக்கலாம் : அரசுக்கு கடிதம் எழுதிய ஆசிரியர்!
ஒருவருக்கு ஓய்வு கொடுத்தால், ஐவருக்கு வேலை கொடுக்கலாம் அரசுக்கு கடிதம் எழுதிய ஆசிரியர்!
அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து தமிழக முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் கடிதம் எழுதி இருக்கின்றார் புதுக்கோட்டை மாவட்டதைச் சேர்ந்த எழுத்தாளரும், ஆசிரியருமான சதிஷ்குமார்.
அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் அன்றைய நிதிநிலைமையில் 58 வயதில் பணி ஓய்வு பெறுவதை அனுமதித்திருந்தால், பணப்பலன்களை உடனடியாக வழங்க முடியாது எனக் கருதி,
வயது நீட்டிப்பு வழங்கப்பட்டது.
தற்போதைய ஆட்சியில் பணி ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆகக் குறைக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 60 என்னும் நிலையே தொடர்ந்தது.
அதேநேரத்தில் தற்போது மீண்டும் 60 லிருந்து மேலும் வயது நீட்டிப்பு வழங்கப்படலாம் என்னும் பேச்சு எழுந்து, பரவலாகப் பகிரப்பட்டும் வருகின்றது.
பகிரப்பட்டு வரும் இக்கருத்து வெறும் வதந்தியாக மட்டுமே பரவிவிட்டுப் போய்விட வேண்டும் என்பதே சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அனைவரது விருப்பமும் ஆகும்.
படித்துவிட்டு பல்லாண்டுகளாக பணிக்கான கனவோடும், ஆர்வத்தோடும் காத்துக்கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்திருந்தே வதங்கிவிடக்கூடாது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தக் கடனின் அளவு மிக அதிகமாக அதிகரித்திருக்கின்றது என்பது உண்மை.
அதனை ஒரே ஆண்டில் சரிசெய்துவிட முடியாது. ஆனால் அதனையே காரணம்காட்டி ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கமுடியாது என்பதற்காக , ஓய்வூதிய வயதை அதிகரிப்பதும், படித்துவிட்டுப் பல்லாண்டுகளாக பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களைத் தொடர்ந்து காக்க வைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பல்லாண்டுகளாக
கல்வித்தகுதியைப் பதிவு செய்துவிட்டு, பணிக்காக காத்திருப்பவர்களுக்கு 300, 500 என மாதமாதம் பட்டுவாடா மட்டுமே செய்துகொண்டிருக்கும் பரிதாப சூழலில் ஓய்வு பெறும் வயதை இன்னும் உயர்த்திக்கொண்டிருப்பதை பொதுநல நோக்குக்கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
33 வருட அரசுப்பணியை நிறைவு செய்தவர்களுக்கு 58 வயதைப் பணிநிறைவாகவும், 33 வருடம் நிறைவு செய்யாதவர்களுக்கு 60 வயது என்பதையும் பணி நிறைவு நாளாகக் கருதி, தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டமியற்ற வேண்டும்.
இது நிதிநிலை அடிப்படையிலும் சரி, பணித்திறன் அடிப்படையிலும் சரி பெரும்பலனைக் கொடுக்கும்.
33 வருடம் பணி அனுபவம் கொண்ட ஒருவர் தொடர்ந்து பணிபுரியும்பொழுது, அவரது பணித்திறனில் முழுமையான செயல்வேகம் என்பதை உடலளவிலும் சரி, உள்ளத்தளவிலும் சரி பெரிதாக எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில் இன்றைய உணவுமுறைகளும், வாழ்க்கை முறைகளும் 50 வயதைக் கடக்கும் பொழுதே அநேக வியாதிகளோடு நம்மை ஐக்கியப்படுத்தி விடுகின்றது.
அந்தக் காலகட்டங்களில் வியாதிகளோடு போராடுவதும், மருந்து, மாத்திரைகளோடு மல்லுக்கட்டுவதுமே பெரும்போராட்டமாகத் திகழ்கின்ற சூழலில், அவர்களைத் தொடர்ந்து பணிபுரியச் செய்வது சரியான அணுகுமுறையாக அமையாது.
அத்துடன் 33 ஆண்டு பணி அனுபவம் நிறைந்த ஒருவருக்கு ஓய்வு வழங்கும்பொழுது, அவர் ஒருவர் வாங்குகின்ற ஊதியத்தைக் கொண்டு 5 புதிய நபர்களுக்கு பணி வழங்க முடியும். புதிய நபர்களிடம் செயல்திறன் வேகமும், உற்சாகமும் அதிகமிருக்கும்.
இதுதான் அறிவார்ந்த, ஆரோக்கியமான நடைமுறையாக இருக்க முடியும். அதனை விடுத்து, 33 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற ஒருவரை, 60 வயதையும் கடந்து தொடர்ந்து பணிசெய்ய அனுமதிக்கும்பொழுது நிதியிழப்பும், பணியிழப்பும் அளவுக்கதிகமாக ஏற்படுகின்றது என்பதை அரசு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply