கல்வி உயர : (பாகம்-10) வளர் இளம் பருவக் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் குறித்து வரும் செய்திகள் வருத்தமளிக்கின்றன. – யாரை குறைசொல்வது?!
வளர் இளம் பருவக் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் குறித்து வரும் செய்திகள் வருத்தமளிக்கின்றன. யாரை குறைசொல்வது?
கொரோனா இரண்டாண்டு கற்றல் இடைவெளியை மட்டும் ஏற்படுத்தவில்லை. ஆசிரியர் மாணவர் உறவு சிக்கலையும் சேர்த்தே ஏற்படுத்தியுள்ளது.
அவனது விரல்நுனியில் ஒரு தடவலில் உலகத்தின் நல்லது கெட்டது என அத்தனையும் கிடைக்கிறது. நம்மிடம் இனி தரவுகளைத் தேடி வரத் தயாராக இல்லை.
என்னுடைய சொந்த மகன் என் பேச்சைக் கேட்பதில்லை. அவனுக்குத் தேவையான அத்தனையும் செய்கிறோம். அன்பை வாரி இறைக்கிறோம். ” டேய்! அந்த சம் அப்படி இல்லை. உனக்கு நான்காம் வாய்ப்பாடு தெரியாதா ? ” எனக்கேட்டேன்.
” ஒண்ணாம் வாய்ப்பாடு கூடத்தான் தெரியாது. ” என முறைக்கிறான். என் மனைவி பதறி போய், ” டேய்! அப்பாகிட்ட இப்படி பேசக்கூடாது.” என்றாள்.
” அம்மா! சும்மா கடுப்பை கிளப்பிட்டே இருக்கார் . அப்புறம் கோபம் வந்திச்சு அவ்வளவுதான் ஒரே குத்து …” என கையை ஒங்குகிறான்.
இந்த நிகழ்வை சொல்வதன் வழி கையை முறுக்கி அடிக்க ஓங்கும் எந்த செயலையும் நியாயப்படுத்தவில்லை. கையை ஓங்கியதால் அடித்துவிடுவான் என்பதும் பொய்யே.
ஒரு நல்ல தகப்பனாக அவனை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு உள்ளது. அதேபோல்தான்ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது.
அதைவிடுத்து வகுப்பறையில் வீடியோ எடுப்பது எவ்வளவு அபத்தம். குழந்தைகளின் உரிமைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
வாய்ப்பாடு தெரியுமா என்ற போது அவனது ஈகோ எட்டிபார்த்துவிட்டது. அதன்விளைவுதான் கையை ஓங்கியது. அப்பான்னு பார்க்க மாட்டேன் . ஓங்கி குத்திடுவேன்னு மிரட்டியது.
சுதாரித்து, கொஞ்சம் ரசித்து அவனை அரவணைத்து , ” சாரிடா ! நீ தப்பா புரிஞ்சுகிட்டே. உனக்கு வாய்ப்பாடு தெரியலைன்னு சொல்லவில்லை. அந்த சம்முக்கு நான்காம் வாய்ப்பாடு தேவைபட்டது. அதைதான் சொல்ல சொன்னேன்” என கூறினேன்.
மறுநிமிடமே, ” சாரிப்பா! நீங்க நிஜம்ன்னு நம்பிட்டீங்களா? இப்ப நான் அந்த கணக்கை செய்றேன். நீங்க செய்றதை பாருங்க. தப்புன்னா ஸ்டாப் பண்ணி செய்து காட்டுங்க ” என நார்மலாக மாறினான்.
ஒரு பெற்றோராக குழந்தையின் மனதை மாற்ற இயலும் எனில் இரண்டாம் பெற்றோராக திகழும் ஆசிரியரால் ஏன் முடியாது?
மதிப்பெண்களை முன்னிலைபடுத்தி மாணவர்களின் ஈகோவை டச் பண்ணினால் இதுமாதிரி விளைவுகள் இனியும. தொடரும். ஆசிரியர் என்ற அதிகாரத்தை தூக்கி எறிந்து, அன்பை கையில் எடுப்போம். மாணவர்களுடன் இணைந்து நண்பனாக பயணிப்போம்.
வளர்இளம் பருவத்தினரைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். அதைவிட , அவர்கள் வாழ்வில் எதிர்நோக்கி உள்ள சவால்களையும் புரிந்து கொள்தல் அவசியம்.
நமக்கு சவாலாக சாராயம்,, கஞ்சா போன்ற போதை வஸ்துகள் இருக்கின்றன. அதனைத் தடுக்க சமூக ஆர்வலர்களுடன் இணைந்து விற்பனையை முடக்குவோம்.
மாணவர்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க அரசு தொடர்ந்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றது. போலீஸ் உதவியுடன் மாணவர்களைக் காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
ஒவ்வொரு பள்ளிக்கூட வாசலில் விற்கப்படும் தலகாணி போன்ற வாயில் அதக்கிக் கொள்ளும் விற்பனைப் பொருளைத் தடை செய்ய வேண்டும்.
அந்தப் பொருளைத் துவக்கப் பள்ளி மாணவர்கள் முதல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை பயன்படுத்துகின்றனர்.
குழந்தைகள் அந்த மிகச் சிறிய தலகாணியை வாயில் அதக்கி வைக்கப் பழகும் பழக்கம் நாளடைவில் போதைக்கு அடிமையாக தூண்டுகோலாக உள்ளது என்பதை ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், போலீசார் என அனைவரும் உணர்ந்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனிமேலாவது உங்கள் பள்ளி வளாகத்தில், மைதானத்தில் இந்தச் சிறிய தலகாணி கிடக்கிறதா எனப் பாருங்கள்!
ஆசிரியர் என்பவர் புத்தகத்தில் உள்ள அறிவைப் புகட்டுபவர் மட்டுமல்ல. மாணவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் வழிகாட்டியாக இருந்து வழி நடத்துபவர்.
மாணவர்களுக்கு சக நண்பனாக, தோழனாக இருந்து, மாற்றுக் கல்வி முறையை கையில் எடுத்துக் கற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம்.
தொழில்நுட்பத்தை விரும்பும் அவனுக்கு இணையாகத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வோம். மாற்று வழியில் நல்லமுறையில் தொழில் நுட்பத்தைக் கையாள்வோம். மாணவர்களுக்கு உதவுவோம்.
சினிமா, குறும்படம் என மாணவர்களுக்குப் பிடித்த விசயங்களை வகுப்பறையில்காட்டி, பாடத்துடன் அறத்தையும் கற்றுக் கொடுத்து வகுப்பறையை கலகல என வைத்துக்கொள்ள ஒர் ஆசிரியரால் முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது.
அதற்கு நாமும் தயாராக வேண்டும். சினிமா ஆகட்டும், குறும்படம் ஆகட்டும், அத்துறையின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். தினமும் கற்பவராக இருப்போம்.
பொருளியல் பாடத்தைக் கற்றுக் கொடுக்க ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் நேரலை வாயிலாக கள அனுபவத்தைத் தரும் புதுமையை விரும்பும் ஒர் ஆசிரியரால் முடியுமெனில், நம்மால் ஏன் முடியாது?
நாமும் முயன்று பார்ப்போம். மாணவர்களுக்காகச் சிந்திப்போம்.
ஒரு ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தால் குரல் கொடுக்க எத்தனைச் சங்கங்கள் இணைந்து வரும்! ஏன் நானும் குரல் கொடுப்பேன். அதேவேளையில் மாணவர்களுக்காக ஏன் குரல் கொடுக்கக் கூடாது?!
ஆசிரியர், மாணவர் என்ற பேதமில்லை. மாணவர்களை நல்வழிப்படுத்த மாற்று சிந்தனையுடன் பயணிப்போம்.
க.சரவணன், மதுரை.
Leave a Reply