பள்ளியில் படிக்கும் போதே சம்பாதிக்க வழி ஏற்படுத்தி தரும் கல்வி சாத்தியமா?

Share Button
“வேலையும் கல்வியும் என்ற இரட்டை அம்சம் எனக்குப் பிடிக்கவில்லை. வேலைதான் கல்வி என்ற அம்சம்தான் எனக்கு திருப்தியாக இருக்கிறது” என்கிறார் வினோபா.
சில நாட்களுக்கு முன்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, அவனது ஆசிரியர் அனுப்பி வைத்ததாக சில மாணவர்கள் என்னிடம் அழைத்து வந்தனர். அவர்கள் அவனை இழுத்து வந்த விதம், அம்மாணவன் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டான் என்ற உணர்வை ஏற்படுத்தியது.
அவர்களிடம் விசாரித்தேன். அவன் தினமும் காலை உணவு உட்கொள்வதில்லை என்பதை அறிந்தேன். “சரி! இட்டலி வாங்கிக் கொடுங்கள். இந்தாங்க காசு” என பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தேன். அவர்கள் வாங்க மறுத்ததுடன், “சார்.
தினமும் எங்க டீச்சர் தான் இவனுக்கு சாப்பாடு வாங்கி தர்றாங்க.
இன்னிக்கும் வாங்கிக் கொடுத்துட்டாங்க. வீட்டில் ஏன் சாப்பிடாம வர்றான் என்பதைக் கூற மாட்டேன்கின்றான்.” என்றனர். அனைவரையும் அனுப்பி வைத்து அவனிடம் விசாரித்தேன். அம்மாவும் அப்பாவும் கொத்தனார் வேலை செய்கின்றனர் என்றும், அவர்கள் காலையிலே வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால், இரவில் மிஞ்சிய பழைய சோற்றை அதிகாலையில் அவன் உண்பதற்கு வைத்துவிட்டு சென்று விடுகின்றனர் என்றான்.
அவனுக்கு பழைய சோறு பிடிக்காது என்பதால், அதனை நாய்க்கு வைத்துவிட்டு வந்துவிடுவதாகக் கூறினான். சனி, ஞாயிறு விடுமுறையில் என்ன செய்வாய் என்று கேட்டேன். அவன் விடுமுறை நாளில், அருகில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில், காலை எட்டு மணிக்கு சென்று பத்து மணி வரை வேலைக்கு செல்வதாகவும், பார்ப்பதாகவும், அவர் கொடுக்கும் இருபது ரூபாயில் அருகிலுள்ள உணவகத்தில் இட்டலி வாங்கிச் சாப்பிடுவதாகவும் கூறினான்.
அவனுக்கு மதியம் பள்ளியில் சூடான மதிய உணவும், வீட்டில் சூடான, சுவையான இரவு உணவும் கிடைக்கிறது என்பதையும் அறிந்து கொண்டேன். பழைய சோறு உண்பதற்கு கற்றுக் கொள். அதுவும் உனது அம்மா அப்பாவின் உழைப்பில் வந்தது என்றேன். அவன் தலையாட்டி விட்டுச் சென்றான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை இதேப்போல் அழைத்து வந்தார்கள். வீட்டிலிருந்து மதியம் சாப்பாடு கொண்டு வருவதில்லை என்றும், மதியம் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு சாப்பாட்டையும் வாங்கி உண்பதில்லை என்பதை அறிந்தேன். பல நாட்கள் மதியம் பட்டினியில் இருப்பதால், இரத்த சோகை ஏற்பட்டு உடல் பருத்தும்
காணப்பட்டான். அவரது ஆசிரியர் சமீபத்தில் தான் அவன் மதியம் சாப்பிடாமல் இருப்பதை கவனித்துள்ளார்.
அவனிடம் விசாரித்ததில், பள்ளியில் மதிய உணவு ரேசன் அரிசியில் சமைப்பதால் தனக்கு பிடிக்காது, ஒத்துக் கொள்ளாது என்றான். சத்துணவு நன்றாக இருக்கின்றது, சுவையாக ஆயா சமைக்கின்றார் என்றேன். தினமும் நான் சாப்பிட்டு பார்த்துதான் மாணவர்களுக்கு அளிக்கின்றனர் என்றேன். எனது உணவை மற்ற ஒருவனுக்கு உண்பதற்கு வழங்கி விட்டு, பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டுக் காண்பித்தேன். அவனுக்கும் கொண்டு வந்து கொடுத்தேன்.
அதனை அவன் முகர்ந்து கூட பார்க்கவில்லை; உண்ணக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தான். எவ்வளவோ கெஞ்சினேன். அவன் கடைசி வரை அதனை உண்ணவில்லை. அதன்பின், தீவிர விசாரணையில், சில சமயங்களில் அவனும் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவதாக அறிந்தேன். சனி, ஞாயிறு விடுமுறையில் அப்பளக் கம்பெனியில் வேலை பார்ப்பதால் கிடைக்கும் வருமானத்தில் சேர்த்து வைத்து கடையில் சாப்பாடு வாங்கி உண்பதாக அறிந்தேன்.
இப்படி பல உதாரணங்கள் என்னால் கூற முடியும். இதில் சாப்பாடு அவர்கள் உண்ணவில்லை என்பது குறித்து இங்கு பேச வரவில்லை. ஆனால், அவர்கள் ஏதோ ஒரு வேலையை செய்து தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதைக் காண்கின்றேன். அது குறித்து பேசலாமே!
“எது விடுதலையளிப்பதோ அது கல்வி” என்பது கல்விக்கு குறிக்கோள். அப்படி பார்த்தால் அவனது விடுதலைக்கு ஏதோ ஒரு தொழில் தேவையாக இருக்கின்றது. தொழிற்கல்வி குறித்து பேசும் போது மாணவர்களின் இதயத்தை பண்படுத்தல், ஒழுக்கக் கல்வி, எழுத்தறிவுப் பயிற்சி, உடற்பயிற்சி, எல்லோருக்கும் உடலுழைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது எனது கருத்து. எப்போதும் கற்றல் தாய் மொழி வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
தாய்மொழி வழிக்கல்வி, மாணவர்களிடம் எளிய புரிதலை உருவாக்கும். தற்போது வந்துள்ள புதிய தமிழ் புத்தகத்தை மாணவர்கள், அவர்களாகவே எடுத்து படிக்க முடியவில்லை. ஒருவனால் தாய் மொழியில் புத்தகத்தை வாசித்து புரிந்து கொள்ள வில்லை எனில் எதற்கு புத்தகம்? என்று முகநூலில் நண்பர் சிவா பதிந்ததை இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, வகுப்பறை சுத்தமாக இருப்பதற்கும், பள்ளி வளாகம் சுத்தமாக இருப்பதற்கும் எனது வகுப்பில் ஒரு குழுவை உருவாக்கினேன். அக்குழு, பள்ளி முழுவதும் மாணவர்கள் கிழித்துப் போடும் காகிதக் குப்பைகளைச் சேகரித்து ஒரு பையில் நிரப்பி வைக்க வேண்டும் எனக் கூறினேன். அவர்களும் சேகரித்தார்கள். அக்குழு, மாலை வேளையில் சேகரித்த கசக்கி வீசப்பட்ட காகிதக் குப்பைகளை நன்றாக விரித்து, சுருக்கங்கள் நீக்கி, நேர்பட அடுக்கி வைத்தனர்.
ஆரம்பத்தில், பல ஆசிரியர்கள் அவரவர் வகுப்பில் உள்ள குப்பைகளை அந்தந்த வகுப்பு மாணவர்களேச் சுத்தம் செய்து கொள்வார்கள் எனக் கூறி அக்குழுவை விரட்டினார்கள். இந்த குழு தங்கள் வகுப்பறையில் உள்ள காகிதங்களை எடுத்துக் கொண்டுச் செல்வதை அவமானமாக கருதினார்கள். அதன்விளைவு, வகுப்புக்குள் குப்பைகள் குறைந்தன.
ஆனால், கிழித்த குப்பையை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டனர். பள்ளி வளாகத்திலுள்ள குப்பைத் தொட்டி நிரம்பி வழிந்தது. இப்போது, அக்குழுவினர் பொது குப்பைத் தொட்டியில் இருந்து காகிதங்களை எடுத்து
சேகரித்தனர். இதனால், 15 நாட்களில் பை நிரம்பியது. மாணவர்களை ஒர் ஆசிரியர் உதவியுடன் அருகில் உள்ள பழைய பேப்பர்
கடைக்கு அனுப்பி, சேகரித்த குப்பைகளை எடைக்கு போடும் படி கூறினேன்.
இப்படி செய்ததால் வருமானம் ரூபாய் முந்நூறுக்கும் மேல் கிடைத்தது. அவர்களை வகுப்பறைக்கு வேண்டிய பொருட்கள் வாங்கி வரக் கூறினேன். குப்பைத் தொட்டி, டஸ்டர், கலர் சாக்பீஸ் டப்பா போன்ற சில பொருட்களை வாங்கினார்கள். இன்னும் மீதம் ரூபாய் இருந்தது. அதனுடன் ஒரு சிறு தொகையைக் கொடுத்து அனைவருக்கும் பேனா வாங்கி வரச் செய்தேன். அனைவருக்கும் பேனா ஒன்றை பெற்றனர். இதனை காலை வழிப்பாட்டில் கூறினேன்.
எல்லா வகுப்பு மாணவர்களும் குப்பைகளைச் சேகரிக்க ஆரம்பித்தனர். இதனால், வகுப்பறை மட்டுமல்லாது, பள்ளி வளாகத்திலும் குப்பையின் அளவு குறைந்தது. இன்னும் சொல்ல போனால் காகிதம் கிழித்து போடுவது குறைந்திருந்தது. பொதுத் துப்புரவுக்கு கூட்டான நடவடிக்கைக்கான பயிற்சியாக அதனைக் கண்டேன். ஆனால், ஒரு விரும்பதகாத விளைவு ஏற்பட்டது. சிலர் விடுமுறையில், வசிப்பிட பகுதியில் தெருவில் காகிதம் பொறுக்குவதாக அறிந்தேன். அதன்பின், யாரும் காகிதம் சேகரிக்கக் கூடாது என அறிவிப்பு கொடுத்தேன்.
அதன்பின், ஆசிரியர்களின் தொடர் கண்காணிப்பில் வகுப்பறை சுத்தம் பேணப்படுகின்றது. அதேவேளியில், படிக்கும் போதே சுயமாக சம்பாதிக்கத் தெரிந்து வைத்திருப்பதன் அவசியத்தை உணர்ந்தேன். சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு அது உதவும் என்பதை உணர்ந்து கொண்டேன். பொதுக்கல்வியுடன் சுய தொழில் ஒன்றை உருவாக்கி கொள்வது நல்லதாகபட்டது. அது தன் சார்பு நிலையை உறுதிப்படுத்துவதாக அமையும் என்பதை உணர்ந்தேன்.
கல்வி உற்பத்திப் பயன் கொண்ட உடலுழைப்பை மையமாக கொண்டு அமைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.
பள்ளிப்படிப்புடன் சுயமாக சம்பாதிப்பது, சுய வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்ளும் நம்பிக்கையை அளிப்பதாக இருந்தால் நல்லது என்பதை உணர்ந்தேன். ஒரு ஆசிரியராக தொழிலைத் தெரிந்தெடுக்கும் போது, பொருளாதார ரீதியில் லாபமானதாகவும் , கல்வி பயன் அளிக்கக் கூடியதுமான தொழிலைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை எனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து புரிந்து கொண்டேன்.
நான், மதுரை தூய மரியன்னை பள்ளியில் படித்த போது, ஓவியம், தச்சு, நூல் நூற்பு, நெசவு போன்ற தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன. நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தச்சுத் தொழிலை தேர்வு செய்திருந்தேன். அப்போது, ஹாஸ்டலில் சேர்ந்த பலரும் தச்சு தொழிலை தேர்ந்தெடுத்து இருந்தனர்.
எங்களுக்கு திருப்புளி பிடிக்கவும், மரம் இளைக்கவும், ஆணி அடிப்பதற்கும், மட்டம் பார்ப்பதற்கும் கற்றுக் கொடுத்தார்கள். எங்களிடம் நூறு ரூபாய் பெற்று , மரம் வாங்கி மேஜை , நாற்காலி போன்ற சாமன்கள் செய்யக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் செய்த பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைத்தப் பணம் அவரவர் கொடுத்த மூலப் பணத்திற்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்பட்டது.
எனக்கு எழுபத்து ஐந்து ரூபாய் கிடைத்தது. நான் அதனை பயன்படுத்தி முனிச்சாலை அம்சவள்ளியில் புரோட்டா உண்டேன். பல ஹாஸ்டல் மாணவர்கள் எண்ணெய், சோப்பு, சீப்பு , ஆடை என சுய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். வீட்டில் சின்ன சின்ன மரச்சாமான்கள் பழுதைக் கூட சரி செய்ய கற்றிருந்தேன். இப்போது, அது நினைவுக்கு வந்தது. தச்சு தொழில் கற்றுக் கொள்ளும் போது, சமூகத்தை ஒருங்கிணைக்கும் அன்பு, உண்மை, நீதி, கூட்டு முயற்சி, தேசீய ஒருமைப்பாடு, சமத்துவம்,
சகோதரத்துவம், ஆகிய பண்புகளை வளர்க்கும் பயிற்சியை பெற்றதாக உணர்ந்தேன்.
உடல் உழைப்பிற்கும், அறிவு உழைப்பிற்கும் இடையிலுள்ள பிணக்கை நீக்கி, இணைந்து செய்யும் உற்பத்தித் திறனுள்ள தொழிற் படிப்பாக அதனைக் கண்டேன். அங்கு கணிதப் பாடத்தின் அவசியத்தை உணர்ந்தேன்.
உலகமையமாதலில், நவீன இயந்திரங்களால் உருவான சமூகத்தில் தச்சு, நெசவு, தையல் போன்ற தொழிற்கல்விகள் பயன் அளிப்பதாக இல்லை. பல பள்ளிகளில் அவை பெயர் அளவிலே செயல்படுகின்றன. குழந்தையின் சூழலுக்கு இசைந்த கைத் தொழிலுடன் தொடர்புடைய பயிற்று முறையின் அவசியத்தை குறித்து யோசித்தேன். மாற்று வழிமுறைகளை யோசித்தேன்.
ஆசிரியர்களுடன் ஆலோசனைகள் செய்தேன். முடிவில் பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைப்பது என முடிவானது.
அன்றைய நிர்வாகத்திடம் அதற்கான அனுமதியை கோரினேன். பள்ளியில் பலரும் விடுமுறை தினத்தில் வந்து செல்வதால், தோட்டத்தினைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தனர். காய்கறிகள் உருவாகி பலன் தரும் சமயத்தில் யாராவது பறித்து சென்றால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது எனத் தெரிவித்தனர். ஆனாலும், வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து மாணவர்களிடம் பேசினேன்.
ஒரு சிலர் வீட்டுப்பகுதியில் உள்ள நீர் தேங்கும் இடங்களில் தோட்டம் அமைத்தனர். தக்காளி, வெண்டை, கத்தரி போன்றவற்றை பயிரிட்டனர். ஆனால், அது பெரும் பலனைக் கொடுக்கவில்லை. பெருவாரியாக பயிரிடாததால், அதனை அவர்கள் தொடரவில்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பள்ளிகளில் தோட்டம் அமைத்தல், கிராப்ட் ஒர்க் செய்தல் ,ஓவியம் வரைதல் போன்ற வேலைகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பருவ / ஆண்டு முடிவில் அவற்றை விற்று, அதில் பெறும் பணத்தை நற்செயல்களுக்கு ஈடுபடுத்துவதாக அறிந்தேன். மதுரையில் வலைதளம் நடத்தி வந்த சீனா அய்யாவும் அவர் மனைவியும் இங்கிலாந்து சென்று திரும்பி வந்த போது இது குறித்த தகவல்களை என்னிடம் தெரிவித்தனர்.
வாழ்வதற்கேற்ற, உழைப்புக்கான பயிற்சியில் ஈடுபடுவதால், மாணவர்களிடம் சமூகத்தைச் சுரண்டி சூரையாடும் குரங்கு குணம், செல்வத்தை சேர்த்து வைக்கும் எலி குணம், வன்முறையில் வாழும் புலிக்குணங்கள் இல்லாமல் வாழ்வதற்கானச் சாத்தியக்கூறுகள் உள்ளதாக மகிழ்ந்து சீனா அவர்கள் கூறியது இன்றும் மனதில் மறையாமல் உள்ளது. புதிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் தொழிற்கல்வி என்பது நான் கூறிய வகையில் சேராது.
ஏனெனில், அது, மாணவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பதாலும், முதல் தலைமுறை பள்ளிக்கு வருவதாலும் ஏற்படும்
பின்னடைவை, குழந்தைகளின் அறிவை சோதிப்பதன் வழியாக நடுநிலைப்பள்ளி அளவிலேயே, தொழில் என்ற மாயையை வழிக்காட்டியாக அமைத்து மேல்படிப்பை தொடராமல் பின்னடைவு செய்யும் அடிப்படை வாதக் கல்வித் திட்டம் ஆகும்.
நான் வலியுறுத்துவது, பொதுக்கல்வியுடன் இணைந்து சுயதேவையினை நிறைவு செய்தல், தொடர்பு ஏற்படுத்தல், அறிவுத் தாகத்தை எழுப்புதல் போன்றவற்றை உள்ளடக்கியது. அதாவது, இக்கல்வியானது அவனுக்கு சமூக, ஆன்மீக, பொருளாதார சுதந்திரங்களைத் தேடி தர வேண்டும். இங்கு ஆன்மீகம் எனக் கூறுவது சுய ஒழுக்கம் எனப் பொருள் கொள்ள வேண்டும்.
இதானால், மாணவன் இயல்பான கற்றலை பெறுபவனாக திகழ்வான். நான் வலியுறுத்தும் கல்வி வெறும் பொருளாதார வளத்திற்கு வழிகாடுவது அல்ல.
தொழில் என்பது கற்பனைத் திறம், பொருட்களைக் கையாளும் ஆற்றல், கலைத்திறன் உடையவராக திகழ்ந்து , சிறந்த ஆளுமையாக உயர்த்துவதாகும்.
காலத்திற்கு ஏற்ப காய்கறித்தோட்டம், கணினி சரிசெய்தல், கணிணி வழி ஓவியம் இப்படி பட்ட தொழில் சார்ந்த படிப்புகளை கல்வியில் புகுத்துதல் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உதவும். அதுவே, காலப் போக்கில் சுய சார்பு நிலைக்கு இட்டு செல்லும். கல்வியை டிஜிட்டல் மையமாக்குவதில் செலவிடும் தொகையை மாணவர்கள் தற்சார்பு கொண்டவர்களாக திகழ
உதவும் தொழிற் படிப்புகளை உயர்துவக்கப் பள்ளி அளவில் கொண்டு வருவது நல்லது.
நம்முடைய வறுமையும், பட்டினியும் மாறி, நம்முடைய வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொள்ள வழி பிறக்கும். வேலையில்லை என்ற நிலைமை மாறி, தொழிலும், வேலையும் பெருகும்; வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்; நம்முடைய பையன்களும், பெண்களும் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வதுடன் ஒரு கைவினைத் தொழிலின் மூலம் அறிவுப்
பயிற்சியும் பெறுவார்கள் என்பது அவரது மட்டுமல்ல எனது திடமான நம்பிக்கையுமாகும். அரசு இதனை கருத்தில் கொண்டு செயல்படுமா? கல்வியாளர்கள் காலத்திற்கேற்ற தொழில் முறைகள் குறித்து சிந்திப்பார்களா? காலம் தான் பதில் கூற வேண்டும்.
க.சரவணன், மதுரை.
எழுத்தாளர், கல்வியாளர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *