ஆற்றுப்படுத்துதல் குறித்த புரிதல் இருந்தால் மட்டுமே நம்மை நாடிவரும் குழந்தைக்கு / நபருக்கு வழிகாட்ட முடியும்!

Share Button

ஆற்றுப்படுத்துதல் :-

”சார்! எனக்கு மௌனித் , கார்த்திக்ராஜா மாதிரி வரைய தெரியலை. அவனுங்க எல்லாம் ரொம்ப அழகா வரைகிறானுங்க…” என ஒரு பெண் குழந்தை என்னிடம் வந்து அழத் தொடங்கினாள்.

அந்தக் குழந்தைக்கு என்ன ஆலோசனை வழங்கி இருப்பீர்கள்?

ஒரு குழந்தை தன் பிரச்சனையைக் கூறினால் அல்லது கூற முயன்றால், உடனே ஆலோசனையை அள்ளி வீச வேண்டும் என நினைக்ககூடாது.

ஆசிரியருக்கு பொறுமை தேவை. ஆசிரியர் ஆலோசனை வழங்க அவசரப்படக்கூடாது. முதலில் பிரச்ச்சனை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சனைதான் தெரியுமே! அவளுக்கு ஓவியம் வரையத் தெரியாது, அதுதானே பிரச்சனை. சரிதானே?

ஆம்! ஆனால், பிரச்சனையின் கனம் அறிதல் முக்கியம். ஆசிரியர் குழந்தைக் கூறும் பிரச்சனையின் கனம் அறிந்து கொள்ள வேண்டும்.

அழகாக வரையத் தெரியாமல் இருப்பது அந்தப் பெண் குழந்தைக்கு ஒரு நெருக்கடி. அவளுக்கு , அவள் வரைந்த படம் அழகானதாக இருக்க வேண்டும். அவளை பிறர் பாராட்ட வேண்டும். அந்தப் பிரச்சனையில் இருந்து அவளுக்கு வெளிவரத் தெரியவில்லை.

ஆகவே, அவளுக்கு வரையத் தெரியாது என்பது பிரச்சனை அல்ல. நீங்க என்ன சொல்ல வர்றீங்க? அவள்தான் தெளிவா சொல்லிட்டாலே வரையத் தெரியலைன்னு.

அதுக்குதான் பிரச்சனையின் கனம் அறிதல் முக்கியம் என்றேன். அவளுக்கு வரையத் தெரியும். ஆகவேதான் அவள் வரைகின்றாள். ஆனால், அவள் வரைந்து முடித்தவுடன், அவள் வரைந்த ஓவியத்தை, பிற குழந்தைகளின் ஓவியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.

தன் சக நண்பர்களிடம், அவள் வரைந்த படத்தைக் காண்பித்து, அவள் வரைந்த படத்தைவிட பிறர் வரைந்த/ வரையும் படங்கள் நன்றாக இருப்பதாக கருத்துக் கேட்கின்றாள். அவர்களும் அவளைவிட கார்த்திக், மௌனித் நன்றாக வரைவதாகக் கூறுகிறார்கள்.

இந்த வார்த்தைகள் அவளை மேலும் குறைத்து மதிப்பிட வைத்திருக்கிறது. ஆக, அவள் தன்னால் வரைய முடியாது என்றும், அப்படி வரைந்தாலும் நன்றாக இருக்காது என்றும் முன்முடிவுக்கு வருகிறாள். அவள் அவளையே குறைத்து மதிப்பிட்டு கொள்கின்றாள்.

இப்படி ஒருவர் தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுவதைத் தாழ்வு மனப்பான்மை என்கின்றோம். ஆக, வரைவது, அழகாக வரைவது என்பது பிரச்சனை அல்ல. அவளிடம் உள்ள பிரச்சனை தாழ்வு மனப்பான்மை. இந்த தாழ்வு மனப்பான்மையே மன அழுத்தத்தை ஏற்படுத்தி , என்னிடம் அழச் செய்துள்ளது.

அந்தக் குழந்தையைச் சமாதனப்படுத்த வேண்டும். ஆம்! அதைதான் ஆற்றுபடுத்துதல் என்கின்றோம்.

அதாவது, “அந்த குழந்தையிடம் அழாதேம்மா! இதுக்குபோய் அழுவாங்களா? எனக்கும்தான் வரையத் தெரியாது. அதுக்காக நான் அழுதுகிட்டா இருக்கேன். இப்பபாரு நல்ல உத்தியோகத்தில் இருக்கேன். வரையத் தெரியாததைப் பெரிசு படுத்தாதே! கண்ணை துடைச்சிட்டு போய் உட்காரு.” என்று சமாதானம் செய்ய வேண்டும்.

சரியா?

இல்லை. இதற்கு பெயர் சமாதனம் இல்லை. ஆசிரியர்கள் பலருக்கும் குழந்தைகளைச் சமாதனம் செய்யத் தெரியவில்லை. ஆற்றுப்படுத்தல் என்பது ஒரு குழந்தை / ஒரு மாணவர் / ஒரு மனிதர் நெருக்கடியில் இருக்கும் போது தேவையானதாக இருக்கிறது.

ஆற்றுப்படுத்துதல் குறித்த புரிதல் இருந்தால் மட்டுமே நம்மை நாடிவரும் குழந்தைக்கு / நபருக்கு வழிகாட்ட முடியும்.

முதலில் பிரச்சனை உள்ள குழந்தை , நம்மிடம் பிரச்சனையைக் கூறியவுடன் , அடுத்த நொடியில் (ஆசிரியர்) நாம் பேசக் கூடாது அல்லது அறிவுரைக் கூறக் கூடாது. முதலில் பிரச்சனைகளைக் கொண்ட குழந்தையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் மீது நம்பிக்கைக் கொண்டு அக்குழந்தைப் பேசும் போது, நாம் அக்குழந்தையைப் புரிந்து கொள்தல் அவசியம். அக்குழந்தையை அனைத்து குழந்தைகள் முன்பும் அல்லது அனைத்துக் குழந்தைகளை வைத்துக் கொண்டும், அக்குழந்தையின் பிரச்சனைக் குறித்து பேசக்கூடாது. பிரச்சனைகளைக் கொண்ட குழந்தையைப் புரிந்து கொண்டு அக்குழந்தையை அழைத்துப் பேச வேண்டும்.

குழந்தைக்கு வரையத் தெரியவில்லை என்று என்னிடம் கூறிவிட்டாள். அதன்பின், மறுநாள்/ அல்லது அன்று மாலையில் அவளைத் தனியாக ஸ்டாப் ரூமுக்கு அழைத்துச் சென்று, “ இங்க பாரும்மா! வரையத் தெரியாதது எல்லாம் வாழ்க்கையில் ஒரு பிரச்சனையே இல்லை.

உன் பிரண்டு ரம்யா இருக்காளே அவளுக்கு இல்லாத பிரச்சனையா. இந்தச் சின்ன வயசிலே அம்மாவையும், அப்பாவையும் இழந்து நிக்கிறா? அதைவிடவா இது பெரிய பிரச்சனையா இருக்க போவுது.

அவனவன் தினம் தினம் வாழ்றதையே பிரச்சனையா நினைக்கிறான். நீ என்னடான்னா இந்த சின்ன விசயத்துக்குபோய் அழுகிற. என்னை எடுத்துக்க, எனக்கு சூடு போட்டாலும் வரையத் தெரியாது.

அதுக்காக உன்னை மாதிரியா அழுதுகிட்டு இருக்கேன். அப்படி பார்த்தா ஓவியம் வரைகிறவனைத் தவிர இந்த உலகமே அழுதுகிட்டு இருக்கணும். போய் படிக்கிற வேலையைக் கவனி. “ என அறிவுரை வழங்கலாமா?

வகுப்பறையில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தான்மட்டுமே பேச வேண்டும் என நினைக்கும் ஒரே நபர் ஆசிரியர்தான். நீங்க (என்னையும் சேர்த்து) எப்பவும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

ஆசிரியர் மைய வகுப்பறைகள் என்று மாறுமோ? குழந்தைகளைப் பேச அனுமதித்துப் பழகுங்கள்.
சரி! சரி! விசயத்துக்கு வாங்க.

நீங்க எப்பவும் பேச வேண்டும் என நினைக்காதீர்கள். பிரச்சனைகளைக் கொண்ட குழந்தையை அழைத்து, அக்குழந்தையினுடைய பிரச்சனையை முழுமையாகப் பேச வைக்க வேண்டும்.
குழந்தைத் தன்னுடைய பிரச்சனையை முழுமையாக கூறும் வரை காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

சரிங்க. நீங்க சொன்னது போல் பிரச்சனையை முழுமையாகப் புரிந்து கொண்டேன். அவளுக்கு தாழ்வு மனப்பான்மை தான் பிரச்சனை. இப்ப தீர்வு வழங்கலாம் தானே?

“நீ வரைந்து இருக்கும் ஓவியம் ரொம்ப நல்லா இருக்கும்மா. நீதான் உன் ஓவியம் நல்லா இல்லைன்னு நினைக்கிறாய். உன் திறமை உனக்கு தெரியலை. உன் படம் சுவேதாவின் படத்தை விட பிரமாதமா இருக்கு.

நீ ஏன் கார்த்திக், மௌனித் படத்தோட ஒப்பிடுற. அவுங்களை மாதிரி நீயும் அழகா வரையணும்னா தொடர்ந்து வரைந்து பழகு. ஒரு ஓவிய ஆசிரியரிடம் டியூசன் போ!” எனத் தீர்வு வழங்கலாம் தானே?

எப்பவும் கேள்விக்கு பதிலை நீங்கள்தான் கூற வேண்டுமா? புதிருக்கு விடையை சொல்ல வேண்டுமா? பிரச்சனைக்கு தீர்வைத் தர வேண்டுமா?

அட ! நான் ஆசிரியர். குழந்தைகளுக்கு வழிகாட்டி. நான் தானே குழந்தைகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தரவேண்டும்; தர முடியும்.

எப்பவும் ஆற்றுப்படுத்துபவர் தீர்வு தரவேண்டும் என நினைக்கக்கூடாது. குழந்தையுடைய பிரச்சனைக்கு குழந்தையையே தீர்வு காணச் செய்ய வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனையா, ஆலோசனை வழங்குபவர் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்க வேண்டும்.

பிரச்சனையின் கனத்தை அறிந்து கொள்ள அவர்கள் இருவரையும் பேச அனுமதிக்க வேண்டும். அவர்களையே தீர்வு காணச் செய்ய வேண்டும். பிரச்சனைக்கொண்ட நபரையே, அதாவது, அவருடைய பிரச்சனைக்கு அவரையே தீர்வு காணச் செய்வதே சிறந்த ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

குழந்தையைத் தானாகவேத் தீர்வு காணச் செய்தவுடன் வேலை முடிந்து விட்டது என நினைத்துவிடக்கூடாது. அக்குழந்தையை அந்தப் பிரச்சனையில் இருந்து, முழுமையாக விடுதலை பெறச் செய்தல் வேண்டும்.

ஆம்! குழந்தைகள் எந்த விதமான பிரச்சனைகளை எதிர் கொண்டாலும், அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மன ஆரோக்கியமாக வாழ்வது முக்கியம். அதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் ஆற்றுப்படுத்துபவராக இருக்க முயற்சிக்க வேண்டும்.

தொடர்ந்து விவாதிப்போம். குழந்தைகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ உதவுவோம்.

க.சரவணன், தலைமையாசிரியர், மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

2 responses to “ஆற்றுப்படுத்துதல் குறித்த புரிதல் இருந்தால் மட்டுமே நம்மை நாடிவரும் குழந்தைக்கு / நபருக்கு வழிகாட்ட முடியும்!”

  1. ந.கற்பகவல்லி says:

    குழந்தைகளுக்கு வழிகாட்டி. நான் தானே குழந்தைகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தரவேண்டும்; தர முடியும்.

    எப்பவும் ஆற்றுப்படுத்துபவர் தீர்வு தரவேண்டும் என நினைக்கக்கூடாது.
    ஐயா மிகச்சிறந்த வரிகள் ஏனெனில் நான் வேலை பார்க்கும் இடத்தில் இது நடந்து கொண்டிருக்கிறது நான் ஒரு வழி குழந்தைகளை நம்ப வைத்தால் மற்றொருவர் மாற்றி விடுவார் அந்த குழந்தையின் முதலில் எந்த நம்பிக்கை பெறுகிறோமோ அவர்களை அந்த குழந்தை திரும்பத் திரும்ப எதிர்பார்க்கிறது நான் அனுபவத்தில் கண்டது ஆகையால் அவர்களின் மனப்போக்கு அவர்களுக்கு அவர்களையும் முடிவெடுக்க வேண்டும் அந்த முடிவையும் நாம் ஒழுங்கு படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து எல்லா வகையிலும் தனக்கு ஆரோக்கியமான விஷயங்களை அவர்களை எடுத்துக் கொள்ள முழுமையாக தேற்றுவதே ஆற்றுப்படுத்துதலின் நோக்கம் என கருதுகிறேன் தங்கள் வரிகள் மிகுந்த ஆழமானவை மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *