எது வழிகாட்டுதல்? ஆசிரியர்கள் கல்வி சார்ந்த வழிகாட்டுதல் குறித்து அறிந்திருக்க வேண்டும்!

Share Button

எது வழிகாட்டுதல்?

ப்ளஸ் டூ முடித்ததும், மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால், நுழைவுத் தேர்வு சரியாக எழுதவில்லை.

அதனால், நான் மிகவும் சோர்ந்து இருந்தேன். அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. நான் குழப்பத்தில் இருந்தேன். என்னுடைய பெற்றோர் பிடித்த பாட்த்தை தேர்ந்தெடுத்து பட்டம் பெற வலியுறுத்தினார்கள்.

அப்போது, அமெரிக்கன் கல்லூரியில் பயிலும், வீட்டிற்கு அருகில் இருந்த நண்பர் பி.எஸ்.சி. சுவாலஜி படித்தால், மூன்று வருடம் கழித்து மீண்டும் நுழைவுத்தேர்வு எழுதி மெடிக்கல் சேரலாம் என்றார்.

எனக்கு பி.ஏ. தமிழ் படிக்க ஆசை என்றேன். அவர் அது வேண்டாத வேலை என்றும், எனது கனவுக்கு ஏற்ற பாதை விலங்கியல் துறைதான் என்றும் அறிவுரை வழங்கினார். அதன் அடிப்படையில் அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் துறையில் சேர்ந்தேன்.

ஐடிஐயில் சேர்ந்து படித்தால், படிப்பை முடித்ததும், இன்ஜினியரிங்க் இரண்டாம் வருடம் நேரடியாகச் சேரலாம் என்பது போல் மருத்துவத்துறையில் டிகிரி முடித்ததும் இரண்டாம் வருடம் சேருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை கல்லூரியில் சேர்ந்தபின்பே அறிந்து கொண்டேன்.

அன்று எனக்கு மட்டும் அல்ல. இன்றும் மாணவர்களுக்கும் எந்த பாடத்தைத் தேர்வு செய்வது என்பதில் நிரந்தரக் குழப்பம் இருந்து வருகின்றது. இன்னும் சொல்ல போனால், குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை.

ப்ளஸ் டூ முடித்ததும், ஏதோ ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். அன்று, எனது நண்பர் தமிழில் இருநூறு மதிப்பெண்ணுக்கு 80 மதிப்பெண்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தார்.

அவர் தமிழில் குறைந்த மதிப்பெண் எடுத்து இருந்ததால், எனக்குப் பிடித்த தமிழ் பாடத்தைப் பயில வேண்டாம் என்று நினைத்துள்ளார். ஆகவே, அப்படி அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்னும் பல மாணவர்கள் பெற்றோர்களின் கட்டாயத்தால் பாடத்தைத் தேர்வு செய்து படிக்கின்றனர்.

சுருங்கச் சொன்னால், எல்லாவிதமான தீர்மானங்களும், மாற்றங்களும் மாணவர்கள் மீது முழுமையாக முறையற்ற வகையில் திணிக்கப்படுகின்றன.

சக ஆசிரியர் ஒருவரின் குழந்தை பத்தாம் வகுப்பு முடித்ததும் பயோ மேக்ஸ் எடுத்துள்ளதாகக் கூறினார். அவரிடம் ஏன் பயோ மேக்ஸ் எடுத்துள்ளாய் எனக் கேட்டேன். அம்மாதான் சொன்னாங்க என்றார்.

”அப்படி ஏன் சொன்னாங்க?” அப்பதான் டாக்டர் அல்லது இன்ஜினியர் ஆகலாம் என்றார். உனக்கு என்ன படிக்க ஆசை எனக் கேட்டேன். கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்றார். அப்படியானால், கணினி படிப்பில் சேர்ந்திருக்கலாமே எனக் கேட்டேன்.

அவளிடம் பதில் இல்லை. இப்படிதான் பலரும் ப்யோ மேக்ஸ் படித்தால் மருத்துவம் , அல்லது இன்ஜினியர் படிக்க முடியும் என்று திணித்திருக்கிறார்கள்.

உண்மையில் ஒரு மாணவனின் படிப்பு என்பது அவனின் ஆர்வம் அல்லது கவர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில்தான் அமையவேண்டும். அதுதான், அவனது எதிர்காலத்தினைச் சிறப்பாக அமைக்க உதவும்.

சிலர் வரலாறு அல்லது பொருளியல் படித்தால் எளிதில் பாஸ் செய்துவிடலாம் என்பதால் அத்தகைய படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதுவும் தவறு.

யாராவது கூறினார்கள் என்று பாடத்தைத் தேர்வு செய்வதும், திடீரென்று தோன்றி மறையும் அர்த்தமற்ற காரணங்களுக்காகப் பாடத்தைத் தேர்வு செய்வதும் தவறாகும்.

பாடத்தேர்வு என்பது குழந்தைகளின் தனித் தன்மையையும், இயல்பையும், விருப்பத்தையும் ஆர்வத்தையும் பொருத்தது. இந்த விசயங்களைக் குழந்தைகளைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு வழிகாட்டுதல் சார்ந்த விஞ்ஞான ரீதியான புரிதல் தேவை.

ஆசிரியர்கள் கல்வி சார்ந்த வழிகாட்டுதல் குறித்து அறிந்திருக்க வேண்டும். அது மிகவும் அவசியம்.

வழிகாட்டுதல் என்றால் என்ன?

வழிகாட்டுதல் என்பது ஒரு மனிதனுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமைக்கும், முன்னேற்றப் பாதையில் நுழைவதற்கும், அவனுடைய பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கும் தொழில், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் சமூகச் சேவை புரிவதற்கும் தயார் செய்ய உதவுவது ஆகும்.

இந்த வழிகாட்டுதல் என்பது ஆலோசனையாகவே அமைய வேண்டும். ஒன்றை தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும், வழிகாட்டுபவர், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்க முடியாது.

வழிகாட்டுவதால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. ஆனால், ஒரு மனிதருக்கு அவரின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.

வழிகாட்டுதல் என்பது மாணவனின் எதிர்கால வாழ்வில் அவனது சமூகத்தோடு ஒத்துவாழத் துணைபுரியும். ஆம்! சிக்ரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற தீய பழக்கம் உள்ள மாணவர்களைச் சரியான வழிகாட்டுதல் மூலம் பிற மாணவர்களைப் போல் சமூகத்தோடு பொருந்தி வாழ உதவலாம். ஆம்! ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் பொருந்தி வாழ இயலாது.

ஆனால், அதற்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும். ஆசிரியர் பணி என்பது வேலை ஆகாது. ஆசிரியர் ஒரு மனநல ஆலோசகராகவும் இருத்தல் அவசியம். அது அவரை குழந்தைகளிடம் மதிப்பு மிக்கவராகவும், பிற ஆசிரியர்கள் மத்தியில் சிறப்பானவராகவும் உயர்த்திக் காட்டும்.

ஆசிரியர் பணியில் வழிகாட்டுதல் என்பது மாணவனை அவனது எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதாகும். வழிகாட்டுதல் மாணவனுக்குப் பிடித்தமான பாடத்தைத் தேர்வு செய்ய உதவுவதுடன், அவனது பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.

ஒரு மாணவனிடம் உள்ள திறமையைக் கண்டறிதல், அத்திறமைக்குத் தகுந்த பாடத்தைத் தேர்வு செய்ய உதவுதல் என்பது கல்வி வழிகாட்டுதல் ஆகும்.

ஒருவேளை மாணவன் தனது திறமைக்குத் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும், அவனது திறமையை வெளிப்படுத்த ஆசிரியர் உதவுவதன் வழி அவனுக்குப் பிடிக்காத பாடத்திலும் நிறைய மதிப்பெண் பெறச் செய்யவும் வைக்கலாம்.

அதற்கு வழிகாட்டுதல் உதவும். ஆகவே, ஆசிரியர் ஒரு மனோதத்துவ நிபுணராகச் செயல்படும் பட்சத்தில் மாணவனை அவனது எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்படுத்த முடியும்.

கல்வி வழிகாட்டுதல் மாணவன் திறமையுடனும், தன்னம்பிக்கையுடனும் பொறுப்புகளை எதிர்கொள்ளத் தயார்ப்படுத்த உதவுகிறது.

ஆகவே, அனைத்துவகைப் பள்ளிகளிலும் தலைமையாசிரியர்களையும், ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளியிலும் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களை மனோதத்துவ நிபுணர் ஆக மாற்ற போதிய பயிற்சி வழங்குதல் அவசியம்.

ஓவ்வொரு ஆசிரியருக்கும் சுழற்சி முறையில் பணியில் இருக்கும்போதே , ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் வழிகாட்டுதலும், ஆலோசனைக் கூறுதலும் என்ற பட்டயப்படிப்பை வழங்கி உதவலாம்.

அதுவரை பேராசிரியர்கள், மருத்துவர்கள் உதவியுடன் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கலாம்.

க.சரவணன், தலைமையாசிரியர், மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *