எது ஆலோசனை? எது வழிகாட்டுதல்?

Share Button

எது ஆலோசனை? எது வழிகாட்டுதல்?

“தம்பி! உடம்ப பாருங்க. உடம்பு பெருத்துகிட்டே வருது. கொஞ்சம் நடந்து பழகுங்க.” “என்ன வாக்கிங் போகிறது இல்லையா? சரி! நாளையில் இருந்து வாக்கிங்க் போங்க.”

“வயசு என்ன ஆகுது? அட ! உடம்பை இப்படி பெருக்க வச்சு இருக்கிங்க. இப்படியே போனா போயிட வேண்டியதுதான்.”

“உன்னை நம்பி குடும்பம் இருக்கு. கொஞ்சம் உடம்புக்கும் வேலையை கொடு.” “வாயை கட்டணும் சரவணா! இல்லைன்னா பாடையை கட்டிடுவானுங்க” “காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து மூணு மாசம் குடி. தொப்பை தானா கரைந்து போகும்.”

“வாக்கிங்க் எல்லாம் வேஸ்ட். ஒர்க் அவுட் பண்ண வேண்டும். ஒரு அரை மணி நேரம் உடம்புக்கு என்று ஒதுக்க வேண்டும்.”

“அப்படியே போனை கையில் பிடிச்சுகிட்டு ஒரு அரைமணி நேரம் நடந்து போ உடம்பு அப்படியே சரி ஆகிடும்.”

“அட! வாக்கிங் எல்லாம் வேண்டாம் ஜி. காலையில் ஒரு அரைமணி நேரம் நான் கற்றுத் தரும் ஆசனங்களை செய்யுங்க . உடம்பு அப்படியே பூ மாதிரி ஆகிடும்.”

சமீபத்தில் இதுபோன்ற வசனங்கள் என்னை நோக்கி பாய்கின்றன. என்னங்க இப்படி புசுக்குன்னு வசனம்ன்னு சொல்லிட்டீங்க! எவ்வளவு பெரிய ஆலோசனையும் வழி காட்டுதலும் தந்திருக்காங்க.

உங்கள் மீது அக்கறை வைத்து, உங்கள் நலம் சார்ந்து கூறிய வார்த்தைகள் ஆலோசனைகள் இல்லையா? ஜிம் போங்க, யோக பண்ணுங்க, வாக்கிங் போங்க என்பவை வழிகாட்டுதல் இல்லையா? சரிதான். ஆனால், இவை ஆலோசனை அல்ல.

ஆலோசனை என்பது இருவருக்கிடையில் நடைபெறுவது. இலக்கிய கூடுகை, திருமண நிகழ்வுகள், விழாக்கள், திரையரங்குகள் என பொதுநிகழ்வின் போது ஒருவரைப் பார்த்ததும், அவரது உடல்சார்ந்து அவரின் அனுமதி இல்லாமலே பேசுவது என்பது ஆலோசனை அல்ல. மேலும், தகவல்களாக தரப்படுபவை எல்லாம் ஆலோசனைகள் அல்ல.

அட! உங்க நண்பர் உங்கள் நட்பின் காரணமாக உங்கள் மீது அக்கறை கொண்டு சொல்வது ஆலோசனை இல்லையா?

உண்மைதாங்க. ஆலோசனைக் கூறுபவர் அக்கறையுடையவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில், ஆலோசனை பெறுபவர் அவர் மீது நம்பிக்கை கொண்டும் இருக்க வேண்டும்.
எதுதாங்க ஆலோசனை?

குடும்பத்தில் பெறோர்கள் குழந்தைகளுக்கும், மருத்துவர்கள் நோயாளிகளுக்கும், சட்ட வல்லுநர்கள் குற்றவாளிகளுக்கும், ஆசிரியர் மாணவர்களுக்கும் இடையே வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்கின்றது. சுருக்கமா சொன்னா ஆலோசனை என்பது அனைத்து வகையான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்தம் ஆகும்.

ஒரு மாணவன் புகைபிடிக்கிறான். அவனை ஆசிரியர் அழைத்து ஏண்டா புகைபிடிக்கிறே? புகைபிடித்தால் நுரையீரல் புற்று வந்து செத்துப் போயிடுவே. ஒழுங்க மத்த பசங்க மாதிரி ஒழுக்கமா நடந்துக்க எனக் கூறுவது ஆலோசனை தானே!

இல்லை.

அதாவது, ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ள பிரச்சனைகளை எடுத்துச்சொல்லி மனக்குறைகளை விசாலப்படுத்திக் கொள்வது ஆலோசனை. ஒருவர் மட்டுமே பேசுவது ஆலோசனை அல்ல.

அது சரியான வழிகாட்டுதலும் ஆகாது. ஆசிரியர் மாணவர் இருவரிடையே உள்ள உறவை இயக்கப் பயன்படுவது ஆலோசனை ஆகும்.

இன்று பதின்பருவ மாணவர்களில் பலரும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆசிரியர்கள் ஆலோசனை என்ற பெயரில் அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு சரியான ஆலோசனை வழங்குவதற்கான பயிற்சிக் கொடுக்க வேண்டும்.
பதின்பருவம் என்பது இரண்டான் கொட்ட பருவம் .நல்லது எது? கெட்டது எது? என்பதை அறியாத பருவம். பொதுவாக ஆசிரியர்கள் குழந்தைகளைப் பேச அனுமதிப்பது இல்லை.

குழந்தைகளைப் பேச அனுமதித்தால் தானே மனக்குமுறல்களை கொட்ட முயல்வார்கள். ஆசிரியர்களே பேசுபவர்களாக இருக்கின்றார்கள்.

ஒரு மாணவன் காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டான் என்றால், உடனே வகுப்பு ஆசிரியர் குறிப்பிட்ட அந்த மாணவனை அழைக்கின்றார். எதற்கு மதிப்பெண் குறைந்தது. நீ படிப்பது +2, இதுதான் உன் எதிர்காலத்தையே தீர்மானிப்பது. தேவையில்லாமல் கண்ட பசங்களுடன் சேர்வதை தவிர்த்துவிடு.

சினிமா பார்க்கக் கூடாது. முடிஞ்சா டியூசன் போய் படி என்பது போன்ற அறிவுரைகள், பரிந்துரைகள், சிபாரிசு கூறுவதையே காண முடியும்.

மதிப்பெண் குறைந்த மாணவனிடம் வேறு என்ன ஆலோசனைகளைச் சொல்லி விட முடியும்? இவை ஆலோசனைகள் அல்ல.

ஏன்?

அறிவுரைக் கூறுவதாகவும், பரிந்துரை கூறுவதாகவும் மற்றும் சிபாரிசு கூறுவதாகவும் இருப்பவை எல்லாம் ஆலோசனைகள் அல்ல.

” டேய்! +2 வில் நல்ல மார்க் எடுக்கலை நல்ல கோர்ஸ் கிடைக்காது. +2 தாண்ட எதிர்காலத்தைத் தீர்மானிப்பது. இதில் கோட்டை விட்டுவிட்டால் கல்லூரிக்கு போக முடியாது.

கல்லூரி படிக்கலைன்னா ஏதாவது ஒரு அடிமை வேலைக்கு ஆயிரம் இரண்டாயிரம் சம்பளத்துக்குதான் போக வேண்டும். ஆயிசுக்கும் கஷ்டப்பட வேண்டும். இப்ப மார்க் எடுக்கலைன்னா லைப்பே சூனியமாகிடும்” என கூறினால் ஆலோசனை ஆகுமா?

இதுவும் ஆலோசனை அல்ல. ஒரு மாணவனுடைய மதிப்பு, நடத்தை, நம்பிக்கை, ஆசை ஆகியவற்றை பயத்தின் அடிப்படையில் திணிக்க கூடாது. பயத்தை ஏற்படுத்துவதும் ஆலோசனை அல்ல.

கல்வியைப் பொறுத்தவரையில் நமது இலக்கை அடைவதற்கான லட்சியம் வழிகாட்டுதல் ஆகும். அதை அடைவதற்குரிய உத்திகளே ஆலோசனைகளாகும்.

முதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். அதேநேரத்தில் நம்பிக்கைக் கொண்டு உங்கள் எண்ணங்களைப் பகிரவும் தெரிந்திருக்க வேண்டும்.

மன அழுத்தம் நிறைந்த சூழலில் படிப்பில் கவனமின்மை நேருவது இயல்பு. தகாத பழக்க வழக்கங்களால் மனம் சிதறும். குடும்பத்தில் பெற்றோரிடையே ஏற்படும் பிரச்சனைகளாலும் குழந்தைகள் பாதிக்கப்படுவது இயல்பு . இத்தகைய சூழலில் மனநல ஆலோசனை மாணவனுக்கு அவசியம்.

ஆசிரியர்களில் பலரும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில்லை. ஆகவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வட்டார அளவில் மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர்கள் செயல்படுவதுபோல் மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் செயல்படுவது அவசியம்.

மேலும், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் குறித்த பயிற்சி தொடர்ந்து வழங்குதல் வேண்டும்.

க.சரவணன், தலைமையாசிரியர், மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *