ரயிலில் அன்ரிசர்வ் கோச் பயணம்

Share Button

அன்ரிசர்வ் கோச் பயணம் :

திடீர் பயணமாக தொலை தூரம் செல்லும் போது அன்ரிசர்வ் கோச் தான் ஆபத்பாந்தவனாக இருக்கும். இரவு நேரப் பயணம் எனில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழுத்தத்துடன் வண்டிக்கு காத்திருக்க வேண்டும்.

அறிவிப்பு செய்தவுடன் வாடிவாசலில் மாடு பிடிக்க காத்திருக்கும் வீரன் போல இடம் பிடிக்க ஒரு எல்லையற்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும். எப்படியும் பெட்டி செய்யும் போதே இடம் பிடித்தவர் போல ஒரு கும்பலே கூட்டமாய் வரும்.

அப்பிடியே பின்னால திரும்பிப் பார்த்தால் ஒரு ஊரே அந்த ஒத்தப் பெட்டிக்குத் தான் காத்திருக்கும்.

ஒரு வழியா வண்டி வரும் திசை நோக்கி அத்தனை பேரின் பார்வை செல்லும் போதே சுதாரிச்சு எழுந்து ரெடியா இருக்கனும். மாற்றித்திறனாளி, பெண்கள் பெட்டிகள் கடக்கும் போது ஆப்சண்ட் போட்டு… நம்ம பெட்டியை பார்த்தவுடன் பிரசண்ட் போட்டு இணைந்த கைகளில் வரும் அருண்பாண்டியன் போல ஓடனும்.

அப்பதான் ஆத்தாஹே, ஜாத்தாஹேனு இடையில் கொஞ்சம் இந்தி வாலாக்கள் வருவாங்க. அவிங்களை கொஞ்சம் லெப்டில் டீல் பன்னிட்டு ஒரு நதி போல ஓடிக் கொண்டிருக்கனும்.

ஒத்த பெட்டி முழுக்க காலியா இருக்கும். அப்பிடியே ஆனந்தம் பொங்கும் போது அது போஸ்ட் ஆபிஸ் பெட்டியாம். அதில் ஏறக்கூடாதாம். அடபோங்கப்பானு அடுத்த பெட்டிக்கு உள்ளே போனால்… உங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்குனு உட்கார்ந்திருப்பவர் நினைப்பார்.

கூகுளை விட கண்ணு வேகமா தேடும்… எங்காவது இடம் கிடைக்குமானு… ஒன்னுமேயில்லாத போது வல்லவனுக்கு நடைபாதையே உட்காரவழினு உட்கார்ந்திடனும். அப்பதான் அடுத்த ஸ்டேசன்ல சீட்ல இடம்கிடைக்க சீனியாரிட்டி வரும்.

தூக்கமே வா வா

ஒரு வழியா சீட்டு கிடைச்சதும் அமைதிப்படை அமாவாசை மாதிரி உட்கார்ந்திடனும். அப்பிடியே ஏறெடுத்துப் பார்த்தா எல்லாரும் ஏ.வி.எம். சரவணன் மாதிரி அட்டென்சல தூங்க ஆரம்பிச்சிருப்பாங்க.

வண்டியோட சத்தத்துக்கு ஏற்ப ‘ஆமா ராசா, அப்பிடித்தான்’ எனும் தாள இசையை ஒத்து அவங்க தலையாட்டல் இருக்கும். தோள் சாய தோழன் கிடைப்பது… தூங்க முடியாதவனுக்கு தான். இதில் கெஸ்ட் ரோல் மாதிரி அப்பப்ப தூங்கி விழுபவர் ஒன்று.

இன்னொன்று நாம என்னமோ அவங்க லவ்வர் மாதிரி உரிமையாய் தோளில் கிடப்போர் மற்றொன்று.

சிலர் கீழேயே பார்த்துக்கொண்டு பிரேக் டான்ஸ் ஆடுவது போல தூங்குவாங்க. கடவாய்க்கு முட்டுக் கொடுத்து தூங்கி சிலர் டொடக்குனு விழுந்து விழுந்து தூங்குவாங்க. சிலர் தலை நிற்காம பத்தாம் வாய்ப்பாடு சொல்லும் பாவ்லாவிலேயே தூங்குவாங்க.

சிலர் கார்ல கியர்போடுவது போல முன்னும் பின்னும் சைடும் என ஐந்துகியர் பொசிசனில் தூங்கி விழுவோர் தனிரகம். தெம்மாங்கு பாட்டில ஒரே ஸ்டெப் போடுவது போல, சிலர் ஒரே அளவில் தூங்கி விழுந்து எழுந்துருப்பாங்க.

கம்மல் அணியாத காதுகள் கூட உண்டு. ஆனால் ஹெட்செட் அணியாத காதுகள் இருக்காது. அப்பிடியே போன் பார்த்துட்டே சிலர் வருவாங்க. ஏப்பா உன் போன்ல எல்லாம் சார்ஜே குறையாதா.

இதில காலை நீட்டுவது ஆயக்கலைகளில் அடிசனல் கலை. பாம்பு புத்துக்குள் கையை விடுவது போல லாவகமாய் எதிர்ல இருப்பவர்கள் கால் படாமா காலை நீட்டி கபடி விளையாடனும். நல்லபடியா காலை நீட்டி விடுவது ஆப்போனண்ட் டீமில் போனஸ் லைனை தொட்டதுக்கு சமம்.

வருகவே எழுகவே

நிற்க கூட இடமில்லாத போது எல்லாரையும் தாண்டி கொண்டு கே.ஜி.எப் ராக்கி பாய் போல ஒருவன் அந்தக் கடைசியில் இருந்து தாண்டி தாண்டி ஒருத்தன் வருவான். பாத் ரூம் போக powerful people came from பக்கத்து பெட்டி பாஸ்.

அடுத்த ஸ்டேசன் வந்தவுடன் ஜோதியில் ஐக்கியமாக இன்னொரு கும்பல் வரும். நாலுசீட்டில உட்கார்ந்திருக்கு please move னு சொல்லி… ஷேர் ஆட்டோவில் சீட் கேட்டது போல் அடுத்து வந்து உட்காருவாங்க.

திடீர்னு கண்ணு முன்னால யாரோ ஒருவரின் கால் தொங்கும். நிமிர்ந்து பார்த்தா புன்னகை மன்னன் கமல் மாதிரி கீழே குதிக்க கவுண்டிங் கொடுத்திட்டு இருப்பான். ஒரு முடிவுக்கு வாப்பானு சொன்னதும் தான் மூவ்மெண்ட் கொடுப்பான்.

ஒரு வழியா ஊர் வந்தவுடன் கீழே விட்ட செருப்பை தேடுவது கொடுமை. ஒவ்வொரு காலிலும் ஆசிர்வாதம் வாங்கனும். வாக்கம் க்ளீனர் போட்டுத் துடைக்கும் போது காலிரண்டையும் தூக்கி கொள்வது போல் சிலரின் செய்கை இருக்கும்.

பயணக்களைப்பு இருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்களின் ஒவ்வொரு முகமும் ஒரு கதை சொல்லும். பிஸ்கட்டை ஒழிச்சு திங்கறவங்க, குடும்ப விசயத்தை கத்திப்பேசுவதும், கடன் கொடுத்தவரை ஒத்தைக்கு ஒத்தை வா னு கூப்பிடுவதும் நாம காது கொடுத்து கேட்கனும்.

கை ஒடிந்தவர், வீல் எனக் கத்தும் குழந்தை, இயலாதவர் என சமபேதம் காட்டுவதில் அன்ரிசர்வ் கோச்சின் பணி அளப்பரியது.

பயணம் ஒரு வித்தியாசமான உணர்வு, எப்பொழுதும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்…

– மணிகண்டபிரபு

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *