புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும்-3

Share Button

Allu Arjun : Pushpa The Rise

புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும் – 3 

மெர்சல் படத்தில் நடிகர் விஜய் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி அசைக்கும் காட்சி… சர்க்கார் படத்திலும் ஒரு முறை அப்படி கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் காட்டுவார்.

’இத்தரு அம்மாயிலதோ’ படத்தில் ‘கணபதி பப்பா மோரியா’ பாடலில் இடம் பெற்றுள்ள நடனத்தில் அல்லு அர்ஜுன் அப்படி செய்வார். அந்தக் காட்சியில், பார்வையாளர்களும் இதைச் செய்வார்கள். அந்த ஹிட் காட்சிதான் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ளது…

பத்ரி என்னும் தமிழ் படத்தில் விஜய் நடித்திருப்பார். பாடலும் நடனமும் சண்டைக்காட்சிகளும் இவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

இவர்கள் இருவருக்கும் நடனம், சண்டைக் காட்சிகளில் முழு அர்ப்பணிப்புணர்வுடனும் லயித்தும் ஈடுபடுதல் என சில ஒற்றுமைகள் இருக்கின்றன. உருவத் தோற்றமும் அப்படியே இருக்கும்படியாக தொடர்ந்து கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர்.

விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். விஜய் நடித்த, ‘பூவே உனக்காக’ வெற்றிப்படமானது. பிறகு இவருடைய வெற்றிப்பாதை ஏறுமுகத்தில் இருந்தது. 15 வருடங்களுக்கு முன்பே விஜய் இன்று இருக்கும் அளவில் ரசிகர்களைப் பெறுவார் என்பது கணிக்கப்பட்டது. இன்று உண்மையாகி இருக்கிறது.

அல்லு அர்ஜுன் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய எதிர்கால வெற்றியும் இப்போதே கணிக்கப்பட்டு விட்டது. இந்தக் கட்டுரையும் தமிழில் இப்போதைய வெற்றியோடு அந்த எதிர்கால வெற்றியையும் பதிவு செய்வதற்காக எழுதப்படுவதாகும்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு மேனரிசமாக கையை தாடைப் பகுதியில் லேசாக வருடுவதுபோல எடுத்துச் செல்லும் வகையில் காட்சி வரும்; புஷ்பாவில், ‘தக்கேதுலெ’ அப்படி ஒரு மேனரிசமாக வரும். ஒவ்வொரு படத்திலும், ‘தேவுடா’ என்று உச்சரிக்கும் போதும், அதற்குப் பின்னான அவருடைய முக பாவனையும் நம்மை சிரிக்க வைத்தே தீரும்.

அல்லு அர்ஜுன் தமிழில் தனக்குப் பிடித்த நடிகர்களாக தனுஷ், விஜய் சேதுபதி, விஜய் ஆகியோரைக் குறிப்பிடுவார்.

படங்களைப் பற்றியும், நடிப்பைப் பற்றியும் எத்தனை மாற்றுக் கருத்துகளோ, விமர்சனங்களோ இருந்தாலும், தமிழில் ரஜினியைப் போல அதிக வசூல் பெற்றுத் தரும் நாயகனாக இப்போதும் விஜய் இருக்கிறார்.

ஆனால், இன்னும் சிறு வயதிலேயே, இன்னும் அதிக வசூலைப் பெற்றுத் தரும், அதிக ரசிகர்களைப் பெற்றவராக அல்லு அர்ஜுன் இருக்கிறார். விஜயும், அல்லு அர்ஜுனும் ஜெயிக்கும் குதிரைகளாக இருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன் இதிலும் வேறுபட்டு, மத சர்ச்சை, அரசியல் சர்ச்சை என்று இல்லாமல், தன் படங்களில் இஸ்லாமிய ஆதரவு என்னும் கதைக்களனில் இன்னும் மேம்பட்டு விடுகிறார்.

விளையாட்டுத்தனமான விடலையாக இவரின் ஆரம்ப கட்டப் படங்கள் இருந்தாலும், ஒவ்வொரு படமாக நடிப்பில் முன்னேறி, மக்களுக்கான படமாக கொடுக்க ஆரம்பிக்கிறார். அவர் தெரிவு செய்வது மாஸ் படமாக இருக்க வேண்டும்; ஹிட் படமாக வெளிவரவேண்டும். இவை மட்டுமே அவருடைய கருத்தில் இருக்கிறது. இதை நோக்கிய பயணமாகவே தன்னை உருமாற்றிக்கொண்டார்.

ஆர்யா – 2004 இல் வெளிவந்த இந்த ஆர்யா படத்தின் கதையை ஒட்டிதான், தமிழில் தனுஷ் ஸ்ரேயா நடித்த ‘குட்டி’ படம் எடுக்கப்பட்டது.

ஹாப்பி – 2006 தமிழில் வெளிவந்த, ‘அழகிய தீயே’ படம் கதையை ஒட்டிய காட்சிகள் அமைந்த படம் இது. வேதம் – 2010 இல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த தெலுகு படம். இந்தப் படம் தான் தமிழில், ‘வானம்’ என்னும் பெயரில் சிலம்பரசன் நடித்து வெளி வந்த படமாகும்.

இஸ்லாமியர்களை சந்தேகத்தின் பேரில் காவல் துறை அடாவடி செய்யும், துன்புறுத்தும் அராஜகம், பிறகு வரும் காட்சிகளில் தீவிரவாதிகள் வேறு, சாதாரண இஸ்லாமிய மக்கள் நம் நாட்டையும், மக்களையும் நேசிப்பவர்கள் என்பது அருமையாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

அல்லு அர்ஜுன் நடித்து நான் பார்த்த முதல் படம் தமிழில் 2018 இல் வெளிவந்த, ‘என் பெயர் சூர்யா என் நாடு இந்தியா’ திரைப்படம்தான். ஏதோ ஒரு பண்டிகை நாளில் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு.

தந்தையின் மீதான கோபத்துடன் மகன் அல்லு அர்ஜுன் வீட்டை விட்டு வெளியேறி, இராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான். அங்கே ஒரு தீவிரவாதியை கோபத்தில் கொன்று விடுவதால் வெளியில் அனுப்பப் படுகிறான்.

பிறகு திரும்பி வந்து பணியில் மறுபடியும் சேர, அப்பா அர்ஜுன் கையெழுத்துக்காக காத்திருக்க வேண்டிய சூழலில் இருக்கிறான். அப்பா மீதான கோபத்துடன் அப்பாவின் கையெழுத்தே வேண்டாம் என்று முடிவெடுக்கிறான்.

பிறகு அனைத்து கல்லூரி மாணவர்களின் முன்னிலையில் அர்ஜுன் சொல்லும் சவாலை ஏற்றுக்கொள்கிறான். அதற்காக கோபம் மிகுந்த அந்த இளைஞன் கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும், மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியுடன் இருக்கவும் எடுத்துக்கொள்ளும் சிரமங்களை வெளிப்படுத்தும் காட்சிகளில் அல்லு அர்ஜுன் சிறந்த நடிப்பைக் கொடுத்திருப்பார்.

கோபத்தைக் கட்டுப்படுத்த கொலையைப் பார்த்தும் பேசாமல் இருந்து, அநியாயங்களுக்குக் கட்டுப்படும் தன்னைத் தானே வெறுத்து, தன்னை ஆதர்சமாக நினைக்கும் காவலரைப் பார்க்கும்போது கூனிக்குறுகிப் போய் தன்னை மீட்டெடுக்கப் பார்க்கிறார்.

இஸ்லாமிய குடும்பத்தைக் காக்க, இந்தப் படத்தின் இறுதியில் இவர் எடுக்கும் முடிவு அவ்வளவு கச்சிதமான வரவேற்பைப் பெறும். சாருஹாஸன் இஸ்லாமியராக அப்பாவிப் பெரியவராக வந்திருப்பார்.

எப்படி சமூகத்தில் சிறுபான்மையினரை தவறாகக் காட்டுகிறார்கள், அதை அல்லு அர்ஜுன் எப்படி சரி செய்கிறார் என்பது சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அம்மாவாக வரும் நதியாவுக்கும், வில்லனாக வரும் சரத்குமாருக்கும் சில அழுத்தமான காட்சிகள் போதவில்லை. தந்தை அர்ஜுனும், மகன் அல்லு அர்ஜுனும் அவ்வப்போது மோதிக்கொண்டு கதையை நகர்த்திச் செல்வார்கள்.

அம்மாவுக்காக மருந்து வாங்கிவரும் காட்சியும், எந்த சூழலிலும் தான்தான் மகன் என்று தாயிடம் வெளிப்படுத்தாமலும் சிறந்த நடிப்பைத் தந்திருப்பார். தாய்க்கு இது தெரியும் போது அப்படியே மகனின் மீதான கோபத்தை நதியா பாசத்துடன் வெளிப்படுத்தும் காட்சியும் அருமையாக இருக்கும்.

இந்த இரண்டு படங்களும் ஒரு மதிப்பை ஏற்படுத்தியது. இந்தக் காரணத்தால், என் பெயர் சூர்யா படமும், வேதம் படமும், தனித்துவமாக இருந்தன. ஆனால் இது வசூல் ரீதியாக வெற்றிப்படமல்ல என்பது அல்லு அர்ஜுனின் எண்ணம் போலும்.

இந்தப் படத்தில் இவரின் இடது கண் புருவத்தில் ஒரு வெட்டு தெரியும். அந்த இடத்தில் புருவ முடி வளர்ந்திருக்காது. இப்போது இது எதற்கு என்று கேள்வி வருகிறதா? இதை எழுதிக் கொண்டிருக்கும் இவளுக்கும் இடது பக்க புருவத்தில் அந்த இடத்தில் ஒரு வெட்டு இருக்கும்.

அந்த இடத்தில் புருவமுடி வளராது. சரி சரி இதோ நிறுத்தியாச்சு. கட்டுரை தொடர்கிறது.
இதற்குப் பிறகே, ‘அலா வைகுந்தமுலோ’ படம் பார்த்தேன். தெலுங்கில் ஒருமுறை தமிழில் இருமுறை பார்த்த படம் இது. இதை விரிவாகப் பின்னர் பார்க்கலாம்.

இந்த மூன்று படங்களுக்குப் பிறகு தான் ஒவ்வொரு படமாக பார்க்க ஆரம்பித்து அனைத்து படங்களையும் பார்த்து முடித்தது.

என் தாத்தாவின் அண்ணாவுடைய பேரன், என் அண்ணா ராஜேந்திர ராஜா. அவரும் அண்ணி லலிதாவும் குழந்தைகளுடன் மும்பையில் வசிக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அண்ணி எப்போதும் போல் தன் தந்தையை மும்பைக்கு அழைத்துப் போயிருந்தார்.

ஒரு நாள் வெளியில் தனியாக நடந்துபோனபோது, எங்கோ பாதை மாறி வேறெங்கோ போய்விட்டார். அவருக்கு ஹிந்தி மொழி பேசவும் தெரியாது. எல்லோரும் பதட்டமாகி தேடத் தொடங்கினார்கள்.

உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்றும் ஒவ்வொரு ஏரியாவாகவும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. எப்படியே அண்ணனின் சின்ன மகன் தினேஷ் அவரைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்த பிறகே அனைவருக்கும் உயிரே வந்தது.

அன்றைக்கு தினேஷ்க்கு அனைவரும் நன்றி சொல்லி பாராட்டினார்கள். அத்தனை மகிழ்வை அளித்தவன். தினேஷ், அல்லு அர்ஜுன் ஜாடையில் இருப்பான். அப்படி தான் அல்லு அர்ஜுன் நம் குடும்பத்தில் ஒருவரைப் போல் இருப்பார்.

நமக்கான தவிப்பையும், மக்களுக்கான மகிழ்வையும் அவர் தன் கரங்களை அசைத்து மாயமாக்கிக் காட்டுகிறார். இவர் நடிகர் தான். இவர் நடிக்கும் இது திரைப்படம் தான், இது நிழல் வெளிதான், இது மாயை தான் என்பதை அறிந்தே இருக்கிறோம்.

ஆனால், மற்றவர்களிடமிருந்து அல்லு அர்ஜுன் வேறுபட்டு உயரும் இடங்களைப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அதைப் பார்ப்போம்.

ஆர்வம், விடாமுயற்சி, தனித்திறன், ஆளுமை இவற்றோடு வாய்ப்பும் இணைந்து வந்திருந்தாலும் இவர் திரைப்படத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பது, அர்ப்பணிப்பு உணர்வு, குடும்பத்துடன் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கான நேரம் ஒதுக்குவது, மேடைப் பேச்சிலும் சமூக நலன் சார்ந்த கருத்துகளைப் பேசுவது என்று ஒவ்வொன்றிலும் சிறு வயதிலேயே கவனம் சற்றும் சிதறாமல் ஒருமுகத்தன்மையுடன் இருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல.

படத்தின் வெற்றியோ, பண வரவோ, புகழோ அவரை சிறிதும் மாற்றவில்லை. இது மிகவும் அபூர்வமான விஷயம். தலைக்கனம் இல்லாமல், தன்னைப் பற்றிய ஈகோ இல்லாமல், தானும் மகிழ்வாக இருந்து, தன்னைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது அன்பு மனம் கொண்ட சிலருக்கே சாத்தியம்.

மனதை அப்படி மாசு படிந்துவிடாமல் தாங்கள் அறியாமலேயே தாமாகவே சரி செய்துகொண்டு குழந்தை மனதுடன் இருப்பது சிலருக்கே வாய்க்கும். அப்படி இளம் வயதிலேயே இப்படியொரு மெசூரிட்டி, அனுபவம் பெற்ற குழந்தை உள்ளத்துக்கு சொந்தக்காரர்.

ஒவ்வொரு விழா மேடையிலும், தனது உறவினரான சிரஞ்சீவியைப் பற்றிக்கூறி கொண்டாடுவதாகட்டும், அந்த அந்த படத்தின் சக கலைஞர்களைக் குறிப்பிட்டுப் பேசுவதிலாகட்டும் அலாதியான சுவையுடன் சுருக்கமாக கச்சிதமாகப் பேசுவார்.

மைக்கை கையில் பிடித்துக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டு பேசி, பிறகு பார்வையாளர்களைப் பார்த்துப் பேசும் பாணி அவருடையது.

பன்னி Bunny என்றும் மலையாள ரசிகர்களிடையே மல்லு அர்ஜுன் என்றும் பிரியமாக அழைக்கப்படும் இவருக்கு, நேரடி மலையாளப் படத்தில் நடிக்கும் விருப்பம் இருந்தாலும், தமிழில் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்பதும் தமிழர்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்பதும் இவருடைய நீண்ட நாள் கனவு விருப்பமாகும். புஷ்பா வெளியீட்டு நிகழ்வில் இதை வெளிப்படுத்தி இருப்பார்.

இவரின் பேச்சில், உடன் பணிபுரிந்த ஒவ்வொருவரின் மீதான அன்பும் கரிசனமும் உண்மையாக ஆத்மார்த்தமாக வெளிப்படையாகப் பேசும்போது ரசிகர்களை இன்னும் அவரை நோக்கி ஈர்க்கும்.

அதிலும் ரசிகர்களுக்கு, சிறு விஷயங்களை நம் வாழ்வில் எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிவுரையாக சொல்லாமல், பஞ்ச் வாக்கியங்களாக சொல்லாமல், தன் வாழ்வில் நடக்கும் சின்ன நிகழ்வுகளைச் சொல்லி, இந்தத் தவறை செய்துவிடக் கூடாது என்று, நம் வாழ்வில் எப்படி நாம் நடக்க வேண்டும் என்பதை நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது போல பேசுவார்.

உதாரணத்துக்கு, காரில் சீட் பெல்ட் போடவேண்டும் என்பதையும், ஒன் வே என்றால், இரண்டு அடி தூரம் மட்டும்தானே என்றாலும் அதில் போகாமல் இரண்டு கிலோமீட்டர் சுற்றி ஏன் வர வேண்டும் என்பதை நிதானமாக விவரிப்பார்.

குடித்தால் கார் ஏன் ஓட்டக்கூடாது? நம்மால் நமக்கு மட்டும் அல்ல, விபத்து எனும்போது மற்றவர்களுக்கும் பாதிப்பு இருக்கும் என்பதை ஐந்து நிமிடங்களில் மனதுக்குள் விதைக்கும் அந்த பண்பு பாராட்டப்பட வேண்டிய பண்பு.

யூட்யூபில் அதைப் பார்க்கும்போது, அவர் ஒவ்வொன்றாக சொல்லச்சொல்ல அவர் கார் மோதி, முன்னால் நிறுத்தப்பட்ட காரில் கர்ப்பிணிப்பெண் இருந்தார் என்பதைக் கேட்கும்போது, திக்கென்று இருக்கும்.

இப்படி வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ளும் போது இன்னும் பார்வையாளர்களுடன் நெருக்கமாகி விடுகிறார். அவரும் நெகிழ்ந்து போகும் விஷயங்களையும் பார்ப்போம்….

தொடரும்…

அன்புடன்,

மதுமிதா
18.04.2022

 

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *