ஒரு கொரோனா பிணம் பேசுகிறது இப்படி
ஒரு கொரோனா பிணம் பேசுகிறது இப்படி…
மார்பில் முகம் புதைச்சு
மண்டியிட்டு அழுதிடவே
மடியில் முகம் புதைச்ச
மனைவி நீ வரவில்ல…
காலிரண்டக் கட்டிக் கொண்டு
கண்ணீர்விட்டுக் கதறிடவோ
கண்ணுக்குக் கண்ணான
கண்மணிகள் வரவில்ல…
சங்கூதிக் கொண்டு செல்ல
சாதிசனம் வரவில்ல
எங்கூரு சொந்தம் கூட
எழவு கேக்க வரவில்ல…
பூமால போட்டனுப்பப்
பொதுமக்கள் யாருமில்ல
யார்மேல குத்தஞ் சொல்ல
முன்னப்போல ஊருமில்ல…
பந்தலுக்குள் படுத்துறங்கும்
பாக்கியம் நான் செய்யவில்ல
சொந்த பந்தம் தூக்கிச் செல்லும்
சொந்தங்கூட வாய்க்கவில்ல…
பறையில்ல பாடையில்ல
பக்கத்துல யாருமில்ல
ஒத்தையில ஒன்ன விட்டு
ஒம்புருசன் போறம்புள்ள…
நாதியத்தப் பொணமாக
நான் கெடக்கேன் சுவரோரம்
பாதியில உன்னவிட்ட
பாரந்தான் மனசோரம்…
உன்னவிட்டு நான் போறேன்
உம்மனசத் தேத்திக்கோடி
என்ன நல்லாப் பாத்தது போல்
பிள்ளைகளப் பாத்துக்கோடி…
வெளியதெரு சுத்தாம
வீட்டுலயே இருக்கச் சொல்லு
வெளிய போயி ஆகனுன்னா
ரெண்டு மாஸ்கப் போடச் சொல்லு…
ஆவி புடிக்கச் சொல்லு
கபசுரத்தக் குடிக்கச் சொல்லு
பாவி நான் சொன்னதுபோல்
பத்திரமா இருக்கச் சொல்லு…
என்னோட முடியட்டும்
இப்படியோர் இழிசாவு
யாருக்கும் வரவேணாம்
இப்படியோர் இழிநோவு…
– சதிஷ்குமார், அரக்கோணம்.
Leave a Reply